கரூர்: கரூர் அருகே நெரூர் ஸ்ரீ சதாசிவபிரமேந்திராள் ஜீவசமாதியில் சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா ஸ்வாமிகள் நேற்று சிறப்பு பூஜை நடத்தினார். சிருங்கோரி ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா ஸ்வாமிகள் கரூரில் இன்று மாலை வரை (8 ம் தேதி) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து கார் மூலம் கரூர் பசுபதீஸ்வரா கோவிலுக்கு வந்தார். அவருக்கு கரூர் சாரதா பீடம் மற்றும் பக்தர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அலங்கரிப்பட்ட வாகனத்தில் ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா ஸ்வாமிகள் ஊர்வலமாக புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக கரூர் அரவிந்த் டிரேடர் வணிக வளாகத்தை சென்றார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை (7ம் தேதி) காலை 9 மணிக்கு சிருங்கேரி ஸ்வாமிகள் நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரமேந்திராள் ஜீவசமாதிக்கு சென்றார். அங்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தி வழிபாடு செய்தார். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு பக்த மஹா ஜனங்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினார். இன்று காலை (8 ம் தேதி) காலை சிறப்பு பூஜை, 9.30 மணி முதல் பாதபூஜை, பிக்ஷா வந்தனம் நிகழ்ச்சிகள் நடக்கிறது. மதியம் 12.30 மணிக்கு பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு ஸ்வாமிகள் கிருஷ்ண ராயபுரம் புறப்பட்டு செல்கிறார். ஏற்பாடுகளை ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம், ஸ்ரீ ராஜ ராஜஸ்வரி ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.