Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரம்மாண்ட புராணம் பகுதி-1
முதல் பக்கம் » பிரம்மாண்ட புராணம்
பிரம்மாண்ட புராணம் பகுதி-2
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2012
16:59

13. கைலாயம்: இது சங்குபோல் வெண்மையாய், மிகப்பரந்து, தேவர்களால் விரும்பி வரக்கூடிய இடமாக உள்ளது. இதன் நடுவில் குபேரன் அவனது அழகிய அரண்மனையில் வசிக்கிறான். அவனுடைய அவைக்கு விழல என்று பெயர். அவனிடம் புஷ்பக விமானம் உள்ளது. குபேரனுடைய தோழர்கள் யக்ஷர்கள், கந்தர்வர்கள், அப்சரஸுகள். குபேரனின் நெருங்கிய நண்பனாகிய பரமசிவனும் அடிக்கடி இங்கு வருகிறார். இங்கு மந்தாகினி ஆறு பாய்கிறது. யக்ஷ கந்தர்வ ஸ்திரீகள் இங்கு காணப்படும் சிவப்பு, நீல நிற தாமரை மலர்களை விரும்பி அணிந்து மகிழ்கின்றனர். அலகநந்தா, நந்தா ஆகிய இரண்டு ஆறுகளும் கூட இங்கே பாய்கின்றன. இங்குதான் சிவ-பார்வதி திருமணம் நடைபெற்றது. இங்கே கார்த்திகேயன் பிறந்தான். உண்மையில் இது ஒரு புனிதத்தலம்.

கேதுமால வர்ஷ : மேற்கில் இருப்பது கேதுமால வர்ஷா என்பது. இங்கு வலிமையும், அழகும் மிக்க பெண்மணிகள் உள்ளனர். பலாப்பழங்கள் நிறைந்து பசுக்களும், மக்களும் மகிழ்ந்து வாழும் இடம் இது.

பத்ராக்ஷ வர்ஷ : இது கிழக்கில் உள்ளது. இங்கு சால மரங்கள் அதிகம். இங்கு இருப்பவர்கள் பல்லாயிரமாண்டுகள் ஜீவித்திருப்பர். இங்குள்ளவர்கள் நம்பிக்கை குரியவராய், அகிம்சை முறையைக் கையாண்டு வருகிறார்கள். இங்கும் அழகிய மலைகள், நதிகள், அரசுகள் உள்ளன.

கிம்புருஷ வர்ஷ : இங்கிருப்போர் ஓராயிரம் ஆண்டு ஜீவித்திருப்பவர்கள். பொன்மேனி கொண்ட ஆண்களும், அப்சரஸுகள் போன்ற பெண்களும் இங்கு வாழ்கின்றனர். இங்கு பலாக்ஷ மரங்கள் உள்ளன. இங்கும் மலைகள், நதிகள் ஆகிய இயற்கை வளங்கள் உண்டு.

ஹரி வர்ஷ : இங்குள்ளவர்கள் வெள்ளி என ஒளிர்பவர்கள். தேவர்கள் போன்றவர்கள். முதுமை என்பதையே அறியாமல் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கொண்டவர்கள். கருப்பஞ்சாறு அருந்தி நெடுநாள் வாழ்வர்.

இளவிருத வர்ஷ : இங்கு சூரியனது வெப்பம் கடுமையாக இருப்பதில்லை. தாமரைக் கண்கள் கொண்டவர்கள். இவர்கள் வாழ்வும் பல்லாயிர வருஷக்கணக்காகும். இது மிகவும் பரந்து, உயர்ந்து உள்ளது.

ரம்யக வர்ஷ : இங்குள்ளோர் அழகுமிக்கவர்கள். இங்கு ஒரு படர்ந்த ஆலமரம் உள்ளது. அதன் சாறை உட்கொண்டு பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கின்றனர்.

ஹிரண்வன வர்ஷ : இங்கு ஹிரண்யதி என்ற ஆறு பாய்கிறது. இங்குள்ளவர்கள் செல்வந்தர்கள். இவர்களும் பல்லாயிரம் ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருப்பர்.

குரு வர்ஷ : மரவுரி ஆடைகளைச் செய்து அணிகின்றனர். இங்கு ரத்தினங்கள் கிடைக்கின்றன. மணலில் வெள்ளி தெளிக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு முதுமை, நோய் வருவதில்லை. இங்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றனர். இங்கிருப்பவர்களும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்திருப்பர்.

14. பாரத வர்ஷம்: பாரத வர்ஷத்தின் வடக்கில் இமயமலையும், மற்ற பகுதிகளில் சமுத்திரமும் சூழ்ந்துள்ளன. இதன் பெயர்க்காரணம் முன்பே கூறப்பட்டது. பாரத வர்ஷத்தில் வாழ்க்கையே கர்மாவாகும். எனவே இதற்கு கர்ம பூமி என்று பெயர். அது போக பூமி அல்ல. இது இந்திரத்வீபம், கசேரு, தாம்ரபர்ணம், கபஸ்தமானம், நாகத்வீபம், சவும்யா, கந்தர்வ, வருண என்று எட்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது; ஒன்பதாவது தீவாகும். இதன் கிழக்கில் கிராதர்களும், மேற்கில் யவனர்களும் வசிக்கின்றனர். பாரத வர்ஷத்தில் பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களென நான்குப் பிரிவினர் வாழ்கின்றனர். அவர்கள் தம்தம் தொழில்களைப் பின்பற்றி வாழ்கின்றனர். அவர்களுக்கான சதுர்வித உபாயங்கள் அறம், பொருள், இன்பம், வீடு ஆகும்.

