பதிவு செய்த நாள்
19
மார்
2021
05:03
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தீர்த்த டிக்கெட் சப்ளையில் முறைகேடு நடப்பதால், கோயில் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
ராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராட ஒரு பக்தருக்கு ரூ.25 கோயில் நிர்வாகம் கட்டணமாக வசூலித்து டிக்கெட் வழங்கியது. 1வது தீர்த்த நுழைவில் உள்ள கோயில் ஊழியர்கள் டிக்கெட்டில் துளையிட்டு பக்தரிடம் கொடுத்து அனுப்புவர். பின் 22வது தீர்த்த நுழைவில் டிக்கெட்டை ஊழியர்கள் வாங்கி கொள்வர். ஆனால் சில நேரம் டிக்கெட்டில் துளையிடாமல், பக்தரிடம் வாங்கிய டிக்கெட்டை மீண்டும் மறுவிற்பனைக்கு டிக்கெட் கவுண்டருக்கு அனுப்பி முறைகேடு செய்தனர். இதனை தடுக்க 2012ல் ஈரத்தில் கிழியாத படி பிளாஸ்டிக் தாளில் டேக் அச்சிட்டு (அடையாள வில்லை) பக்தர்கள் கையில் அணிவித்தனர். இந்த டேக்கை பக்தர்கள் கழற்ற முடியாது, இறுதியில் கோயில் ஊழியர்கள் கத்திரிக்கோலால் கட் செய்து அகற்றியதால், முறைகேட்டை தடுத்தனர்.
கடந்த 9 ஆண்டுகளாக டேக் முறை பின்பற்றிய நிலையில், கடந்த இரு மாதமாக மீண்டும் துண்டு சீட்டு போல் டிக்கெட்டை கோயில் நிர்வாகம் வழங்குகிறது.முறைகேடு: தீர்த்த நுழைவில் காவலர்கள், பக்தர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு டிக்கெட்டுகளை பரிசோதிப்பதில் சிக்கல் எழுகிறது. இக்கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தரிடம் அவசர அவசரமாக டிக்கெட்டை வாங்கி, 9 ஆண்டுக்கு முன் நடந்த முறைகேடு போல் மீண்டும் மறு விற்பனைக்கு கவுண்டருக்கு அனுப்புகின்றனர். இதனால் கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர். ஹிந்து முன்னணி மாவட்ட பொதுசெயலர் ராமமூர்த்தி கூறுகையில், முன்பு பக்தர்கள் கையில் டேக்குடன் வரும் போது கோயில் ஊழியர்கள் எளிதில் கண்டறிந்து, நீராட அனுமதிப்பார்கள். ஆனால் தற்போது கையில் உள்ள டிக்கெட்டுகளை பரிசோதித்து துளையிட முடிவதில்லை. மேலும் அதிகாரிகள் ஆசியுடன் முழு டிக்கெட்டும் பக்தரிடம் வாங்கி மறுவிற்பனைக்கு வருகிறது. எனவே டேக் முறையை மீண்டும் அமல்படுத்தி அதில் பார்கோடுபொருத்தி ஸ்கேன் கருவியில் கோயில் ஊழியர்கள் பரிசோதித்தால், முறைகேடு தடுக்க முடியும். இதுகுறித்து அறநிலைதுறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.கோயில் இணை ஆணையர் பழனிக்குமார் கூறுகையில், தீர்த்த டிக்கெட் குறித்து விசாரித்தும், டேக் முறை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.