மரணத் தருவாயில் மாவீரன் அலெக்சாண்டர் தன் படைத் தளபதிகளை அழைத்து மூன்று விருப்பங்களைத் தெரிவித்தார். ‘‘என் சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்களே துாக்கிச் செல்ல வேண்டும். நான் சேர்த்த பணம், தங்கம், விலை உயர்ந்த கற்களை இறுதி ஊர்வலத்தின் போது பாதையில் வீசிச் செல்ல வேண்டும். என் கைகள் சவப்பெட்டியின் வெளியில் தொங்கியபடி இருக்க வேண்டும்’’ இதைக் கேட்ட தளபதி ஒருவர் ஆச்சரியமாக பார்த்தார். அதற்கான காரணத்தையும் அலெக்சாண்டர் தெரிவித்தார். ‘‘யாராலும் சாவை தடுக்க முடியாது என்பதை உலகிற்கு தெரியப்படுத்துங்கள்’’ ‘‘இந்த மண்ணில் சேகரித்த பொருட்கள் அனைத்தும் பூமிக்கே சொந்தமானவை’’ ‘‘வெறும் கையுடன் வந்த நான் வெறும் கையுடன் போவதை உலகம் பார்க்க வேண்டும்’’ என்றார். உண்மை புரியாமல் வாழ்வில் மனிதர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என பிறரை ஏளனமாக மதிப்பிடுகின்றனர். அடுத்தவர் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுவதும், ஒருவருக்கொருவர் பகைமையை வளர்ப்பதும் கூடாது. ‘‘தாயின் கருவில் இருந்து நிர்வாணமாக வந்தான்; வந்தது போல நிர்வாணமாகத் திரும்பிப் போவான்; எதையும் கையிலே எடுத்துச் செல்வதில்லை’’