Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரம வைவர்த்த புராணம் பகுதி-1
முதல் பக்கம் » பிரம வைவர்த்த புராணம்
பிரம வைவர்த்த புராணம் பகுதி-2
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 மே
2012
03:05

18. லக்ஷ்மி கடாக்ஷம்

இப்புராணம் ஸ்ரீலக்ஷ்மியைப் பற்றியும் கூறுகிறது. சிருஷ்டியின் போது கிருஷ்ணன் இடது பக்கத்திலிருந்து ஓர் அழகிய தேவி தோன்றி இரண்டு பகுதியாகி இடப்புறம் உள்ளது மகாலக்ஷ்மியாகவும், வலப்புறம் உள்ளது ராதிகாவாகவும் சிருஷ்டி ஆயின. கிருஷ்ணன் இடதுபக்கத்திலிருந்து நான்கு கரங்கள் கொண்ட நாராயணனும், வலப்புறத்திலிருந்து இருகரங்களும் தோன்ற நாராயணன் லக்ஷ்மியையும், கிருஷ்ணன் ராதையையும் மனைவியாக்கிக் கொண்டனர். மகாலக்ஷ்மி சொர்க்கத்தில் சொர்க்கலக்ஷ்மி என்றும், மன்னர்களிடம் ராஜ்யலக்ஷ்மி, இல்லங்களில் கிரகலக்ஷ்மி என்றும் பலவாறு பெயர்கள் பெற்றாள். பிரம்மா, விஷ்ணு, மனுவால் பூசிக்கப்படுகிறார். சூரிய, சந்திர மண்டலங்களில் பாலில், தானியங்களில், உடைகளில் சந்தனம், நகைகள், தூய இடங்கள், இல்லங்களில், பூமாலைகளில் மங்கல கலசங்களில் அவளைக் காணலாம்.

இந்திரன் லக்ஷ்மியைப் பூசித்தல்

ஒரு சமயம் கோபம் நிறைந்த துர்வாசன் விஷ்ணுவிடமிருந்து ஒரு பாரிஜாத மாலையைப் பெற்றார். அதனை இந்திரனுக்கு அளிக்க குடிபோதையில் இருந்த அவன் அம்மலரை யானையின் தலைமீது வைத்தான். மலர் பரிசை கவுரவிக்காமல் உதாசீனம் செய்த இந்திரன் செயல் பிரம்மஹத்தி தோஷத்துக்குச் சமமானது. இதனால் கோபம் கொண்ட முனிவர் லக்ஷ்மி (செல்வம்) அவனை விட்டு அகலுமாறு, யானை (ஐராவதம்) தலை வெட்டப்பட்டு சிவன் மகனின் தலையாகும் என்றும் சபித்தார். இந்திரன் துர்வாசரை வணங்கித் தன்னை மன்னித்தருளுமாறு வேண்டிட அவரும் மனம் குளிர்ந்து விஷ்ணுவின் பெருமை பற்றி விவரித்தார். முனிவரின் சாபப்பலனாக எல்லாவற்றையும் இழந்த இந்திரன் பிரகஸ்பதியுடன் பிரம்மனிடம் சென்று வேண்டிட, அவர் அனைவரையும் விஷ்ணுவிடம் அழைத்துச் சென்றார்.

லக்ஷ்மி வாசம்

விஷ்ணு, இந்திரன் இழந்த செல்வங்களை மறுபடியும் அடைவான் என்று கூறியதுடன், எவ்வாறெல்லாம் செல்வம் இழக்கப்படும் (அ) லக்ஷ்மி இல்லாது போவாள் என்று கூறினார். துளசிச் செடி இல்லாத வீடு, சங்கு ஒலிக்காத வீடு, சாலக்கிராமம் பூசிக்கப்படாத இல்லம், விஷ்ணு பக்தர்களைப் பழிக்கும் கிரகம், பிராமணருக்கு உணவளிக்காத மனை, விருந்தினரை வரவேற்று உபசரிக்காத இல்லம் போன்ற இடங்களை லக்ஷ்மி நாட மறுப்பாள். சமயச் சடங்குகள் செய்யாத அந்தணன், விஷ்ணுவை பூசிக்காதவர், பிராமணர்களுக்கு மரியாதை அளிக்காமல், மற்றவர்களுக்கு சேவை செய்பவர்கள் ஆகியோர் வீட்டை விட்டு லக்ஷ்மி விலகி விடுவாள் என்றார்.

அமுத மதனம், லக்ஷ்மி தோற்றம்

பிறகு பிரம்மாவிடம் நாராயணன் தேவர்களைக் கொண்டு அமுதம் கடைய தேவவைத்தியர் தன்வந்திரி, உச்சைச்வரக் குதிரை, ஐராவதம் என்னும் யானை, சுதர்சன சக்கரம் போன்றவையுடன் இறுதியில் ஸ்ரீலக்ஷ்மியும் தோன்றினார். (அமுத மதனம் பற்றிப் புராணங்கள் மாறுபட்ட சிறு சிறு செய்திகளைத் தருகின்றன) ஸ்ரீலக்ஷ்மி தோன்றியவுடன் வனமாலை கொண்டு விஷ்ணுவுக்கு மாலை இட்டாள். அதனால் விஷ்ணு வனமாலி எனப்படுகிறார். சிவன், இந்திரன் மற்ற தேவர்கள் லக்ஷ்மி தேவியைத் துதி செய்தனர். ஸ்ரீலக்ஷ்மிக்கு சந்தனம், பாரிஜாத புஷ்பம் மேலும் பல மங்கலப் பொருள்கள் அளிக்கப்பட்டன. விசுவகர்மா நவரத்தின ஆசனம் அளித்தார். கங்கை நீர், மலர்கள், சந்தனம், சங்கில் புனிதப்புற்கள், தூபம், தீபம், அன்னம், சர்க்கரை, நெய், பால், வெற்றிலை, கருப்பஞ்சாறு, பட்டாடை ஆபரணங்கள் அளிக்கப்பட்டன. தேவர்களுக்கு வரங்கள் தந்து ஸ்ரீலக்ஷ்மி விஷ்ணுவின் மடியில் அமர்ந்தாள்.

கணேசர் உருவாதல்

ஐராவதத்தின் தலைமீது பாரிஜாதம் வைக்க அது புனிதமாகியது. அன்று முதல் அனைவரும் கணேசரை எல்லாவற்றிலும் முதன் முதலாகப் பூசிக்க வேண்டுமென்று ஆணையிட்டார். சனியின் சாபத்தால் சிவ, பார்வதி மகனாகத் தோன்றிய கணேசரின் தலை வெட்டப்பட்ட, ஐராவதத்தின் தலை பொருத்தப்பட்டு உருவான கணேசர் கடவுளர்களுக்கெல்லாம் முதல் கடவுளாகத் துதிக்கப்படுகிறார்.

19. ராதாகிருஷ்ணன் ராதையைப் பூசித்தல்

கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று ராதையைப் பூசிக்க வேண்டும். மலர்கள், தூபம், தீபம், கந்தம், ஆபரணம், பழங்கள், இனிப்புகளுடன் பதினாறு பொருள்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ராதையின் பேரை முதலில் சேர்த்து ராதா கிருஷ்ணா, இராதா-மாதவா என்று உச்சரித்துப் பூசிக்க வேண்டும். சந்தனம், குங்குமம், பெற்று மந்தஹாச முகத்துடன், அழகாக முடிந்த கூந்தல், கை, கால்கள், விரல்கள் முழுவதும் ஆபரணங்களுடன் அவள் காட்சி தருவாள். வராக கல்பத்தில் ராதை கோகுலத்தில் விருஷபானு, கலாவதி தம்பதியர்க்குத் திருமகளாய்த் தோன்றினாள். வைசியர்களான அவர்கள் அவளை ராயனன் என்ற வைசியனுக்கு மணமுடிக்க முனைந்த போது அவள் தன் நிழலை அங்கு விட்டு விட்டு கோலோகத்திக்குத் திரும்பி வந்து விட்டாள். நிழலுக்கும் ராயனனுக்கும் திருமணம் நடந்தது. பன்னிரண்டு வயதான ராதையின் நிழலுக்கே விவாகம் நடந்தது. அதன் பின் பதினான்கு ஆண்டுகள் கழிந்து கோகுலத்தில் கிருஷ்ணன் பிறந்தான். நந்தகோபர் மனைவி யசோதையின் சகோதரனே ராயனன். அவன் கிருஷ்ணனுக்குத் தாய்மாமன்.

