எளிய கிராமத்து மனிதர் ஒருவர் காஞ்சி மகாபெரியவரை தரிசிக்க சங்கர மடத்திற்கு வந்தார். ‘‘ நமஸ்காரம் சுவாமி! பல தலைமுறைகளாக நாங்க ஜோசியம் சொல்லிப் பிழைக்கிற குடும்பம். என் தாத்தா, என் அப்பா வழியில் நானும் எனக்குத் தெரிந்த முறையில் ஜோசியம் பார்த்து பிழைப்பு நடத்துகிறேன். எனக்கு ஜோதிட ஞானம் எல்லாம் பெரிதாக கிடையாது. நல்ல நாள் கேட்டு வருவோரின் ராசி, நட்சத்திரத்திற்கு ஏற்ப நாள் குறித்துக் கொடுப்பேன். திருமண பொருத்தம் பார்த்து முகூர்த்தத்திற்கு நாள் குறிப்பேன். அவ்வளவுதான். சுவாமி. உங்களிடம் ஒரு வேண்டுகோள் கேட்ட ஆசைப்படுகிறேன் சுவாமி’’ ‘‘சொல்லு’’ என்றார் மகாபெரியவர். ‘‘ சில புத்தகங்களைப் படிச்சு கொஞ்சம் ஜோசியம் தெரிஞ்சு வெச்சிருக்கேன். அந்த ஞானம் போதாதுன்னு நல்லாவே தெரியும். ஜோசியம் சொல்ல வாக்குப்பலிதம் அவசியம்வேணுமே? நல்ல நாள் குறிச்சுக் கொடுத்தா, அதில நல்லது நடக்கணுமே? வாக்குப் பலிதம் இருந்தாத்தானே இது சாத்தியமாகும்? வாக்குப் பலிதம் கிடைக்க என்ன செய்யணும்?` கனிவுடன் பார்த்தபடி, ‘‘நான் ரெண்டு பாட்டு சொல்றேன். எழுதிக்கோ. ஜோசியம் பாக்கத் தொடங்கறதுக்கு முன்னாடி, ‘‘உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே’’ இந்த பாட்டை மனதிற்குள் சொல்லி கடவுளை பிரார்த்தனை பண்ணிக்கோ. அப்புறம் ஜோசியம் சொல்லத் தொடங்கு. சொல்லி முடிந்ததும், ‘‘நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம் வீடியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும் நீடிய அரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை சூடிய சிலை இராமன் தோள்வலி கூறு வார்க்கே’’ என்னும் பாட்டைச் சொல்லி ஸ்ரீராமனைப் பிரார்த்தனை பண்ணிக்கோ. நிச்சயம் நீ நினைச்சது நடக்கும். சொன்னது பலிக்கும்’’ ‘‘சுவாமி! இந்த பாட்டுக்களை யார் எழுதினது?’’ ‘‘இப்ப நான் சொல்லச் சொல்ல நீ தானே கண் முன்னே எழுதினே!’’ என்று சிரித்தார் மகாபெரியவா. ‘‘ கம்பர் எழுதிய பாடல்கள். மனத்துாய்மையுடன் இதை பாடுபவருக்கு ஸ்ரீராமர், கம்பரின் அருளால் வாக்குப் பலிதம் உண்டாகும்’’ என்று சொல்லி குங்குமப் பிரசாதம் கொடுத்தார். ஜோதிடர் பிரசாதத்தைக் கண்ணில் ஒற்றியபடி மனநிறைவுடன் புறப்பட்டார்.