முத்துமாரியம்மன் கோயிலில் மார்ச் 23ல் பங்குனி பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2021 05:03
மானாமதுரை : மானாமதுரை தயாபுரம் பகுதி முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் மார்ச் 23ல் நடைபெற உள்ளது.
மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவை ஒட்டி கடந்த 15 ந் தேதி காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கியது.தினந்தோறும் மண்டகப்படிதார்கள் சார்பில் முத்துமாரியம்மனுக்கும் கோயில் பரிவார தெய்வங்களுக்கும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்று வருகின்றன. முன்னதாக ஏராளமான பக்தர்கள் காப்புக்கட்டி விரதத்தை தொடங்கினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா மார்ச் 23ல் நடைபெற உள்ளது.அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் மானாமதுரை வைகையாற்றிலிருந்து பால்குடங்கள், அக்னிச்சட்டி எடுத்து மேளதாளத்துடன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்து அம்மன் சன்னதி எதிரே பூக்குழி இறங்கி,மாவிளக்கு பூஜை, பொங்கல் வைத்து படைத்தும் நேர்த்திக்கடனை செலுத்துவர். ஏற்பாடுகளை கோயில் பூஜாரிகள் சுப்ரமணியன், நாகராஜன், முருகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.