கிருஷ்ணன், ராதை கோகுலத்தில் சிலகாலம் வாழ்ந்து பிறகு பிரிந்தனர். கோகுலத்தில் ஒருநாள் கிருஷ்ணன் விரஜா என்பவளுடன் ஆடிக்கொண்டிருக்கையில் அதுபற்றி கேள்விப்பட்ட ராதை தேரேறி அவனிடம் விரைந்தாள். அவளிடம் பொறாமை, கோபம் குடிகொண்டிருந்தது. இதுபற்றி கிருஷ்ணனின் தோழன் சுதாமன், கிருஷ்ணனை எச்சரித்தான். எல்லோரும் ஓடிவிட விரஜா மட்டும் தற்கொலை செய்து கொண்டாள். கோலோகத்தைச் சுற்றி விரஜா ஒரு நதியானாள். அவள் தோழிகள் அதன் உபநதிகள் ஆயினர். கிருஷ்ணனோ, விரஜாவோ இல்லாதது கண்ட ராதை தன் இருப்பிடம் திரும்பினாள். கிருஷ்ணன், சுதாமனைக் கண்டவுடன் ராதை கண்டவாறு ஏசினாள். இதனால் கோபம் கொண்ட சுதாமா ராதையைத் திருப்பித் திட்டினான். கிருஷ்ணன் எதிரில் அவமானப்பட்ட ராதை சுதாமனை அசுரனாகும்படி சாபம் கொடுத்தாள். உடனே சுதாமனும் அவளை இடைக்குலத்தில் பிறந்து கிருஷ்ணனைப் பிரிந்து அவதிப்பட வேண்டுமென்று சபித்தான்.

சாபம் தீர்ந்த பிறகு அனைவரும் கோலோகம் அடைந்தனர். ராதையைப் பூசிப்பதால் துரதிருஷ்டங்களும், உடல் நலக்குறைவும் நீங்கும். சுயஜனன் என்ற மன்னன் ஒரு சமயம் சுதபாசன் என்ற அந்தணணால் சபிக்கப்பட்டான். உன்னை லக்ஷ்மி விட்டுச் செல்வாள். உன் இராஜ்ஜியத்தை இழப்பாய். மந்த புத்தியுடன் தொழுநோயால் பாதிக்கப்படுவாய் என்று பிராமணன் சபித்தான். மன்னன் மன்னிப்பு வேண்ட சுதபாசன் என்னும் அந்த அந்தணன் ராதையைப் பூசித்து சாப நிவாரணம் பெறுமாறு கூறிட மன்னன் அவ்வாறே செய்து தொல்லைகள் நீங்கப் பெற்றான்.

20. துர்க்கையும், துர்க்கை வழிபாடும்

துர்க்கை என்ற பெயர், அவள் அதே பெயர் கொண்ட அரக்கனைக் கொன்றதால் ஆகும். மேலும் பல அரக்கர்களையும் அவள் கொன்றிருக்கிறாள். தேவர்களும், மற்ற கடவுளர்களும் பலவித ஆயுதங்களை அளித்தனர். மற்றும் அவர்களுடைய சக்தியெல்லாம் இணைந்தே அவள் வடிவெடுத்தாள். அவள் அசுரர்களை அழித்து தேவர்களைக் காத்தாள். துர்க்கை சிவபெருமானின் மனைவி. எனவே சிவை என்ற பெயரும் அவளுக்கு உண்டு. நாராயணன் சக்தியும் பெற்றிருப்பதால் அவள் நாராயணி எனப்படுகிறாள். விஷ்ணுவால் தோற்றுவிக்கப்பட்டவள் எனவே வைஷ்ணவி என அழைக்கப்படுகிறாள். விஷ்ணு மாயை என்ற பெயரும் கொண்டுள்ளாள். மேலும் அவளுக்குப் பல பெயர்கள் உண்டு. இஷானி, சத்தியை, நித்தியை, சனாதனி, பகவதி, சர்வாணி, சர்வமங்கள, அம்பிகை, கவுரி, பார்வதி ஆகியவை. கிருஷ்ணனே துர்க்கையைப் பூசிக்கிறான். பிரம்மா, சிவன் மற்றும் இந்திராதி தேவர்களும் அவளைத் துதிக்கின்றனர். மற்றொரு கல்பத்தில் மன்னன் சுரதனும், வைசிய சமாதியும் அவளைப் பூசித்தனர்.

நந்தி மன்னன், சுரதா மன்னனை நாட்டை விட்டே விரட்டிவிட்டான். அவன் குதிரை மீது அமர்ந்து நாட்டை விட்டு ஓடினான். புஷ்பரத்ரா என்னும் ஆறு பாய்கின்ற காட்டை அடைந்தான். ஆற்றங்கரையில் மன்னன் சுரதா, சமாதி என்ற வைசியனைக் கண்டான். சமாதியை அவன் மனைவி மக்கள் வீட்டை விட்டு துரத்தி விட்டனர். சுரதாவும், சமாதியும் இணைந்து பயணம் செய்து புஷ்கர தீர்த்தத்தை அடைந்தனர். அங்கே மேதஸ் என்ற முனிவரைக் கண்டனர். துர்க்கையைப் பூசை செய்யுமாறு அவர் அறிவுரை தந்தார். நெடுநாட்கள் தவம் செய்த இருவரின் முன் துர்க்கை தோன்றி சுரதாவுக்கு நாட்டையும், சமாதிக்குக் கிருஷ்ணனுடன் இணைவதையும் அருளினாள். துர்க்கை மறைந்த பிறகு மண்ணால் அவன் உருவமைத்து மன்னன் வழிபட்டு வந்தான். அரிசி, இனிப்புப் பண்டங்கள், மலர்கள், தூபம் போன்ற சாதாரண படையல்களுடன் காய்கறிகள், மிருக பலியையும் சுரதா படைத்தான், அதாவது ஆடு, மான், பூசணிக்காய் ஆகியவை. பூசைக்குப் பின்னர் சுரதா அம்மன் உருவை நீரில் சேர்த்துவிட்டான். ஆச்வின் மாதத்தில் துர்க்கை பூசையை மன்னன் சுரதா ஆரம்பித்து வைத்தார்.

ரத்தின இருக்கையில் துர்க்கையில் வடிவத்தை இருக்கச் செய்ய வேண்டும். உருவம் பொன்னிறத்தில், முக்கண்களுடன், ரத்தின கிரீடம் மற்று ஆபரணங்களும் அணிந்து இருக்க வேண்டும். கூந்தல் இடதுபுறம் சுருட்டப்பட்டும், நெற்றியில் சந்தனம், குங்குமம் நிறைந்தும் இருக்க வேண்டும். மிருகபலி இல்லாமல் நடத்தப்படும் துர்க்கை பூசை வைஷ்ணவி (அ) சாத்துவிக பூஜை எனப்படும். அது வைஷ்ணவர்களால் செய்யப்படுகிறது. விலங்குகளைப் பலி கொடுத்து செய்யப்படும் பூஜை துர்க்கை பூஜை.
ராஜசிக பூஜை : ஆஸ்வின் (புரட்டாசி) மாதத்தில், கிருஷ்ண பக்ஷத்தில் நவமி அன்று தொடங்கி பதினைந்து நாட்கள் நடைபெற வேண்டும். சுக்கில பக்ஷ தசமி அன்று துர்க்கையை நீரில் சேர்க்க வேண்டும். பலிகளைச் சப்தமி நவமி திதிகளில் அளிக்கலாம். ஆனால், அஷ்டமியில் கூடாது.

21. மற்ற பெண் தெய்வங்கள்

அடுத்து, நாரதருக்கு ஸ்வாஹா, ஸ்வாதா, தக்ஷிணா, ஷத்தி, மங்களசண்டி, மனசா, சுரபி ஆகிய பெண்தெய்வங்கள் பற்றி கூறப்படுகிறது.

ஸ்வாஹா : சிருஷ்டியின் துவக்க காலத்தில் தேவர்கள் பிரம்மலோகம் சென்று அவர்களுடைய முதல் சாப்பாடு பற்றிக் கேட்க, பிரம்மாவின் வேண்டுகோளை ஏற்று யாகவடிவில் விஷ்ணு இருக்க யாகத்தீயில் தேவர்களுக்கான உணவு அளிக்கப்பட்டது. ஆனால், அது அவர்களைச் சென்று சேரவில்லை. அதனால் தேவர்கள் மறுபடியும் பிரம்மாவை வேண்ட கிருஷ்ணர் பிரகிருதியை வேண்டுமாறு பிரம்மாவுக்கு அறிவுரை தந்தார். பிரகருதி, ஸ்வாஹா ஆனாள். அதுவே அக்னியின் எரிக்கும் சக்தி. ஸ்வாஹாவின் உதவியின்றி அக்னியால் எதையும் எரிக்க முடியாது என்று பிரம்மா அக்னியிடம், ஸ்வாஹாவை மணந்து கொள்ளுமாறு கூறினார். அவர்களுக்கு மூன்று மகன்கள் தோன்றினர். அவையே தாக்ஷிணா, காருதஸ்பத்ய, ஆஹவனியம் என்பவை. எனவே தீயில் பொருள்களை இடும் போது ஸ்வாஹா என்பதைச் சேர்த்து மந்திரத்தை சொல்ல வேண்டும்.

