அருணாசலேஸ்வரர் கோவில் வளாகம் வண்ண மலர்களால் அலங்கரிப்பு
பதிவு செய்த நாள்
29
நவ 2020 05:11
திருவண்ணாமலை: தீப திருவிழாவை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவில், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கண்கொள்ளா காட்சியாக உள்ளது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலின் தீப திருவிழாவின் மஹா தீபம் இன்று ஏற்றப்பட உள்ளது. இதை முன்னிட்டு, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர்களான அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் மற்றும் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. சுவாமி கருவறை முன்பு, இன்று காலை, 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. விழாவை முன்னிட்டு கோவிலில், முதல் பிரகாரம், இரண்டாம் பிரகாரம், மூன்றாம் பிரகாரம் மற்றும் தீப தரிசன மண்டபம், ஆகியவற்றில் வண்ண மின்விளக்குகள் மற்றும் வண்ண மலர்களால், அலங்கரிக்கப்பட்டு கண்கொள்ளா காட்சியாக உள்ளது. அலங்காரத்துக்காக ஒரு டன் மலர்கள் பயன்படுத்தப்பட்டு, பூத்தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில், மஞ்சள், வெள்ளை, சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வண்ண சாமந்தி பூக்கள் மற்றும் ரோஜா மலர்கள் பயன்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.
|