மகாவிஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்தை ‘திருநாடு’ என்பர். அங்கு செல்பவர்களுக்கு எப்போதும் சுவாமியைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும். “நித்ய சூரிகள்” எனப்படும் இவர்களுக்கு பசி, தாகம், உறக்கம் போன்ற உணர்வுகள் இருக்காது. எப்போதும் பேரானந்தத்தில் மூழ்கி இருக்கும் இவர்கள் நாள் முழுவதும் ஆடிப் பாடி மகிழ்வர். இதை பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்திலும் நடத்த வேண்டும் என ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த நாதமுனிகள் என்பவர் விரும்பினார். இவரே ஆழ்வார்களின் பாடல்களை நாலாயிர திவ்ய பிரபந்தமாக தொகுத்தவர். ‘அரையர்’ என்னும் பெயரில் அபிநயத்துடன் ஆடிப்பாடும் கலைஞர்களை உருவாக்கினார். இவர்களின் பணியை ‘அரையர் சேவை’ என்பர். ஸ்ரீரங்கத்தில் அரையர் சேவை மிக பிரபலமானது.