ஸ்வாதா : ஆரம்ப காலத்திலேயே பிரம்மா முன்னோர்களின் அதாவது பித்ருக்களையும் தோற்றுவித்தார். பிராமணர்கள் பித்ருக்களுக்குப் பிண்டங்கள் தரவேண்டுமென்று கட்டளையிட்டார். முக்கியமாக நீத்தார் கடன் எனப்படும் மறைந்த முன்னோர்களுக்காக செய்யப்படும் சிரார்த்தங்களில் இடவேண்டும். துவக்க நிலையில் அவை பித்ருக்களைச் சென்று சேரவில்லை. எனவே, பசி கொண்ட பித்ருக்கள் பிரம்மனிடம் சென்று முறையிட அவர் ஸ்வாதா என்ற தேவதையைத் தோற்றுவித்து அவனை முன்னோர்களுக்கு அளித்தார். எனவே பித்ருக்களுக்குப் பிண்டம் அளிக்கும்போது மந்திரத்துடன் ஸ்வாதா சேர்த்து உச்சரிக்க வேண்டும். அப்போதுதான் நாம் இடும் பிண்டம் பித்ருக்களைச் சென்றடையும்.

தக்ஷிணை : அதேபோல் யாகத்தின் மனைவி தக்ஷிணை. எனவே, சமயச் சடங்கு முடிந்தவுடன் பிராமணனுக்குத் தக்ஷிணை அளிக்க வேண்டும். இன்றேல் அந்தச் சடங்கு பயனற்றதாகும். எனவே யாகம் முடிந்தவுடன் பிராமணர்களுக்குத் தக்ஷிணை கட்டாயம் தரவேண்டும்.

ஷஷ்தா : பிரகிருதி அன்னையில் ஆறில் ஒரு பங்கு ஷஷ்தா எனப்படுகிறது. அவள் கந்தன் (அ) கார்த்திகேயனின் (அ) தேவசேனனின் மனைவி ஆவாள். பிரம்மாவின் மனதிலிருந்து தோன்றிய அவள் குழந்தைகளின் தேவதை; பிள்ளை வரம் அளிப்பவள் மற்றும் சிசுக்களைக் காத்து நீண்ட நாட்கள் வாழ்ந்திட அருள்புரிபவள். மன்னன் பிரிய விரதன் ஸ்வயம்பு மனுவின் புத்திரன். அவன் தவமிருந்து ஒரு மகனை அடைய அவன் இறந்தே பிறந்தான். மன்னன் குழந்தையுடன் மயான பூமிக்குச் சென்று தன்னை மாய்த்துக் கொள்ள முனைந்தான். அப்போது ஷஷ்தா தேவி அவன் முன் தோன்றி குழந்தைக்குப் புத்துயிர் ஊட்டினாள். தன்னைப் பற்றி உலகுக்கு அறிவிக்குமாறு அவனிடம் சத்தியம் செய்து வாங்கினான். ஒவ்வொரு மாதமும் ஷஷ்டி அன்று ஷஷ்டாதேவியைப் பூசிக்க வேண்டும். மற்றும் சிசு பிறந்தா ஆறாம் நாளும், இருபத்தொன்றாம் நாளும் அவளைத் துதிக்க வேண்டும். சிசுவைச் சார்ந்த அனைத்து நாட்களிலும் அவனைப் பூசிக்க வேண்டும். பூ, பழம், தீப, தூப நைவேத்தியங்களை அளிக்க வேண்டும்.

மங்கள சண்டி : நீலநிறக் கண்களும், அழகுமேனியும் கொண்ட மங்களசண்டி, துர்கையின் வடிவே. பெண்களுக்குக் கண்கண்ட தெய்வம். அவள் நல்வாழ்வு, செழுமை, செல்வமுடைய வாழ்வு ஆகிய மங்களங்களைக் குறையாமல் அளிக்கக்கூடிய திறமை கொண்டவள். சிவபெருமான் திரிபுராசுரர்களெனும் அரக்கர்களுடன் போர் செய்கையில் சில கஷ்டங்களைச் சமாளிக்க வேண்டி இருந்ததால் துர்கையைத் துதி செய்தார். விஷ்ணு கூறியவாறு, சிவன் முன் துர்கை மங்கள சண்டியாகத் தோன்றி பரமனின் திறமை, தீரம் ஆகியவற்றை அதிகரித்து அருளினார். அதுவே மங்கள சண்டிகைக்கு நடத்தப்பட்ட முதல் பூசனை. அடுத்து விஷ்ணுவுக்கும், பிருதிவிக்கும் பிறந்த அங்காரகன் அவளைத் துதி செய்தான். மனு குலத்தோன்றல் மன்னன் மங்களன் அவளை வழிபட்டான். அடுத்து ஸ்திரீகள் மங்கள நாயகியைச் செவ்வாய்க் கிழமை அன்று பூசித்தனர். அதன்பின் ஆண்களும் அவளை வழிபடத் தொடங்கினர். இவ்வாறு அவள் பெருமையும், புகழும் பரவத் தொடங்கின. செவ்வாயன்றே அவள் பூசை. (சண்டி=திறமையுள்ளவள். மங்களா-நலமும் செல்வமும் அளிப்பவள். எனவே மங்கள சண்டி எனப்படுகிறாள்.)

மனசா : மனம் அதாவது காசியபரின் மனசிலிருந்து தோன்றியதால் இவள் மனசாதேவி எனப்படுகிறாள். அவள் மிகவும் அழகாகத் தோற்றம் கொண்டிருப்பதால் உலகிலேயே அழகி என்ற பொருளோடும் ஜகத்கௌரி என்றும் பெயர் பெற்றாள். நாகராஜன் சோதரி என்பதால் நாகவாகினி (நாக சகோதரி) என்று பெயர். அவள் நாகங்களுக்கு அரசி என்ற கருத்தில் நாகேச்வரி எனப்படுகிறாள். அவள் பாம்பு விஷத்தை அகற்றுவாள் (ஹரனா) என்பதால் விஷஹாரி எனப்படுகிறாள். அஸ்திக முனிவர் தாய் ஆனதால் அஸ்திக மாதா எனப்படுகிறாள். மனசா கிருஷ்ணனை நோக்கி தவம் செய்து சக்திபெற்றாள். மேலும், அவள் சிவபக்தையும் கூட. அவள் பாம்பை யஜ்ஞோபவிதமாகத் தரித்திருக்கிறாள். அவளுக்கு தீபம், மலர்கள், தூபம் அளிக்கலாம்.

பழங்காலத்தில் மக்கள் பாம்பென்றால் மிகவும் பயந்தனர். ஏனெனில், பாம்பு கடித்தால் மரணம் தான். அதற்கு சிகிச்சை இல்லை என்ற நிலை. பிரம்மாவின் அறிவுரைப்படி காசியபர் மானசாவைத் தோற்றுவித்தார். பாம்பு கடிக்கான மந்திரத்திற்கு அவள் அதிஷ்டமான தேவதை ஆவாள். மானசாதேவி சிவனைப் பூஜித்து இறந்தவரை உயிர்ப்பிக்கும் கலையைக் கற்றாள். அவள் புஷ்கரத்தில் கிருஷ்ணனைப் பூசை செய்ய உலகம் முழுவதும் உன்னைப் பூசிக்கும் என்றார் அவர். ஜரக்கரு என்ற முனிவரை மனசா மணந்தாள். ஒரு மாலை, மனசாவின் மடியில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தார். சூரியாஸ்தமன நேரம் ஆகி விட்டது. ஜரத்கரு விழித்தெழுந்து மாலை சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்பதற்காக அவரை எழுப்பினாள். இல்லாவிட்டால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும் என நினைத்தாள். ஆனால் தன்னை எழுப்பியதற்காக மிக்க கோபம் கொண்ட ஜரத்கரு கணவனுக்குத் தீங்கு செய்யும் மனைவி கும்பிபாக நரகம் அடைவாள். கணவன் தூக்கத்தைக் கலைக்கும் மனைவி காலசூத்திர நரகத்தை அடைவாள். இவ்வாறு கூறி அம்முனிவர் தவம் செய்யச் சென்றுவிட்டார்.

மனசா கைலாயம் சென்றாள். அங்கே அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் அஸ்திகன். அஸ்திகன் வளர்ந்து சிவனின் சலுகையைப் பெற்றான். மனசா காசியபர் ஆசிரமம் சேர்ந்தாள். பரீக்ஷித்து தக்ஷகன் என்ற பாம்பால் கடிக்கப்பட்டான். அதனால் பரீக்ஷித்தின் மகன் ஜனமேஜயர் சர்ப்ப சஸ்திர யாகம் செய்து பாம்புகள் அதில் விழுந்து மரிக்க தக்ஷகன் இந்திரனிடம் சரணடைய, இந்திரன் மனசா தேவியைப் பிரார்த்திக்க, அவள் தன் மகன் அஸ்திகனை தக்ஷகனைக் காப்பாற்ற ஆணையிட்டாள். இதனால் மகிழ்ச்சி அடைந்த இந்திரன் மனஸாதேவியை மணிமய ஆசனத்தில் இருத்தி, மந்தாகினி ஆற்றின் புனித நீரால் அபஷேகம் செய்வித்துப் பூசை செய்தான். மனசா தேவியைப் பூசிப்பவர் பாம்பைக் கண்டு அச்சங்கொள்ளத் தேவையில்லை ஏனெனில் அவர் அத்தேவியின் பாதுகாப்பில் இருக்கிறார்.

