பதிவு செய்த நாள்
10
டிச
2020
02:12
சென்னை:அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கோவில்களில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, கமிஷனர் பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்து, 652 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில், காலி பணியிடங்கள் அதிகம் உள்ளன.நிர்வாக வசதிக்காக, கோவில்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, அரசின் உத்தரவுப்படி, காலிப் பணியிடங்களை நிரப்ப, அறநிலையத் துறை கமிஷனர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவில், அவர் கூறியிருப்பதாவது:அத்தியாவசிய தேவை அறிந்து, அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் உள்ள காலிப் பணியிடங்களை, கோவில் நிதிக்கு இழப்பு ஏற்படாத வகையில், பணியாளர்களை நியமித்துக் கொள்ளலாம். கோவிலுக்கான உச்சவரம்பு மிகாமல் பணி நியமனம்; பணியாளர் சம்பளம் இருக்க வேண்டும். அதை உறுதி செய்த பிறகே, காலி பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலுக்கு அவசியமான, தவிர்க்க முடியாத பணியிடங்களை நிறைவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.