தஞ்சை பெரிய கோவிலில் நந்தியம்பெருமானுக்கு 2,000 கிலோ காய், கனி வகைகளால் சிறப்பு அலங்காரம்
பதிவு செய்த நாள்
16
ஜன 2026 10:01
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு 2 ஆயிரம் கிலோ காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் 108 பசுக்களுக்கு கோ பூஜை நடந்தது. உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் பொங்கல் பண்டிகையான நேற்று மாலை, நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மாட்டுப் பொங்கலான இன்று அதிகாலை பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பிறகு, காலை கத்திரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், தக்காளி, முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், கேரட், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற பழங்கள், லட்டு, அதிரசம், ஜாங்கிரி, முறுக்கு என பலவகையான பதார்த்தங்கள் மற்றும் மலர்கள், வெண்ணெய் என 2 ஆயிரம் கிலோ பல்வேறு பொருட்களை கொண்டு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து நந்தியம் பெருமானுக்கு முன்பாக, 108 பசுக்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுத் துணி போர்த்தப்பட்டு கோ பூஜை நடைபெற்றது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
|