சுரபி : சுரபி, பசுக்களுக்கெல்லாம் தாய் ஆவாள். ஒருநாள் கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் இருக்கும்போது பால்குடிக்க விரும்பினார். உடனே அவருடைய இடதுபுறத்திலிருந்து சுரபியைத் தோற்றுவித்தார். ஒரு மணிமயக் கலத்தில் பால் கறந்து குடித்தார். மீதமுள்ள பால் க்ஷீர சரோவரம் (பாற்கடல்) என்ற பெரிய ஏறி (நீர்நிலை) ஆயிற்று. இந்த இடம் கிருஷ்ணன், ராதை, கோபியர்களுக்கு உல்லாச இடமாயிற்று. சுரபியின் உடலிலிருந்து பல காமதேனுக்குள் தோன்றின. காமதேனு பசுக்கள் வேண்டியதெல்லாம் அளித்தன. இவற்றிலிருந்து தோன்றியவையே இன்று உலகில் காணும் பசுக்கள். கிருஷ்ணரே சுரபியை வழிபட்டார். வராக கல்பத்தில் ஒரு சமயம் விஷ்ணு மூவுலகிலும் பாலே இல்லாமல் செய்ய, பிரம்மாவின் ஆணைப்படி தேவர்கள் எல்லாம் சுரபியைப் பிரார்த்திக்க உலகில் மறுபடியும் பால் நிரம்பியது. தீபாவளிக்கு அடுத்த நாள், கார்த்திகை மாதத்தில் சுரபி பூசை சிறப்பானது. இத்துடன் பிரகிருதி காண்டம் நிறைவு பெறுகிறது. சுரபிப் பூஜையில் பொன், பூ, ஆடை, அணிகலன்கள், பசு, கன்று அளித்தல் சிறந்தது.

22. கணேசர்-கணேச காண்டம்

ஸ்ரீகணேசர் வரலாற்றைக் கூறும் இப்பகுதி கணேச காண்டம் எனப்படும். பிரகிருதி, கிருஷ்ணனை முன்னிட்டு விரதம் செய்து கணேசனை மகனாகப் பெற்றாள். உண்மையில் கிருஷ்ணன் தன்னில் ஓர் அம்சத்தையே கணேசராக மாற்றினார். மக்கள் ÷க்ஷமத்தை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாறு தரப்படுகிறது. நாரதர் வேண்டுகோளை ஏற்று நாராயணன் கணேச காண்டத்தைக் கூறினார். பார்வதி புண்யக விரதம் அனுஷ்டித்தாள். கிருஷ்ணனே ஒரு குழந்தையாக அவள் படுக்கையில் தோன்றியது. பெற்றோர்கள் குழந்தையை வாரி எடுத்து முத்தமிட்டு முனிவர்கள், பிராமணர்கள், யாசகர்களுக்குத் தானதர்மங்கள் செய்தனர். இவ்வாறு கோலாகலமாக விழா நடைபெறுகையில் சூரிய புத்திரன் சனி அங்கு வந்தான். சனி குழந்தையைக் கண்டுகொள்ளாமலே இருக்க, பார்வதி அது குறித்து சனியைக் கேட்டாள்.

சனி மீது சாபம்

அப்போது சனி, என் மீது ஒரு சாபம் இருக்கிறது. அதன்படி தான் எதை நோக்கினாலும் அது அழிய வேண்டும். சித்திரதன் என்ற கந்தர்வன் மகள் என் மனைவி. அவளை உதாசீனப்படுத்தியதால் அவள் இவ்வாறு எனக்குச் சாபமிட்டாள் என்றான் சனி. பார்வதியும், அங்குக் குழுமியிருந்த பெண்களும் அதுகேட்டு நகைத்தனர். சனி கூறியதைச் சாதாரணமாக எண்ணிப் பார்வதி சனியைத் தங்களைப் பார்க்கும் படி கூறினாள்.

சனி பார்வை

இதனால் உந்தப்பட்ட சனி குழந்தை மீது மட்டும் தன் பார்வையைச் செலுத்தினான். நேரிடைப் பார்வையாக இன்றி ஓரக்கண்ணால் மட்டுமே பார்த்தான். அவன் பார்வை பட்டவுடன் பார்வதியில் மடியிலிருந்த குழந்தை தலையின்றிக் கிடந்தது. (கோலோகத்தில் கிருஷ்ணனுடன் தலை இணைந்து விட்டது.) இதைக்கண்டு அனைவரும் திகைத்திட, பார்வதி மயக்கமுற்றாள்.

கணேசனுக்குத் தலை

கிருஷ்ணன் கருடாரூடனாய் ஓர் ஆற்றங்கரையில் ஐராவதம் உறங்குவதைக் கண்டு அதன் தலையை சுதர்சன சக்கரத்தால் அகற்றி கைலாயம் அடைந்து தலையின்றிக் கிடந்த பார்வதியின் குழந்தையின் கழுத்தில் பொருத்தி உயிர்பெறச் செய்தார். பார்வதியையும் மயக்கம் தெளிந்து எழச் செய்தார்.

சனி ஊனமாதல்

இந்நிகழ்ச்சியால் எல்லோரும் மகிழ்ச்சி கொண்டு விழா எடுத்து பிராமணர்களுக்கும், முனிவர்களுக்கும் தான தருமங்கள் அளித்துக் கொண்டாடினர். எனினும், சனி மீது பார்வதி கொண்ட கோபம் தணியவில்லை. அவள் சனியை முடமாகும்படிச் சபித்தாள். நடந்த சம்பவங்களுக்கு சனி காரணமில்லை என்றும், பார்வதியின் உந்துதலின் பேரிலேயே குழந்தையை சனி பார்த்ததாகவும் கூறி, தேவர்கள் பார்வதியை சமாதானப்படுத்த முயன்றனர். அவள் சினம் சிறிது குறைந்தாலும், சனியின் ஊனம் முழுவதும் குணமாகாமல் அதன் பலன் சிறிது காணப்பட்டது.

குழந்தை கணேசனுக்கு பரிசுகள் குவிந்தன. பிரம்மா கமண்டலம் தந்தார். பிருதிவி எலி வாகனம் அளித்தாள். பார்வதி இனிப்பு திண்பண்டங்கள் தானியங்களாலான பணியாரம், கொழுக்கட்டை, பால், தேன், பழம், நெய், தாம்பூலம் அளித்தாள். கணேசனை இமவானும், மேனகையும், பார்வதியும் பூக்கொண்டும், சந்தனம் புனிதநீர் படைத்தும் பூசித்தனர்.

கணேசனின் பல பெயர்கள்

கஜம் (யானை) ஆனனம் (முகம்) கொண்டதால் கணேசர் கஜானனன் எனப்படுகிறார். வயிறு பெருத்து நீண்டிருப்பதால் லம்போதரன் என்றும், பரசுராமன் ஒரு தந்தத்தை ஒடித்து விட்டதால் ஏகதந்தன், ஒற்றைக்கொம்பன் என்றும், விக்கினங்களை (தடைகளை) போக்குவதால் விக்கினஹரன் (அ) விக்னேசன் என்றும் கணேசர் அழைக்கப்படுகிறார். மேலும் அவர்க்கு ஹேரம்பன், விநாயகர், சூர்ப்பகர்ணன், கஜபக்தர்கள், குகராஜஸ என்று பலபெயர்கள் உண்டு. விஷ்ணுவின் தீர்ப்புப்படி கணேசன் முதற்கடவுளாகப் பூசிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் எடுத்த காரியம் பலன் தராது. கணேசனுக்கு புஷ்டியையும், கார்த்திகேயனுக்கு (முருகனுக்கு) தேவ சேனையையும் சிவ,பார்வதி மணம் செய்வித்தனர்.

நாரதர் கேள்வி : கணேசர் விக்கினம் தவிர்ப்பவர் என்றால் அவர் தலை எப்படி வெட்டப்பட்டது. அந்த விக்கினம் எப்படி நிகழ்ந்தது என்று கேட்டார். அதற்கு நாராயன் கூறிய விவரம் : மாலி, சுமலி என்பவர்கள் சிவபக்தர்கள். சூரியன் அவர்களைக் கொல்ல முயற்சிக்க சிவபிரான் சூரியனைத் தனது சூலத்தால் அடிக்க உலகமே இருண்டு போயிற்று. இதுகண்ட சூரியனின் தந்தை காசியபர் கோபம் கொண்டு தன் மகன், சூரியனை சிவபெருமான் சூலத்தால் அவன் மார்பில் தாக்கியதால் சிவபாலன் கணேசன் தலை வெட்டப்படும் என்று சபித்தார். விஷ்ணு ஆனைத்தலையைப் பொருத்தினார். அதிலிருந்த இரண்டு தந்தங்களில் ஒன்று இல்லாமல் போனது ஏன்? என்று நாரதர் கேட்டார்.