நாடாள்பவர்கள் சாம்ராட் என்று அழைக்கப்படுவர். இமாலயம் போன்ற முக்கிய மலைகள், கங்கை, சிந்து, காவிரி போன்ற புண்ணிய நதிகள் இங்குள்ளன. இங்கு பாயும் நதிகள் யாவும் கங்கைக்கு இணையான புனிதமானவை. இங்கு பல ராஜ்ஜியங்கள், பல வம்சத்தினரால் ஆளப்பட்டன. குரு, பஞ்சால, சால்வ, சூரசேன, வத்ச, குந்தல, கோசல, கலிங்க, மகதம் ஆகியவை மாநிலங்கள். பல இதிகாச நூல்களில் அவை ஐம்பத்தாறு அரசுகள், அரசர்கள் என்றும் கூறுவர். முதலில் கூறப்பட்ட ராஜ்யங்கள் வடக்கில் உள்ளவை. வாலிக, அபிர, சவுபிர, ஷக, கேகய, மாத்ர, காஷ்மீர், காம்போஜம் ஆகியவையும் வடமாநிலங்களே. கிழக்கில் ஆந்திரவள, சுஜராக, அந்தர்கிரி, வஹிர்கிரி, பிரபங்க, பங்க, மலத, மாளவர்ணிக, பிரம்மோத்தர ஆகியவை கிழக்கில் உள்ளவை. தெற்கில் கலிங்க, மகாராஷ்டிர, கேரள போன்ற பல ராஜ்ஜியங்கள் தோன்றின. மேற்கில் நாசிக், மஹேய, கச்சிய, சுராஷ்டிரா போன்ற மாநிலங்கள்.

15. வான சாஸ்திரம்

இப்பேரண்டத்தில் ஈரேழு பதினான்கு லோகங்கள் உள்ளன. அவற்றில் பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹர்லோகம், ஜனலோகம், தபலோகம், சத்தியலோகம் என்று ஏழு மேலுலகங்களும், அதல, சுதல, நிதல, கபஸ்தல, மஹாதல, ஸ்ரீதல, பாதாளம் ஆகிய ஏழு கீழுலகங்களும் உள்ளன.

காலம் :  கால அளவையில் மிகச்சிறிய அலகு நிமிஷம். 15 நிமிஷங்கள்=1 கஷ்தா; 30 கஷ்தைகள்=1 காலம்; 30 காலம்=முகூர்த்தம், 30 முகூர்த்தம்-1 நாள்-ஒரு நாள் பத்துப் பிரிவுகளாக, ஒவ்வொன்றும் முகூர்த்தங்களை கொண்டது. பிராதக் காலம், மத்திய காலம், (முற்பகல்), அபர்ணா (பிற்பகல்), சயன்ஹா (மாலை) என்று 1 நாள் பிரிக்கப்பட்டுள்ளது. பகலுக்கு 15 முகூர்த்தங்கள், இரவுக்கு 15 முகூர்த்தங்கள். 15 நாட்கள்=1 பக்ஷம்; 2 பக்ஷங்கள்=1 மாதம்; 2 மாதங்கள்=ஒரு ருது; 3 ருதுக்கள்=1 அயனம்; 2 அயனங்கள்=1 வருடம்.

12 மாதங்கள் : சைத்ர (சித்தரை), வைசாக (வைகாசி), ஜேஷ்ட (ஆனி), ஆஷாட (ஆடி), சிராவண (ஆவணி), பாத்ர (புரட்டாசி), ஆச்வின (ஐப்பசி), கார்த்திக (கார்த்திகை), ஆக்ரஹாயன (மார்கழி), பௌஷ (தை), மாக (மாசி), பல்குண (பங்குனி) என்பவை. ஆகாயத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் (விண்மீன்கள்) உள்ளன. அவற்றுள் ஸப்த ரிஷிகள், துருவன், அருந்ததி என்பவை முக்கியமானவை. அனைத்து நட்சத்திரங்களும் துருவனைச் சுற்றி சுற்றி வருகின்றன.

மேஹனா-அடர்த்தி, திரவமாக்கல் எனப்பொருள். எனவே மேகம் என்ற பெயர் பெற்றது. மேகங்கள் ஆக்கினேய (வடமேற்கு) மேகங்கள், பிரம்மஜ மேகங்கள், பங்கஜ மேகங்கள் என்று மூன்று வகை. ஆக்கினேய மேகங்கள் இடி, மின்னல் இல்லாமல் பெருமழை பொழிவிக்கும்; மலை மீதும், மலையைச் சுற்றிலும் பிரம்மஜ மேகங்கள் இடி, மின்னலுடன் மழைபெய்விக்கும், பங்கஜ மேகங்கள் சஞ்சரித்துக் கொண்டே இருக்கும். இவை இலேசான மேகங்கள். மேலும், சூரியன், சூரியனின் ஒற்றைச் சக்கரதேர், ஆதித்தியர்கள், சந்திரன், சந்திரனின் தேர், சாஹி சுக்கில பக்ஷ (வளர்பிறை), கிருஷ்ண பக்ஷம் (தேய்பிறை) விளக்கப்பட்டுள்ளன. அத்துடன் புதன், சுக்கிரன், பிருகஸ்பதி, சனி ஆகியவை பற்றியெல்லாம் கூறப்படுகிறது. (இவை வேறு சில புராணங்களில் விவரிக்கப்பட்டுள்ளன).

