நன்றி மறப்பது நன்றன்று என்பார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். தமிழ்த்தெய்வமான முருகப்பெருமானும் நன்றி மறவாமல் தன்னை வளர்த்த கார்த்திகைப் பெண்களைப் போற்றும் நாள் திருக்கார்த்திகைத் திருநாள். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் கிளம்பின. அப்பொறிகளை கங்கை தாங்கிக் கொண்டாள். ஆறு தாமரைகளில் ஆறு குழந்தைகளாக முருகப்பெருமான் அவதரித்தார். மகாவிஷ்ணு அப்பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும்படி கார்த்திகைப்பெண்கள் ஆறுபேருக்கு கட்டளையிட்டார். அவர்கள் ஆறுபிள்ளைகளுக்கும் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இதனால் அவர்கள் ஒரே நட்சத்திரமாக மாற்றப்பட்டு வானமண்டலத்தில் இடம் பிடித்தனர். இந்த நட்சத்திர நாளில் தன்னை வழிபட்டால் எல்லா வரங்களும் தந்தருள்வதாக குழந்தை முருகன் வரம் அளித்தார். முருகனுக்குரிய ஜென்ம நட்சத்திரம் விசாகம். ஆனால், அந்த நட்சத்திரத்தில் மாதவிரதம் மேற்கொள்ளும் வழக்கமில்லை. கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகனுக்கு அபிஷேக ஆராதனைகளும், விரதமும் மேற்கொள்வதில் இருந்து நன்றி மறவாத நாயகன் முருகன் என்பதை உணர முடிகிறது.