ஏகதந்தன்

ஜமதக்கினி முனிவரின் மகன் பரசுராமன். ஜமதக்கினி கார்த்தவீரியன் என்ற அரசனால் கொல்லப்பட்டான். எனவே பரசுராமர் மிக்கக் கோபம் கொண்டு எல்லா அரசர்களையும் கொன்று குவித்தார். சிவபெருமான் பரசுராமனின் குருவானதால் அவருக்கு மரியாதை செலுத்த பரசுராமன் சிவன் இருப்பிடம் சென்றார். அப்போது அவரை உள்ளே செல்ல விடாமல் கணேசர் தடுத்தார். கணேசர் மரியாதையுடன் பரமன் நித்திரையிலிருப்பதாகக் கூறியும், பரசுராமன் தான் உடனே பரமனைக் காணவேண்டும் என்று வற்புறுத்தி உள்ளே செல்ல முயன்றார். இருவருக்கும் தகராறு முற்றியது. அப்போது கணேசர் தந்தத்தை நீளச்செய்ய, அதனைப் பரசுராமர் தன் கைக்கோடாரியால் வெட்ட தந்தப் பகுதி பூமியில் விழுந்தது. கணேசர் மிக்க கோபம் கொண்டார். எனவே தான் கணேசர் ஏகதந்தர் (அ) ஒற்றைக்கொம்பர் ஆனார்.

இவ்வாறு நிகழ்ந்திட விழித்தெழுந்த சிவனும் பார்வதியும் இரத்தம் வழியும் மகன் கணேசனை அருகில் அழைத்து பரசுராமனிடம் கணேசன் பல பரசுராமர்களை வென்று கொல்லும் சக்தி உடையவன். அவன் கட்டுப்பாட்டில் இருப்பதால் ஓர் ஈயைக் கூடத் துன்புறுத்தவில்லை. பரசுராமன் கணேசனை மலர், தூப, தீப, நைவேத்தியங்களுடன் பூசை செய்தான் என்று விளக்கமளித்தார். கணேசர் பூசையில் துளசி மட்டும் கூடாது. அது ஏன் என்று நாரதர் கேட்க நாராயணன் கூறினார்.

கணேசரும் துளசியும்

ஒரு சமயம் கங்கைக் கரையில் கணேசரைத் சந்தித்த துளசி, கணேசரின் அதிசயத் தோற்றத்தைக் கண்டு, அவரை அணுகித் தான் மன்னன் தர்மத்வஜனின் மகள் என்றும், தன்னை மனைவியாக ஏற்குமாறும் வேண்டினாள். அதற்கு கணேசர் தனக்கு மணம் புரிய எண்ணம் இல்லை என்றும், விவாகம் துயரத்தை உண்டாக்கும் என்றும், மேலும் கங்கை தனக்குத் தாயனையள் என்றும் கூறி மறுத்தார் கணேசர். அப்போது கணேசர் நினைப்பது போல் திருமணமின்றி இருக்க கடவார் என்று சபித்தாள். கணேசரும் துளசியை அரக்கன் கையில் அவள் அகப்படுவாள் என்றும், துளசி ஒரு புதராகுமாறும் சபித்தார். துளசி வருத்தமுற்று கணேசர் கோபத்தைத் தணிக்க கணேசர், பூக்களிலெல்லாம் துளசி தலைசிறந்ததாகவும், விஷ்ணு பூசையில் முக்கியமாகும். ஆனால், என் பூசையில் மட்டும் துளசியை ஏற்பதில்லை என்று கூறினார். இந்தப் புராணத்தை உபன்யாசம் செய்யும் பவுராணிகளுக்குத் தங்கப் பூணூலும், வெண்குடையும், குதிரை, பூமாலை, பழம், இனிப்பு ஆகியவை வழங்கப்படவேண்டும். இத்துடன் கணேச காண்டம் முடிவு பெறுகிறது.

23. ஸ்ரீ கிருஷ்ண ஜன்ம காண்டம்

ஸ்ரீ பாகவதம், விஷ்ணு புராணம் ஆகியவற்றில் விரிவாகக் கூறப்பட்டுள்ள ஸ்ரீகிருஷ்ணாவதாரப் பகுதியில் சொல்லப்பட்டவையே இந்த பிரமவை வர்த்த புராணத்தில் இறுதி நான்காவது காண்டமாக ஸ்ரீகிருஷ்ண ஜன்ம காண்டத்தில் கூறப்படுகிறது. (விரிவை பாகவதம், விஷ்ணு புராணங்களில் ஸ்ரீகிருஷ்ணாவதாரப் பகுதியில் காண்க)

(அவற்றில் கூறப்படா சில முக்கிய செய்திகள் மட்டும் இங்கு தரப்படுள்ளன.) இதில் கிருஷ்ணன் ராதை வரலாறு விசேஷமாகக் கூறப்படுகிறது.

வரலாறு

கோலோகத்தில் ஸ்ரீதாமன் ராதையை ஒரு யாதவப் பெண்ணாகப் (இடையன் மகளாக) பிறக்குமாறு சபிக்க, அவள் கிருஷ்ணனை விட்டுப் பிரிவது குறித்து மிகவும் வருத்தமுற்றாள். இந்நிலையில் உலகில் துஷ்டசம்ஹாரம் சிஷ்டபரிபாலனம் செய்ய, பூமாதேவியின் வேண்டுகோளின்படி கிருஷ்ணன் புவியில் பிறக்கின்றான். இங்கு மாயை குழந்தை வடிவில் வந்து அசரீரியின் கூற்று இதில் மாறுபட்டுள்ளது.

அசரீரி

முட்டாள் கம்சா, ஏன் அனாவசியமாய் என்னைக் கொல்லப் பார்க்கிறாய்? உன்னைக் கொல்பவன் வேறிடத்தில் வளர்கிறான். உரிய காலத்தில் தன்னை வெளிப்படுத்துவான் இதனால் அப்பெண் குழந்தையைக் கொல்லாமல் தேவகியிடம் கொடுத்து விடுகிறான் கம்சன். அந்தப் பெண் குழந்தை பெரியவளானவுடன் ஏகநம்ஷா என்ற பெயரில் துர்வாச முனிவருக்கு மணம் செய்விக்கப்படுகிறாள்.

முற்பிறவி

நந்தன் ஒரு வசு, துரோணர் என்று பெயர் கொண்டவன். அவன் மனைவி யசோதை. துரோணரின் மனைவி தாரை. அவர்கள் வேண்டுகோளின்படி கோகுலத்தில் அவர்கள் மகனாகக் கிருஷ்ணன் வளர்கிறான். புவியில் காசியப முனிவர் வாசுதேவனாகவும், அதிதி தேவகியாகவும், கத்ரு ரோஹிணியாகவும் தோன்றினர்.

பூதனை

கம்சனின் சகோதரி பூதனை. கிருஷ்ணனெனும் மாயக்குழந்தையை விஷம் ஊட்டிக் கொல்லச் சென்று கிருஷ்ணனால் கொல்லப்பட்டாள். பூதனை முற்பிறவியில் அசுரமன்னன் பவியின் புதல்வி ரத்னமாலா. ஒரு யாகத்தில் விஷ்ணு வாமனனாகத் தோன்ற அவள் அவனைக் குழந்தையாக்கிப் பாலுட்ட வேண்டுமென்று விரும்பினாள். அதுவே பூதனை வரலாறு.

அரக்கர்கள் முற்பிறவி

கிருஷ்ணனால் கொல்லப்பட்ட திருணாவர்த்தன் என்னும் அரக்கன் முற்பிறவியில் மன்னன் சகஸ்ராக்ஷன் என்ற பாண்டிய குலத்தவன்.

கிருஷ்ணர்

கார்க்க முனிவர் நந்தன் குழந்தைக்கு கிருஷ்ணன் என்று பெயரிட்டார். கிருஷ்ணன் என்றால் கருப்பு நிறம் உடையவன் என்று பொருள். ஆனால் இப்புராணத்தில் கிருஷ=மோக்ஷம், ந=மிக உயர்ந்த(அ)சிறந்த எனவே கிருஷ்ணன் என்றால் மிக உயர்ந்த மோக்ஷம் அளிப்பவன் என்று பொருள் தரப்படுகிறது. பாலராமனுக்கு சங்கர்ஷணன் என்ற பெயரும் உண்டு.

தாமோதரன்

கிருஷ்ணன் யசோதை உரலில் கயிறு கொண்டு கட்டியதாகக் கூறுவது வழக்கம். (தாம=கயிறு; உதரன்=வயிறு உடையவன்)-கயிறு கட்டிய அடையாளம் காரணமாக தாமோதரன் என்று கிருஷ்ணனுக்குப் பெயர். ஆனால் இப்புராணத்தில் கிருஷ்ணனை நீண்ட துணியால் கட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், மரங்களுடன் கட்டியதாகக் கூறுகிறது இப்புராணம்.

