மாட்டுப்பொங்கல் கோலாகலம்: காளைகளுக்கு படையல் போட்டு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2026 12:01
சிங்கம்புணரி; சிவகங்கை மாவட்டத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் படையல் போட்டு வழிபாடு செய்யப்பட்டது.
தமிழகத்தில் ஆண்டு முழுவதும் விவசாயிகளின் உற்ற நண்பனாகவும், விவசாயப் பணிகளில் தோள் கொடுக்கும் தோழனாகவும் விளங்கும் கால்நடைகளுக்கு, நன்றிக் கடன் செலுத்தும் விதமாகவும், இயற்கையின் ஆசானாக விளங்கும் சூரியனுக்கு வழிபாடு செய்யும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. சிங்கம்புணரி பகுதியில் பட்டகோவில்களம் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் இன்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு அனைத்து மாடுகளையும் குளிப்பாட்டி, வண்ணத்துண்டுகள், சலங்கைகள், வண்ணங்கள் பூசி அலங்கரித்தனர். அந்தந்த கிராமங்களில் பங்காளிகள் அடிப்படையில் கோயில் வீடு என அழைக்கப்படும் பொதுவான வழிபாட்டு மையத்தில் கூடி மாட்டுப் பொங்கலை கொண்டாடினர். பெண்கள் வரிசையாக பொங்கல் வைத்ததை தொடர்ந்து அனைத்து பானைகளில் இருந்தும் ஒரு கரண்டி பொங்கல் எடுக்கப்பட்டு அதைக் கொண்டு கூட்டுப்படையல் போடப்பட்டது. சாமியாடிகள் குலதெய்வம் ஆடி அருள்வாக்கு கூறினர். படையல் போட்ட பொங்கலையும் கடலை, அவரை கொடிகளையும் மாடுகளுக்கு ஊட்டி விட்டு தாங்களும் சாப்பிட்டனர். கம்பை எனப்படும் குறிப்பிட்ட தொழுவங்களில் இந்த ஆண்டு புதிதாக பிறந்த கன்றுகளுக்கு காதுகளை அறுத்தும், குத்தியும் அணிகலன்கள் அணிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைத்து மாடுகளும் அந்தந்த தொழுவங்களிலிருந்து அவிழ்த்து விடப்பட்டது.