சிவனின் நீலகண்டம்

அமுதம் கடைந்தபோது தோன்றிய ஆலகால விஷத்தை உலக நலன் கருதி சிவபெருமான் உட்கொள்ள, அது அவருக்கு தீங்கு விளைவிக்கும் என்று பார்வதி கழுத்தை அழுத்த விஷம் அங்கேயே தங்கி அதன் பயனாய் கழுத்து நீலநிறம் பெற்றது. அவர் நீலகண்டன் என்று பெயர் பெற்றார்.

16. வசுவும் வசுதராவும்

ஒரு சமயம் இந்திராதி தேவர்கள் ஒரு சிறப்பு அசுவமேத யாகம் செய்ய முடிவு செய்து அதற்கு எல்லா முனிவர்களையும் வரவழைத்தனர். இந்த யாகத்தில் ஆயிரக்கணக்கில் மிருகங்கள் பலியிடப்பட்டன. புரோகிதர்கள் வேதங்கள் ஓதினர். ஆனால், இவ்வாறு மிருகங்கள் பலி கொடுக்கப்படுவது கண்டு அவர்கள் மனம் இரக்கம் கொண்டது. எனவே அவர்கள் உயிர்க்கொலை தர்ம நெறிக்கு எதிரானது. யாகம் அகிம்சையுடன் கூடியதாக இருக்க வேண்டும் என்று கூறினர். இது விஷயமாய் ரிஷிக்கும், தேவர்களுக்கும் பெரிய வாதம் நடந்தது. மன்னன் உபரிசரவசுவை மத்தியஸ்தம் செய்து வைக்க அழைத்தனர். ஆனால், மன்னன் இந்திரனுடைய நண்பன் ஆனதால் மிருகபலி சாஸ்திரத்தை ஒட்டியதே என்றான். எனவே, ரிஷிகள் அவனைப் பாதாள உலகில், யாகத்தில் அளிக்கப்படும் நெய்யை அருந்தி வாழுமாறு சபித்தனர். நெய்யை வசு என்றும் கூறுவர். தா என்றால்-பாய்தல். அதனால் பூமிக்கு வசுதரா என்று பெயர் ஏற்பட்டது.

17. கலியுகம்

கலியுகம் நான்கு யுகங்களில் இறுதியானது. இது கொடுமை மிக்கது. வருணாசிரம தருமங்கள் நிலைகுலையும். ஏமாற்றுக்காரர்கள் தலைமுடியை மழித்து சமயக்குரவர் போல் சாஸ்திரம் படிப்பார்கள். அவர்களை ஏற்று மக்கள் மோசம்போவார்கள். உண்மையில் தருமநெறி உடையார் இந்த யுகத்தில் நல்ல பலன் பெறுவர். கலியுகத்தில் ஒரு நாளின் தருமம், துவாபரயுகத்தில் ஒரு மாதப் புண்ணியத்துக்கும், திரேதாயுகத்தில் ஓராண்டு புண்ணியத்துக்கும் சமமாகும். எனினும், கலியுக முடிவில் தருமம் நிலை நாட்டப்படும். விஷ்ணு பிரமதி மன்னன் வடிவில் அவதரிப்பார். இவர் கல்கி எனவும் கூறப்படுவார். கல்கி தனது முப்பத்திரண்டாவது வயதில் தருமத்தை நிலைநாட்ட ரத, கஜ, துரக, பதாதிகளுடன் கிளம்பி துஷ்ட நிக்கிரகம் செய்து, சிஷ்டபரிபாலனம் செய்வார். இவ்வாறு இருபத்தைந்து ஆண்டுகள் நடைபெறும். இவ்வாறு ஐம்பத்திரண்டு ஆண்டுகள் கழிய உலகை ஆண்டு வருவார். இவ்வாறு சத்ய யுகத்திற்கு கலியுகம் வித்தடும். மக்களெல்லாம் சிறிது சிறிதாக உயரம் குறைந்து குள்ள மனிதர்கள் ஆகித் தோன்றுவர்.

18. யஜ்ஞ வல்கியர்

ஜனக மகாராஜன் ஒரு சமயம் ஓர் அசுவமேத யாகம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான முனிவர்களை அழைத்தார். அவர் அந்த ரிஷிகளில் சிறந்தவர் யார் என்றறிய ஓர் உபாயம் செய்தார். ஒரு சோதனை நிகழ்த்தினார். அவர் ஓராயிரம் பசுக்கள், பணியாளர் பலர், மிக்க அளவில் பொன்னுடன் முனிவர்கள் முன்வந்து, இவையனைத்தும் அதிக அறிவாளியும், வேத சாஸ்திர நிபுணரும், மிகச்சிறந்தவருமான ஒருவருக்கே சொந்தமாகும். எனவே அந்த ரிஷி யார் என்பதை நீங்கள் முடிவு செய்வீராக என்று கூறினார் ஜனகர். அவர்களில் ஒருவரான யஜ்ஞவல்கியர் இவை எனக்கே உரியவை. நானே ஞானம் மிக்குடையவன். சகல சாஸ்திர சம்பன்ன விற்பன்னன் என்றார். அனைவரும் அவர் மீது கோபம் கொள்ள இதை வாதத்தின் மூலம் முடிவு செய்யலாம் என்று கூற வாதம் தொடங்கிற்று. யஜ்ஞவல்கியர் ஒரு பக்கமும், மற்ற முனிவர்கள் ஒரு பக்கமுமாக இருந்து வாதம் தொடங்கினர். மற்றவர்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் யஜ்ஞவல்கியர் தக்க விடை அளித்து தானே தகுதிபெற்றவன் என்று நிரூபித்தார். இதற்கு ஷகல்யர் என்ற முனிவர் சம்மதிக்கவில்லை. ஷகல்யர் கேட்ட ஆயிரம் கேள்விகளுக்கும் யஜ்ஞவல்கியர் விடையளித்தார். அதேசமயம் யஜ்ஞவல்கியர் கேட்ட வினாக்களுக்கு ஷகல்யரால் பதில் உரைக்க இயலவில்லை. எனவே யஜ்ஞவல்கியரே சிறந்தவர் என்பது உறுதியாயிற்று. எல்லாப் பொருள்களையும் எடுத்துக்கொண்டு யஜ்ஞவல்கியர் தன் ஆசிரமம் அடைந்தார். அவர் வைசம்பாயனரிடம் வேதங்களைக் கற்றவர்.