கோபி ராதை

ஒரு நாள் கிருஷ்ணனுடன் மாடுகளை ஓட்டிச் சென்ற நந்தன் கிருஷ்ணனை அங்குக் காணப்பட்ட ஒரு பெண்ணின் காவலில் விட்டு விட்டுச் செல்ல, அந்தப் பெண் ராதையும், கிருஷ்ணனும் ஆடி மகிழ்ந்தனர். பின்னர் கிருஷ்ணனைக் காணாமல் வருந்திய ராதையிடம் கிருஷ்ணன் தினமும் இரவில் பிருந்தாவனம் வந்து மகிழ்ச்சியுடன் இருந்தான். அவன் நிழல் மட்டும் வீட்டில் இருந்தது. பார்வதி தவம் செய்து கொண்டிருந்தாள். அன்றாட பூசைக்கு அவள் அருகிலிருந்து சித்திரா என்னும் ஏரியில் பூக்கும் மலர்களைப் பறித்துப் பூசைக்கு உபயோகித்து வந்தாள். அந்த மலர்கள் அவளுக்காக ஏற்பட்டவை. அவற்றை வேறு யாராவது பறித்தால் அரக்கர்களாவர் என்று சாபம் உண்டு. இதை அறியாத கந்தர்வர்கள், அம்மலர்களைப் பறித்தனர். அவர்கள் விஷ்ணு பக்தர்கள். அவர்களே பகாசுரன், பிரலம்பாசுரன், கேசி என்ற அரக்கர்களாகி கிருஷ்ணனால் மடிந்தனர். பார்வதி செய்த அந்த விரதம் ராதாகிருஷ்ணன் ஆகியோரை முன்னிட்டே இவ்விரதம் செய்யும் பெண்மணியின் கணவன் சகல வளங்களையும் பெறுவான்.

பிருந்தாவனம்

கோபர்கள் சண்டிகாதேவியை ஓர் ஆலமரத்தின் அடியில் பூசை செய்து விட்டு உறக்கத்தில் வீழ்ந்தனர். அந்த இரவில் தேவ கலைஞன் விசுவகர்மா பிருந்தாவனத்தில் தேவையான வீடுகளை நிர்மாணம் செய்து அதில் ஒவ்வொரு கோபன் பெயரும் எழுதிவிட காலையில் எழுந்த கோபர்கள் அவரவர் பெயர் கொண்ட வீட்டில் புகுந்தனர் பிருந்தாவனத்தில். சுவயம்புவ மனுவின் குலத்தோன்றல் மன்னன் கேதாரன். அவன் மகள் விருந்தை (அ) பிருந்தை. எனவே, அவ்விடம் பிருந்தாவனம் என்று பெயர் பெற்றது. இவ்வாறு ஒரு வரலாறு இருக்க பிரம வைவர்த்த புராணம் பிருந்தாவனம் ஏற்பட்ட வரலாற்றை வேறு விதமாகக் கூறுகிறது. ராதையின் பல பெயர்களில் ஒன்று பிருந்தை. அவளும் கிருஷ்ணனும் ஆடிப்பாடி மகிழ்ந்த இடம் என்பதால் பிருந்தாவனம் என்று ஆயிற்று.

அந்தண ஸ்திரீகள்

அந்தணர்கள் பத்தினிகள் ஒரு சமயம் கிருஷ்ணனும் அவர் தோழர்களும் பிராமணர்களிடம் சென்று உணவு கேட்க அவர்கள் இடவில்லை. அடுத்து கிருஷ்ணன் ஆணைப்படி கோபர்கள் அந்தணர் தன் மனைவியரிடம் வேண்ட அவர்கள் கிருஷ்ணன் இருக்குமிடத்துக்கு உணவுப்பொருள்களுடன் வந்து அவர்களின் பசி தீர்த்தார்கள். அவர்கள் கிருஷ்ணனிடம் அவர் தரிசனத்திலேயே அவர்கள் எப்போதும் இருக்கும் வரம் வேண்டினர். விண்ணிலிருந்து ஒரு விமானம் வர அப்பெண்டிர் அனைவரும் கோலோகம் சென்று ஆனந்தமடைந்தனர். அவர்களுடைய நிழல்களே அந்தணர்களின் இல்லத்தை அடைந்தன.

காளீய மர்த்தனம்

விஷப்பாம்பின் பெயர் காளியன். தன் மனைவியுடன் மடுவில் வசிக்க நீர் விஷமாகி ஆடுமாடுகள் மரணமடைய அவற்றை ஒழிக்க கிருஷ்ணன் காளியன் மடுவில் குதித்தான். காளியன் கிருஷ்ணனை விழுங்கினான். அதனால் உட்புறம் எரிய ஆரம்பிக்க கிருஷ்ணனை கக்கினான் காளியன். காளியன் படம் மீது ஏறி மிதிக்க பளு தாங்காமல் காளியன் விஷம் கக்கி மயங்கினான்.  காளியன் மனைவி சுரசை கிருஷ்ணனைப் பிரார்த்திக்க, ஒரு விமானம் வந்தது. அதில் சுரசை கோலோகம் சென்றடைந்தாள். ஆனால் அவள் நிழலைக் காளியன் பெற்று அந்த மடுவை விட்டு நீங்கி ரமணகம் என்னும் இடம் சென்றான்.

கோவர்த்தன்

கோவர்த்தனம் (கோ=பசு; வர்த்தனம்=செழிப்புடன் வளர்தல்). கோவர்த்தனத்தை சுண்டு விரலால் தூக்கினான் என்பதை இதில் இடது கையால் தூக்கினான் என்று கூறப்பட்டுள்ளது. இந்திரன் கோவர்த்தன கிரியை உடைக்க வஜ்ராயுதத்தைப் பயன்படுத்தினான்.

உஷை

தேனுகாசுரன் என்னும் அசுரனின் முற்பிறவி. பலிச்சக்கரவர்த்தியின் மகன் சஹசிகன். கந்தமாதனபர்வத்தில் துர்வாசர் தவம் செய்து கொண்டிருந்த இடத்திற்கு சஹசிகன் திலோத்தமையுடன் வந்தான். அவர்கள் முனிவரைக் கவனிக்காமல் கேளிக்கையில் ஈடுபட முனிவர் தவத்திற்குப் பங்கம் ஏற்பட்டது. துர்வாசர் சஹசிகன் மறுபிறவியில் கழுதையாகப் பிறந்து கிருஷ்ணனால் கொல்லப்படுவான் என்று சபித்தான். திலோத்தமையை பாணாசுரன் மகளாய்ப் பிறந்து கிருஷ்ணனின் பேரன் அநிருத்தனை மணப்பாள் என்றார்.

துர்வாசர் தோல்வி

சஹசிகன், திலோத்தமையால் தவம் பங்கப்பட்ட துர்வாசர், திரிந்து கொண்டிருந்தபோது அவுரவ முனிவர் மகள் கந்தவியைக் கண்டு அவளை மணக்க விரும்பினார். அவள் சண்டைக்காரி என்று அவுரவர் கூற துர்வாசர் அவளுடைய நூறு திட்டுகளை மன்னிப்பதாகக் கூறி அவளை மணந்தார். அவுரவ முனிவர் அவளுக்கு அறிவுரை கூறி அனுப்பினார். ஒருமுறை நூற்றுக்கு மேல் திட்டிட துர்வாசர் அவளைச் சாம்பலாகுமாறு சபித்தார். பின்னர் வருத்தம் கொண்ட அவரைக் கிருஷ்ணன் சிறுபையன் வடிவில் வந்து சமாதானப்படுத்தினான். இதனால் கோபம் கொண்ட அவுரவ முனிவர் துர்வாசர் பெரிய தோல்வியைச் சந்திப்பார் என்று சபித்தார்.

அம்பரீஷனிடம் கோபம் கொண்டு துர்வாசன் ஒரு வீரனை வாளுடன் தோற்றுவித்து அம்பரீஷனைத் தண்டிக்க முயல சுதர்சன சக்கரம் தோன்றி வீரன் கழுத்தை வெட்டிக் கொன்றது. பின்னர் துர்வாசரைத் துரத்த அவர் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோரிடம் உதவியை நாடப்பலனின்றி மறுபடியும் அம்பரீஷரையே அடைந்து  மன்னிக்குமாறு வேண்டிட, சக்கரம் சாந்தி அடைந்தது. அது முதல் துர்வாசர் விஷ்ணு பக்தர்களிடம் கோபம் கொண்டு சபிக்காமல் இருந்தார். கோபியர்களின் ஆடையைக் கவர்ந்து கதம்ப மரத்தின் மீதமர்ந்த கிருஷ்ணனை யமுனையில் நீராடிக் கொண்டிருந்த கோபியர் ஆடைகளைத் தருமாறு வேண்டிட, கிருஷ்ணனை ராதை நீரிலேயே அமர்ந்து தியானித்து அவன் புகழ் பாடிட ஆடைகளைக் கோபியர் பெற்றனர். கிருஷ்ணனின் சிறப்பான சக்திகளை உணர்ந்து கோபியர் இல்லம் அடைந்தனர். ராஜலீலையின் போது கிருஷ்ணன் ராதையுடன் என்றும் சுற்றித்திரிந்து கடைசியில் மலய மலையை அடைந்து ஆங்கோர் ஆலமரத்து அடியில் கேதகிப் புதர்கள் அருகில் அமர, கிருஷ்ணன் ராதைக்குப் பல கதைகள் கூறலானான்.

அஷ்டவக்கிரர்

மேற்கூறியவாறு ராதையும், கிருஷ்ணனும் அமர்ந்திருந்த போது அங்கு அஷ்டவக்கிர முனிவர் வர, அவரைக் கண்டு ராதை சிரிக்க கிருஷ்ணர் அவளைச் சிரிக்காமல் தடுத்தார். பின்னர் அம்முனிவரின் முற்பிறவி வரலாற்றைக் கூறினார். முற்பிறவியில் தேவலன் என்ற அந்தணனாகப் பிறந்து மனைவியுடன் வாழ்ந்த அவர், பிறகு எந்தப் பெண்ணுடனும் உறவு கொள்வதில்லை என்று முடிவெடுத்திருந்த நிலையில் தேவலோக ரம்பை அவரைக் கண்டு தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்ட, அவர் மறுத்தார். அப்போது அவள் வக்கிர புத்தி படைத்த அம்முனிவர் உடலும் வக்கிரமாகுமாறும், அவர் அதுவரையில் பெற்ற புண்ணியமும் இழக்குமாறும் சபித்தாள். அதுகேட்ட அந்தணர் தீக்குளிக்க முற்பட்டபோது கிருஷ்ணன் தோன்றித் தடுத்து அவருக்கு அஷ்டவக்கிரன் என்று பெயர் சூட்டினார். பின்னர், நெடுங்காலம் தவம் இயற்றி வந்த அவர், ராதையையும், கிருஷ்ணனையும் கண்டதும், அவர்களை வணங்கித் துதித்திட அவர் சாபம் நீங்கியது.

பிரம்மன் மோகினி

மோகினி என்ற அப்சரஸ் பிரம்மனை மணக்க விரும்ப, அவர் வெறுக்க, அவள் இனி பிரம்மாவைத் துதிப்பதை யாவரும் நிறுத்தி விடுமாறு சபித்தாள். பிரம்மன் நாராயணனிடம் முறையிடச் சென்றார். அங்கு நான்கு முகங்கள் கொண்ட பிரமன், பத்துத் தலைகள், நூறு தலைகள், ஆயிரம் தலைகள் கொண்ட பிரம்மன்களைக் கண்டு குழப்பமுற்று அது குறித்து நாராயணனைக் கேட்க அவர், இப்பேரண்டத்தில் உள்ள பல உலகங்களில் பல பிரம்மாக்கள் உள்ளனர் என்றார். அதுகேட்ட பிரம்மாவின் அகம்பாவம் நீங்கியது. பிரம்மன் புனிதகங்கையில் நீராடினால் மோகினியின் சாபம் நீங்கிவிடும் என நாராயணன் அருளினார். அதனால் பிரம்மா அகம்பாவம் நீங்கிப் பணிந்தார்.

சிவன் பணிவடைதல்

ஒரு சமயம் சிவபெருமான் விருகாசுரனுக்கு அவன் யார் தலைமீது கை வைத்தாலும் அவர்கள் சாம்பல் ஆவர் என அவன் வேண்டியவாறு வரம் தர அவன் சிவன் தலைமீது கைவைத்துப் பார்க்க வர, அவர் விஷ்ணுவிடம் சரணடைந்தார். அங்கு வந்த விருகாசுரனிடம் விஷ்ணு இந்தப் பொய் கூறும் சிவனை எப்படி நம்புகிறாய். அவர் உனக்கு வரம் தரவே இல்லை. வேண்டுமானால் உன் தலை மீது கை வைத்துச் சோதித்துப் பார் என, அவன் தன் தலைமீது கையை வைக்க எரிந்து போனான். இதனால் மனம் போனபடி வரம் அளித்து வந்த சிவன் பணிவு கொண்டார்.

இந்திரன் கர்வத்தை அடக்குதல்

ஒருசமயம் இந்திரன் கர்வமடைந்து பிரகிருதி தேவியை உதாசீனப்படுத்த அதனால் சாபம் பெற்று இந்திரயோகம், லோகம் அனைத்தையும் இழந்தான். பின்னர் விசுவகர்மாவைக் கொண்டு அமராவதி நகரை புதுப்பித்தபோது திருப்தி அடையாத அவன் மேலும் மேலும் அப்பணியிலேயே விசுவகர்மாவை ஈடுபடுத்த விசுவகர்மா வேறெந்தப் பணியிலும் ஈடுபட முடியாமல் பிரம்மனிடம் முறையிட்டான். பிரம்மன் அவனை விஷ்ணுவவிடம் அழைத்துச் சென்று விவரிக்க, விஷ்ணு சிறுபாலன் வடிவம் கொண்டு இந்திரன் முன் தோன்றினார். இந்திரனை நோக்கி அந்த பாலன் எத்தனை அழகிய நகரம் இது! வேறெந்த விசுவகர்மாவும் இத்தனை சிறப்பாக அமைக்கமாட்டான். இன்னும் எத்தனை காலம் விசுவகர்மாவை வேலை வாங்கப் போகிறாய்? என்று இளைஞன் கேட்டான். இதனால் கோபம் கொண்டு இந்திரன் இளைஞனிடம், உனக்கு எத்தனை இந்திரன்களைத் தெரியும்? எத்தனை விசுவகர்மாக்களை அறிவாய்? என்று கோபத்துடன் கேட்டான்.

மணல் துளிபோல் எண்ணற்ற இந்திரன்கள் உள்ளனர். பேரண்டத்தில் உள்ள ஒவ்வோர் உலகத்திலும் ஒவ்வோர் இந்திரன். ஒரு இந்திரனின் ஆயுள்காலம் எழுபத்தோர் யுகங்கள். பிரம்மனின் ஒரு நாள் காலத்தில் இருபத்தெட்டு இந்திரர்கள் தோன்றி மறைந்தனர். (அவ்வமயம் சாரை சாரையாக ஓர் எறும்பு வரிசை காணப்பட்டது. பையன் அந்த வரிசையைக் காட்டி சிரித்துக் கொண்டே சொன்னான்.) இவற்றை நானே படைத்தேன். இவை ஒவ்வொன்றும் முற்பிறவியில் ஒரு இந்திரன். ஆனால் இப்போது எறும்புகளாய் பிறந்திருக்கின்றன என்றான். இந்திரன் வெட்கமடைந்து தன்னுடைய பொய் கர்வத்தை விட்டு விசுவகர்மாவைப் போகவிட்டான்.

அக்னி பணிதல்

ஒரு சமயம் அக்னி மூவுலகையும் எரிக்க முற்பட்டது. அதுசமயம் விஷ்ணு ஒரு சிறுவன் வடிவில் அக்னி முன் தோன்றி ஒரு நாணலைக் கொடுத்து எரிக்குமாறு கேட்டது. அப்போது அக்னி தன் சுவாலைகளால் சிறுவனை சூழ்ந்து கொண்டது. ஆனால் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. நாணலும் எரிக்கப்படவில்லை. இவ்விதம் விஷ்ணு அக்னியின் கர்வத்தை அழித்தார். (அடுத்து இராமாயணம் பற்றியும் இப்புராணம் கூறுகிறது. அது எல்லோர்க்கும் தெரிந்ததாகையால் இங்கு கொடுக்கப்படவில்லை).

கம்சன், ராதை கண்ட கனவு

கம்சன் இரவினில் மிகவும் பயங்கரமான கனவுகள் கண்டு மனம் கலங்கி புரோகிதர் சாக்கியரை அழைத்துக் கூறிட அவர் ஒரு யாகம் செய்து அதில் சிவதனுசைப் பூசிக்க வேண்டும் என்றும் நடுவில் வில் உடைந்துவிட்டால் கம்சனுக்கு மரணம் நிச்சயம். அதை முன்னிட்டு கிருஷ்ணனை மதுரைக்கு வருவித்துக் கொன்று விடலாம் என்றும் கூறினான்.

ராதையை விட்டுப் பிரிதல்

கிருஷ்ணனை அழைத்து வர அக்ரூரரைக் கம்சன் அனுப்பினான். ராதையும் சந்திரன் விழுவது போலவும் உலகமே இருளில் மூழ்கி விட்டதாகவும் கனவு கண்டாள். அப்போது கிருஷ்ணன் ராதையைச் சமாதானப்படுத்தி கோலோகத்தில் ஸ்ரீதாமன் கொடுத்த சாபம் பற்றி நினைவூட்டி தானும் அவளும் நூறாண்டு காலம் பிரிந்திருந்து பின்னர் இணைவோம் என்றும் கூறினார். பின்னர் ராதையைச் சமாதானப்படுத்தி நந்தன், யசோதை இருவருக்கும், பிரிவு கூறி பலராமனுடன் மதுரைக்குப் புறப்பட்டான் கிருஷ்ணன். மதுரை செல்லும் வழியில் எதிர்ப்பட்ட கூனியை ஓர் அழகியாக மாற்றி, அவளுக்கு அவள் முற்பிறவியில் சூர்ப்பணகை என்பதை நினைவூட்டினார்.

அவர் ஆசனத்தின் மீதேறி சுதர்சனச் சக்கரத்தால் கம்சன் தலையை வெட்டினார். மதுரைக்கு வந்த நந்தனிடம் தன்னை அவர்கள் மகனாக நினைப்பதை மறக்குமாறு கூறினார். மேலும், ராதை உண்மையில் கோபி அல்ல. அவளைத் தோற்றுவித்து நானே என்றும் கூறினார். அவள் பிரகிருதி தேவி. நானே விஷ்ணு, பிரம்மா, சிவன், சூரியன், அக்கினி, வாயு என்றும் எல்லாவற்றிலும் நானே உள்ளேன், என்னில் அனைத்தும் குடிகொண்டுள்ளன. நானே பரமாத்மா, நானே பரப்பிரம்மம் என்றார். மேலும் அன்றாடச் சடங்குகள், சகுனங்கள், கனவுகள், தானதருமம், கிரகணங்கள் பலவகை மக்களின் கடமைகள் நல்லொழுக்க விவரங்கள் ஆகியவற்றைப் பற்றியும் விவரித்தார்.

உத்தவர் தூது

மதுரையில் தங்கி இருக்கும்போது உத்தவரைக் கிருஷ்ணன் பிருந்தாவனத்துக்கு தூது அனுப்பினார். அங்கு சென்ற உத்தவர் ராதை மிகவும் மெலிந்து சோகமே உருவாகக் காட்சி அளித்தாள். பட்டாடை, ஆபரணங்கள் இன்றி எளிமையாகக் காணப்பட்டாள். ஆனால், உத்தவரைக் கண்டு அவரிடம் கிருஷ்ணனைப் பற்றிய செய்திகள் கேட்டு மகிழ்ச்சியுற்று அவருக்கு அளவில்லாப் பரிசுகள் அளித்தாள். மதுரை திரும்பி வந்ததும் உத்தவர், தான் ராதையிடம் கிருஷ்ணர் பிருந்தாவனம் வந்து ராதையைச் சந்திப்பார் என்று கூறினேன். இவ்வாறு கிருஷ்ணன் அவர்கள் தூங்கும் போது கனவில் ஒரு நாடகம் நடத்தினார். ஆனால், விதிவேறு மாதிரி இருந்தது. கிருஷ்ணனும், பலராமரும், சந்தீப முனிவரிடம் கல்வி கற்க அடைந்தனர். அங்கு கோபர் வடிவில் குருகுலவாசம் செய்து பின்னர் மதுரைக்கு ராஜஉடையில் வந்தார். அடுத்து துவாரகை நகரை உருவாக்கி, குரு÷க்ஷத்திரப் போரில் கவுரவர்களுக்கு எதிராக பாண்டவர்களுக்கு உதவி செய்தார். (மகாபாரதம் எல்லோரும் அறிந்த கதைதானே.)

ராதா கிருஷ்ணன் இணைதல்

சித்தாஸ்ரமம் சென்று கிருஷ்ணனும் ராதையும் கணேசரை வழிபட்டனர். அப்போது அங்கு பார்வதி வந்து ஸ்ரீதாமன் சாபம் முடிந்தது. அவர்கள் இருவரும் இணைந்து வாழ்வார்கள் என்றாள். பிரபாச தீர்த்தத்தில் இணைந்ததாக வேறோர் இடத்தில் சொல்லப்பட்டுள்ளது. ராதை கோகுலம் அடைய கிருஷ்ணன் கோகுலத்தினர்க்குப் பழக்கமான உடையில் ராதையிடம் வந்து சேர்ந்தார். ராதை மகிழ்ச்சியுடன் கிருஷ்ணனைச் சேர்ந்திட கோகுலவாசிகள் கிருஷ்ணனை மலர்மாலைகள், தாம்பூலம், தேன், பட்டாடைகளுடன் மகிழ்ச்சி கொண்டு வரவேற்றனர். கோலோகத்திலிருந்து வந்த தேவலோகத் தேரில் ஏறி ராதையும் கிருஷ்ணனும் பிருந்தாவனம் அடைந்தனர். கிருஷ்ணன் குழலூதும் நந்தகோபாலன் சிறுவனாகக் காட்சி அளித்தார். ஓர் ஆலமரத்தடியிலிருந்து கிருஷ்ணன் கோகுலவாசிகள் அனைவரிடமும் பிரம்மன் முதல் புல்வரையில் எல்லாமே மாயைதான் என்று கூறி, வரப்போகும் கலியுகத்தின் கொடுமைகளை விவரித்து எல்லோரையும் கோலோகம் செல்லச் செய்தார். மறுபடியும் ராதை தேவியாகி பொன்மய ஆசனத்தில் பெண்டிர் புடை சூழ வீற்றிருந்தார். கிருஷ்ணன் 100 ஆண்டுகள் மதுரையிலும் துவாரகையிலும், நந்தன் வீட்டில் 11 ஆண்டுகளும், ராதையுடன் பிருந்தாவனத்தில் 14 ஆண்டுகளும் (125) இருந்தார். பாகவதத்தில் கிருஷ்ணன் வேடனால் அம்பெய்யப்பட்டு உடலை விட்டு வைகுந்தம் சேர்ந்து அவதாரத்தை முடித்தார் என்று கூறப்பட்டது.

ஆனால், இப்புராணம் அவர் முடிவை வேறுவிதமாக வருணிக்கிறது. அவதார முடிவில் லக்ஷ்மி துவாரகையை விட்டு அகன்றார். நிலம் நடுங்கிற்று. யாதவர்கள் தங்களுக்குள்ளே அடித்துக் கொண்டு மடிந்தனர். ஜரா என்ற வேடம் தவறாக அம்பெய்தான். அம்பினால் அடிப்பட்ட கிருஷ்ணனைக் காண பிரம்மாவும், தேவர்களும் வந்தனர். எல்லோரையும் சமாதானப்படுத்தினார் கிருஷ்ணன். வேடன் ஜராவை கோலோகம் அனுப்பினார். பலராமர் உடல் சேஷநாகத்துடன் இணைந்து வாசுதேவர் காசியபரிலும், தேவகி அவர் மனைவி அதிதி உடலிலும் கூடினர். துவாரகை கடலில் மூழ்கியது. கிருஷ்ணன் உடலிலிருந்து ஓர் உருவம் நான்கு கைகளில் சங்கு, சக்கரம், கதை, தாமரை மலருடன் தோன்றி விமானத்திலிருந்து இறங்கி க்ஷீரோதத்தை (பாற்கடலை) அடைந்தது. இவ்வாறு இடதுபுறத்தில் இருந்த ஓருருவம் பிரிய, வலதுபுறத்திலிருந்து யாதவச் சிறுவன் கோபாலன் (அ) கோபபாலகன் உரு வெளிப்பட்டது. இது நிகழ்ந்தது ஸ்வேதத் வீபத்தில்.

நான்கு கரங்கள் கொண்ட நாராயணன் வைகுந்தம் அடைந்தார். கோபாலன் குழலூதிக் கொண்டே கோலோகம் அடைந்தான். எல்லோரும் ஹரி ஹரி என்று ஹரி நாமஸ்மரணம் செய்தனர். கோலோகத்தில் கிருஷ்ணன் ராதையுடன் ரத்தின மய ஆசனத்தில் அமர அங்கு ராதா நாதா, ராதேசா என்று கோஷம் கேட்டது.

24. நாராயணனும் நாரதனும்

நாரதன் அனைத்தையும் கேட்டு மகிழ்ச்சியுற்று இனி இமயத்தில் தவம் செய்யச் செல்லலாமா? என்று கேட்க, நாராயணன் நாரதன் கந்தர்வனாக இருந்த போது மணந்த ஐம்பது மனைவியர்களுள் ஒருத்தி சிவனருள் பெற்று மன்னன் சிரிஞ்ஜயன் மகளாகப் பிறந்து நாரதனுக்காகக் காத்திருப்பதாகக் கூறி அவளை மணப்பது அவன் கடமை என்றார். அவ்வாறே அவளை மணந்து நாரதன் பகவானை மறந்துவிட்டான். அப்போது அந்தப் பற்றிலிருந்து நாரதனை சனத்குமாரன் விழித்தெழச் செய்து கிருஷ்ணநாமம் ஜபித்துக் கொண்டே திரியுமாறு கூறினார். பலகாலம் கிருஷ்ணனைக் குறித்து தவம் செய்து கொண்டே நாரதன் நாராயணனுடன் இணைந்தான்.

பிரம வைவர்த்த புராணம் முற்றும்.

 
மேலும் பிரம வைவர்த்த புராணம் »
temple news
1. தோற்றுவாய்: பிரம வைவர்த்த புராணம் ஒரு ராஜஸிக புராணம். மேலும், பிரமாண்ட புராணம். மார்க்கண்டேய புராணம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar