‘‘ஏகாதச்யாம் து கர்தவ்யம் ஸர்வேஷாம் போஜந த்வயம்! சுத்தோபவா: ப்ரதம: ஸத்கதா த்ரவணம் தத:!! என்பது ஏகாதசி குறித்த ஸ்லோகம். இதில் வரும் ‘போஜந த்வயம்’ என்பதை மேம்போக்காக படித்து பார்த்தால் ‘இருமுறை சாப்பிடுங்கள்’ என பொருள்படும். ஆனால் ஏகாதசியன்று பட்டினி அல்லவா கிடக்க வேண்டும். அப்படியானால் இதன் உண்மை பொருள் என்ன என்பதை காஞ்சி மகாபெரியவர் விளக்குகிறார். ‘போஜன’ என்பதை ‘போ’ ‘ஜன’ என பிரித்தால் ‘‘ஹே! ஜனங்களே!” என்று பொருள் படும். இந்த ஸ்லோகத்தில் ‘‘ஹே! ஜனங்களே! ஏகாதசியில் செய்ய வேண்டிய செயல்கள் இரண்டு. ஒன்று பட்டினி கிடப்பது, மற்றொன்று பகவானின் திருநாமங்களை கேட்பது’’ என்கிறார்.