ஒரு சமயம் வைசம்பாயனர் ஒரு கடினமான சமயச் சடங்கை ஆரம்பித்தார். அப்போது அவர் தன் சீடர்கள் அனைவரையும் வருவித்துத் தனக்கு உதவியாக இருக்குமாறு பணித்தார். அப்போது யஜ்ஞவல்கியர் தானொருவனே தேவையானவை செய்ய இயலும் என்றும், மற்றவர்களும் இருப்பதில் ஓர் ஆட்சேபணையும் இல்லை என்று கூற அது சீடரான அவரது அகம்பாவத்தை எடுத்துக் காட்டியது. எனவே வைசம்பாயனர் கர்வம் பிடித்த யஜ்ஞவல்கியர் தனக்குச் சீடனாக இருப்பதைத் தான் விரும்பவில்லை என்றும், தன்னிடம் கற்ற கல்வியைத் திருப்பி அளிக்குமாறும் ஆணையிட்டார். வைசம்பாயனர் தனக்கு வேதவியாசர் கற்பித்த யஜுர் வேதத்தை அவர் யஜ்ஞவல்கியருக்கு கற்பித்திருந்தார். தனக்குக் கற்பித்த யஜுர் வேதத்தை யஜ்ஞவல்கியர் கக்கிவிட்டார். பின்னர் யஜ்ஞவல்கியர் சூரியனை நோக்கித் தவமிருந்து அவர் அருளால் மறுபடியும் யஜுர் வேதத்தைக் கற்றறிந்தார். யஜ்ஞவல்கியர் கக்கிய யஜுர் வேதத்தை மற்ற முனிவர்கள் பறவைகள் வடிவம் கொண்டு விழுங்கினர் என்றும் அதன் மூலம் அவர்கள் பெற்ற அறிவு தைத்திரிய ஸம்ஹிதை என்றும் வேறு புராணங்கள் காட்டும்.

19. சர்வம் சிவமயம் ஜகத்

ஒரு சமயம் தன்னைக் காணவந்த தேவர்களிடம், திருமால் எனக்கேற்பட்டுள்ள மகிமை எல்லாம் பராத்பரனான பரமேஸ்வரனின் கருணையால் ஏற்பட்டது. அவரே அனைத்துலகையும் பரிபாலனம் செய்பவர். பிரளய காலத்தில் நான் ஆலிலை மீது படுத்துக்கொண்டிருக்கையில் ஆயிரக்கணக்கான தலைகள், கரங்கள், கால்களுடன் ஒரு பேரொளி காணப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அது நான்கு முகங்களுடன், பொன்நிறம் கொண்டு, பூணூல், கமண்டலங்களுடன் தோன்றி என்னை யாரென்று கேட்டது. பின்னர் அவ்வடிவம்தான் சுவயம்பு என்றும், சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரகன் நானே என்றது. அப்போது நான் (விஷ்ணு) நானே சர்வமும் என்று கூறி விளக்கினேன். இருவருக்கும் பெரிய வாக்குவாதமே நடந்தது. அப்போது எங்கள் இருவர் எதிரில் வடக்கிலிருந்து ஒரு பேரொளி வந்து நின்றது. அதனருகில் நாங்கள் சென்று பார்க்க அது ஒரு மகாலிங்கமாய் காட்சி அளித்தது. அதன் அடியும் முடியும் புலப்படவில்லை. அப்போது அதன் அடியைக் காண நானும் (விஷ்ணு) முடியைக் காண பிரம்மாவும் புறப்பட்டோம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகியும் அடி, முடிகளைக் காணமுடியவில்லை. இருவரும் புறப்பட்ட இடத்திற்கே வந்து தங்கள் தோல்வியை ஏற்றோம். ஓ பரமேஸ்வரா எங்களைக் காத்திடுங்கள் என்று பிரார்த்தித்தோம்.

அப்போது எதிரில் கோடி சூரிய பிரகாசத்துடன் பிநாகம், திரிசூலம், பாம்பு, பூணூலுடன் சிவன் பிரத்யக்ஷமானார். தோன்றியவர் பெரிய அட்டகாசம் செய்தார். அதைக்கண்டு நாங்கள் அச்சமடைந்தோம். அப்போது அவர் அச்சமேன். நீங்கள் என்னிலிருந்து தோன்றியவர்கள். வலக்கையிலிருந்து பிரம்மாவும், இடக்கையிலிருந்து விஷ்ணுவும் தோன்றினீர்கள். உங்களுக்குள் ஏன் போராட்டம்! உங்கள் துதியினால் மகிழ்ச்சி கொண்டேன். என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் பரமன். அதற்கு நாங்கள் உங்கள் திருவடிகளில் எங்கள் பக்தி என்றும் நிலைத்திருக்க வரம் அளியுங்கள் என்றோம். இனி நீங்கள் சிருஷ்டியை ஆரம்பியுங்கள் என்று பரமன் கூறி மறைந்தார். பரமன் அருளாலேயே தனக்கு துஷ்ட சிக்ஷணம், சிஷ்ட பரிபாலனம் செய்யும் சக்தி கிடைத்ததென்று அனைவரும் சிவனை பூசித்தனர் என்றார் திருமால்.

20. தாருகாவன முனிவர்கள் ஈசனை அறிதல்

இமயமலையில் தேவதாரு மரங்கள் நிறைந்த தாருகாவனத்தில் முனிவர்கள் தமது மனைவியருடன் ஆசிரமங்கள் கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு அருள்புரிய சிவபெருமான் பிரகிருதி வடிவில் ஜடாதரனாய், கோரப்பற்களுடன் திகம்பரனாகத் தோன்றி அவர்கள் அமைதியைக் குலைக்க அவர்கள் தவம் பங்கப்பட்டது. முனிவர்கள் பரமனைக் கழுதை ஆகுமாறும், பேயாகுமாறும் சபிக்க அவர் கோபம் கொள்ளவில்லை. அவரது ஒளிக்கு முன் முனிவர்கள் சூரியனுக்கு முன் அகலாகக் காணப்பட்டனர். முனிவர்கள் வேஷதாரியிடம் நல்லவிதமாகப் பேச முனைந்தனர். இறுதியில் அவர் ஆடையுடுத்திவராவிடின் அவரது ஆண்குறி அகன்றுவிடும் என்று கூறி அச்சுறுத்த முயன்றனர். அப்போது பரமன் கேசவாதியர்களால் கூட அது முடியாது. என் லிங்கத்தை நானே பூமியில் விடுகிறேன் என்று கூற முனிவர்கள் உன் பிரபாவம் எங்களுக்குத் தேவையில்லை. ஆடையுடுத்தி நாகரிகமாய் நடந்துகொள், இல்லாவிட்டால் இவ்விடம் விட்டு அகன்று விடு என்றனர். பரமன் மறைந்து விட்டார். ஆனால் அங்கு ஒரு லிங்கம் தோன்றியது. இவ்வாறு பரமன் மறைந்தவுடன் உலகமே அசைவற்று ஸ்தம்பித்துப் போய்விட்டது.

இதன் காரணத்தை அறியாமல் முனிவர்கள் பிரம்மாவிடம் சென்று நடந்தவற்றை எல்லாம் கூறி முறையிட அவர், வந்தவர் ஆதிபுருஷனான பரமேஸ்வரனே. அவரே நாம் உயிருடன் இருப்பதற்கு, உலகில் ஜீவராசிகள் வாழ்வுக்கு ஆதிகாரணம். இது சிவனது லீலையே. எந்த தேஜஸ்ஸிலிருந்து லிங்கம் தோன்றியதோ, அதை பரமேஸ்வர ரூபமாக எண்ணிச் சேவித்து இஷ்ட சித்திகளைப் பெறுங்கள் என்றார். முனிவர்கள் திரும்பி வரும் போது சிவபெருமானும் அங்கு வந்திருந்தார். முனிவர்கள் அவரைத் துதிசெய்து, காமக்ரோதாதிகளைத் தொலைக்க முயற்சித்தோமே அன்றி சித்தி பெற்றவர்களல்லர். எனவே நாங்கள் செய்ய வேண்டியவற்றை உபதேசித்து அருள்புரியுங்கள் என்று பிரார்த்தித்தனர். அப்போது பரமன் அவர்களைப் பாசுபத விரதம் அனுஷ்டித்து, எல்லாச் செல்வங்களும் பெறுவீர்களாக என்று கூறி அருளினார். மேலும் பரமன், உலகில் மனிதன் முதன் அனைத்து ஜீவராசிகளும் பிறக்கும் போது ஆடையின்றி நக்னமாகத் தோன்றுகின்றன. மற்றும் பட்டாடை அணிந்தவர்களும் இந்திரியங்களை வெல்ல முடியாமல் நக்னர்களாகவே இருக்கின்றனர் என்றார். முக்காலமும் என் நாமம் உச்சரித்து விபூதி அணிந்து பூசிப்பவர்கள் காணாதிபத்தியம் பெறுவர். சிவபக்தி கொண்டவர்கள் மோக்ஷம் அடைவர். திருநீறு அணிந்து மயானத்தில் என்னைத் தியானிப்பவர்கள் அணிமா சித்திகளைப் பெறுவர். இந்திராதி தேவர்கள் காம்ய விரதங்கள் அனுஷ்டித்து என்னருளால் அவரவர் பதவியைப் பெற்றனர். நீங்களும் என்னைப் பக்தியுடன் ஆராதித்து பாசுபத விரதம் அனுஷ்டித்து என்னருளால் உய்யுங்கள் என்று சிவபெருமான் தாருகாவன முனிவர்களிடம் கூறி மறைந்தார்.

21. வாலியும் இராவணனும்

நிரஜன் எனும் வானரன் தன் பெண் விரஜாவை ருஷீடன் என்ற வானரனுக்கு மணம் செய்வித்தான். அந்த விரஜாவை கண்டு மோகித்த இந்திரன் அவள் சம்மதத்துடன் சேர்ந்திட வாலி என்னும் பலசாலியான வானரம் பிறந்தது. (இவனே ராமனால் கொல்லப்பட்டவன்) மற்றும் விரஜா சூரியனுடன் சேர்ந்து சுக்கிரீவனை பெற்றெடுத்தாள். அவர்கள் இருவரில் வாலி அரசாண்டு வந்தான். வாலி சுஷேணனின் பெண் தாரையையும், சுக்கிரீவன் பநஸனின் பெண் ருமையையும் மணந்தனர். அஞ்சனாதேவி கேசரி என்ற வானரனின் மனைவி. அவள் வாயுவின் அருளால் அனுமானை ஈன்றெடுத்தாள். ஒரு நாள் வாலி சூரியனுக்கு அர்க்கியம் அளிக்கத் தென் கடலுக்குச் சென்றான். இலங்கை வேந்தன் ராவணன் இதையறிந்து வாலியைத் தேடிச் சென்று அவனுக்குப் பின் பக்கமாக இருந்து அவனைத் தாக்கினான். இதைக் கண்டும் காணாமல் இருந்த வாலி, இராவணனைத் தன் அக்குளில் இருக்கிக் கொண்டு அனைத்து சமுத்திரங்களிலும் நீராடி ஜபதபங்கள் முடித்துக் கொண்டு கிஷ்கிந்தையை அடைந்து ஒரு மூட்டையை இறக்குவது போல் இராவணனைக் கீழே தள்ளினான். மூர்ச்சையாகி இருந்த இராவணனைத் தெளிவித்து வாலி, திக்பாலகர்களையும், மூன்று லோகங்களையும் வெற்றி கொண்ட நீ ஒரு வானரத்திடம் பலவீனமடைந்து விட்டாயே? என்று கேட்டான். இராவணன் வாலியிடம் மன்னிப்புக்கோரி இருவரும் சினேகிதர்களாகினர். அதனால்தான் முதலில் வாலியைக் கொன்று ராமன், பின்னர் ராவணனை போரிட்டுக் கொன்றார்.

22. பரசுராமன்

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் பரசுராம அவதாரமும் ஒன்று. பரசுராமனின் தந்தை ஜமதக்கினி முனிவர். தாயார் ரேணுகாம்பாள். பரமேச்வரர் ஒரு வேடன் உருவில் தான் கொன்ற ஒரு மானின் மாமிசத்தை பரசுராமன் அருகில் கொண்டு வந்து வைக்க, அதனை அகற்றுமாறு பரசுராமன் கூறினான். மேலும் அவனுடன் பேசுவதுகூட பாவமே என்றான். அதற்கு வேடன், என்னை அவசியமின்றித் தூஷிக்க வேண்டாம். என் மனைவி மக்களின் உணவுக்காக இந்த மாமிசத்தைக் கொண்டு போகிறேன். இதுவே எங்களுக்கு பிரம்மா அளித்த உணவு. நான் உயிர் வாழ வேட்டை ஆடுகிறேன். ஆனால் நீயோ தந்தை சொன்னார் என்பதற்குத் தாயையே கொன்றாய். இதை அறிந்தவர் உன்னைப் பழிப்பர். எனவே வேறு இடம் செல் என்றான் வேடன். இவ்வாறு அறிவுபூர்வமாக கேட்ட வேடனை மும்மூர்த்திகளுள் ஒருவரா? வேடனாகத் தோன்றவில்லையே என்று பரசுராமன் கேட்டு வணங்கி பரமேச்வரா என்னை மன்னித்து அருள்புரியுங்கள் என்று வேண்டினான். அப்போது பரமன் தோன்றி ராமன் கேட்ட சஸ்திர அஸ்திரங்களை வழங்குகிறேன். ஆனால் அவற்றை நிர்வகிக்கும் சக்தி நீ பெற வேண்டும். தீர்த்தயாத்திரைகள் சென்று அந்தந்த தலத்தில் உள்ள தேவதைகளை உபாசித்து வந்து மறுபடியும் தீவிர தவம் செய்யவும் அப்போது அஸ்திர சஸ்திரங்களைத் தரிக்கும், நிர்வகிக்கும் சக்தி கிடைக்கும் என்றார்.

மூகலு என்னும் அரக்கி தேவலோகம் சென்று தேவர்களை விரட்டி அடிக்க, அவர்கள் சிவபெருமானிடம் முறையிட, பரமன் இமயமலையில் தவமியற்றும் பரசுராமன் அரக்கர்களைக் கொன்று, தேவர்களுக்கு வெற்றி கிடைக்கச் செய்வான் என்றார். பரமனிடம் பரசுராமன் நான் ஒரு சாமானியன். என்னால் எப்படி தேவர்களுக்கு உதவமுடியும் என்று கேட்க, பரமன் உன்னிடம் இயற்கையாகவே பராக்கிரமம் இருக்கிறது. அத்துடன் தவத்தால் ஏற்பட்ட சக்தி உள்ளது. அத்துடன் தவத்தால் ஏற்பட்ட சக்தி உள்ளது. அத்துடன் நான் உனக்கொரு பரசை (கோடாரியை) ஆயுதமாகத் தருகிறேன். மேலும் எதிலும் நீ வெற்றி பெறுமாறு என்னுடைய அருளும் உள்ளது. எனவே வெற்றியுடன் வா என்று ஆசிர்வதித்து அனுப்பினார். அன்று முதல் பார்க்கவராமன், பரசுராமன் என்று பெயர் பெற்றான். பரசுராமன் அசுரர்களை வென்று தேவர்களுக்கு வெற்றி பெற்றுத் தந்தான். மேலும் பரமனிடம் தான் எல்லா சஸ்திர, அஸ்திரங்களை உபயோகிக்கவும், உபசம்ஹாரம் செய்யவும் அருளுமாறு வேண்டி அவ்வாறே பெற்றான். அவன் பெயர் கொண்ட பார்க்கவாஸ்திரத்தையும் அருளினார்.

பரசுராமன் ஒரு சமயம் தன் தகப்பனாரைக் கொன்ற கார்த்தவீரிய அர்ச்சுனனையும், மற்றும் அரசர்கள் அனைவரையும் கொன்று குவித்தான். கடைசியில் ஸ்ரீராமன் திருமணம் செய்து கொண்டு செல்கையில் அவரிடம் தோற்று தனது தவச்சக்தியை எல்லாம் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டுத் தவம் செய்யச் சென்றார் பரசுராமன். பரசுராமன் குரு÷க்ஷத்ரத்தில் சியமந்த பஞ்சகம் என்ற குளத்தை வெட்டி அதில் நீராடி பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்தார் பரசுராமர். அரசர்களைக் கொன்ற பாவங்கள் நீங்க காசியபரைப் பிரம்மாவாகக் கொண்டு அசுவமேதயாகம் செய்தார். யாக இறுதியில் ருக்வித்துக்களுக்குத் தக்ஷிணைகள் வழங்கினார். பின்னர் தான் வசிப்பதற்கு மஹேந்திர பர்வதத்தைத் தேர்ந்தெடுத்து அதைத்தவிர மற்ற பூமிப்பகுதிகளைக் காசியபருக்குப் பிரம்மதக்ஷிணையாகத் தானம் செய்தார். அது முதல் பூமி காசியபி எனப்படுகிறது. அதன்பின் பரசுராமர் பித்ரு தேவதைகளின் கோரிக்கைப்படி சந்நிதி அடைந்து மஹேந்திர பர்வதத்தை அடைந்து தவம் செய்யலானார்.

23. கோகர்ண ÷க்ஷத்திரம்

பாரத நாட்டின் தென்பகுதியில் கோகர்ண ÷க்ஷத்திரம் உள்ளது. அது பரமேஸ்வரன் மனமுவந்து அமர்ந்துள்ள இடம். அவ்விடத்தில் செய்யும் தான தருமங்கள் தவம், ஜபம் ஆகியவை பலமடங்காகப் பரிணமிக்கும். அங்கு இறப்பவர் மோக்ஷம் அடைவர். இங்கு நீராடி கோகர்ணேச்வரருக்கு ஜபம், அபிஷேகம், ஓமங்கள் ஆகியவை செய்தால் நினைத்த காரியங்கள் சித்தியாகும். அந்தத் திருத்தலத்தில் முனிவர்கள் தினமும் கோகர்ணேச்வரரைச் சேவித்து அங்கேயே வாசம் செய்தனர். அத்தலம் கடல், ஆகாய கங்கையால் நிரம்ப நீரில் மூழ்கி விட்டது. இதனால் கவலையடைந்த முனிவர்கள் பரசுராமரை அணுகி அத்தலம் நீரிலிருந்து வெளிவர ஆவன செய்து தங்களுக்கு உதவுமாறு வேண்டினர். உடனே பரசுராமர், தென் சமுத்திரக்கரையை அடைந்து கோகர்ண ÷க்ஷத்திரத்தை வெளிவிட வேண்டிட, சமுத்திரராஜன் பதில் கூறவில்லை. அப்போது பரசுராமர் கோபம் கொண்டு ஆக்கினேய அஸ்திரத்தை எய்ய முற்பட அது கண்டு பயமடைந்த சமுத்திரராஜன் தோன்றி பார்க்கவ ராமா! உங்கள் பலத்தை நான் அறிவேன். முன்பு பிரம்மன் என்னை யாராலும் வெல்ல முடியாது என்று வரமளித்தார். எனினும், நீங்கள் விஷ்ணு அம்சமானவர். எனவே, தாங்கள் எந்த எல்லை வரையில் என்னை அகன்று செல்லச் சொல்கிறீர்களோ அதுவரையில் நான் செல்கிறேன் என்று கூற, பரசுராமர் கோகர்ண தலம் வெளிவர ஏதுவாக நாலாபக்கமும் இடம் விட்டுச் செல்க என்றார். தலம் வெளிவந்து நிலை பெற்றது. ரிஷிகள் பரசுராமரைப் புகழ்ந்தனர். அவரும் கோகர்ணேசுவரனைப் பக்தியுடன் ஆராதனை செய்துவிட்டு மகேந்திரபுரிக்குச் சென்றார்.

24. காலம் கூடி வந்தால்

ஒரு சமயம் தேவாசுர யுத்தத்தில் தேவர்கள் கை ஓங்கி நிற்க ராக்ஷசர்கள் பலர் அழிந்து போக, மீதி உள்ளவர்கள் தமது குலகுருவான சுக்கிராச்சாரியாரை அணுகி முறையிட்டனர். அரக்கர்களைக் காப்பாற்றுவதற்காக அனேக மந்திர தந்திரங்களைப் பெற சிவபெருமானைக் குறித்து தவம் செய்ய வனம் ஏகினர். செய்வதறியாமல் திகைத்த அரக்கர்களைப் பார்த்து பிருகுமுனிவர் மனைவி என் கற்பின் மகிமையால் உங்களைக் காப்பாற்றுகிறேன் என்று கூறி அபயம் அளித்தாள். பிரகஸ்பதியின் ஆலோசனைப்படி அரக்கர்களை அழிக்கத் தேவேந்திரன் புறப்பட்டான். அப்போது பிருகுமுனிவரின் மனைவி இந்திரனை ஸ்தம்பிக்கச் செய்தாள். தேவர்கள் அஞ்சி ஓடினர். அப்போது விஷ்ணு இந்திரனைத் தப்புவிக்கச் செய்தார். அப்போது பிருகுவின் பத்தினி இந்திரா உன்னையும், உனக்கு ஆதரவாக வந்த விஷ்ணுவையும் எரித்து விடுகிறேன் பார் என்று கூற, விஷ்ணு ஒரு சரம் எய்து அவள் தலையைக் கொய்தார். இதுகண்டு பிருகு மகரிஷி, பெண் கொலை செய்த விஷ்ணுவுக்கு மனித வடிவில் ஏழாண்டு பிறக்குமாறு சபித்து, தன் மனைவி தலையை அவள் உடலில் பொருத்தித் தவ வலிமையால் அவளை உயிர்ப்பித்தார்! இருப்பினும் சுக்கிராச்சாரியார் இந்த விஷயம் தெரிந்து என்ன செய்வாரோ என்று பயந்த இந்திரன் தன் மகள் ஜயந்தியைச் சுக்கிராச்சாரியாரிடம் சென்று அவருக்கு அனுகூலமாக நடந்து அவரை மகிழ்ச்சி அடையச் செய்யுமாறு கூறி அனுப்பி வைத்தான்.

சிவன் தோன்றி சுக்கிராச்சாரியார் வேண்டிய வரங்களை அளித்தார். அப்போது சுக்கிராச்சாரியார் தனக்குச் சேவை செய்த ஜயந்தியை நோக்கி அவள் வேண்டும் வரம் யாது எனக் கேட்க, அவள் மிகுந்த தவசாலி ஆன தங்களுக்குத் தெரியாதா! என்று சொல்ல அவர், அவள் உள்ளம் அறிந்து அவளுடன் பத்தாண்டு காலம் சம்சாரம் செய்யலானார். மாயையால் தன்னை மறைத்துக் கொண்டார். அசுரர்கள் சுக்கிராச்சாரியாரைக் காணாமல் தவிக்க, தேவகுரு பிரகஸ்பதி சுக்கிராச்சாரியார் வடிவில் அவர்கள் முன் தோன்றி நான் தவம் இயற்றி வித்தைகள் கற்று வந்தேன். இனி நீங்கள் தேவர்களுடன் போரிட்டாலும் தோல்வி அடையமாட்டீர்கள் என்று உற்சாகப்படுத்தினார். இதற்குள் பத்தாண்டுகள் முடிய சுக்கிராச்சாரி ஜயந்திடம் விடைபெற்று அரக்கர்களைக் காணச்சென்றார். அங்கு ஏற்கனவே ஒரு சுக்கிராச்சாரி இருப்பதைப் பார்த்து அரக்கர்களிடம் தானே உண்மையான குரு சுக்கிராச்சாரியார் என்று கூறினார். ஆனால் பிரகஸ்பதி சுக்கிராச்சாரியாரைப் பிரகஸ்பதி என்று கூற உண்மையான சுக்கிராச்சாரியார் கோபம் கொண்டு அசுரர்களை இன்னல்படுமாறும் தோற்று ஓடுமாறும் கூறிட, அதுவே தக்க சமயம் என்று தேவர்கள் அசுரர்களிடம் போர் செய்து வென்றிட, அவர்கள் பிரகலாதனை அணுகி முறையிட, பிரகலாதன் சுக்கிரரிடம் அவர் மாயையால் மறைந்ததால் அசுரர்கள் தவறினர். அது அவர்கள் தவறில்லை என்று கூறி அவர்களைக் காத்திடுமாறு வேண்டினான்.

அப்போது சுக்கிரர் இப்போது தேவர்களுக்கு அனுகூல காலம். அவர்கள் கை ஓங்கி உள்ளது. பிரகஸ்பதி, அவர்கள் குருவானதால் அவர்களுக்கு உதவினார். காலச்சக்கரம் மாறி உங்கள் கை ஓங்கும் காலம் வரப்போகிறது. மஹாபலி ராஜ்யாதிகாரி ஆவான். அப்போது உங்கள் கை ஓங்கி நிற்கும். கவலையுற வேண்டாம் என்று கூறி அசுரர்களைச் சுக்கிராச்சாரியார் சமாதானப்படுத்தினார். ஆனால், மீதியுள்ள அசுரர்கள் ஒன்று கூடி தேவர்களை எதிர்த்துப் போரிட்டனர். சுவர்க்கத்தைக் கைப்பற்றினர். இந்நிலையில் தேவர்களுக்கு அவிர்பாகம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. தேவர்கள் ஒன்று கூடி சுக்கிராச்சாரியாரின் குமாரரான சண்டாமார்க்கனைப் பிரார்த்தித்து தங்களுக்கு அவிர்ப்பாகம் கிடைக்குமாறு செய்ய வேண்ட, தேவர்களை மட்டும் அழைத்து யாகம் புரிந்து அவிர்ப்பாகம் அளிக்க, தேவர்கள் பலம் பெற்று அசுரர்களை விரட்டி அடிக்க, அவர்கள் பாதாள லோகத்தை அடைந்தனர். காலம் கை கூடினால் மட்டுமே நற்பலன் கிட்டும்.

பிரம்மாண்ட புராணம் முற்றிற்று.

 
மேலும் பிரம்மாண்ட புராணம் »
temple news
1. தோற்றுவாய்: மஹாபுராணங்கள் எனப்படும் புனித நூல்கள் பதினெட்டு. அவை சாத்விக, ராஜஸிக, தாமஸிக புராணங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar