பதிவு செய்த நாள்
04
ஏப்
2021
03:04
திருப்பூர் : திருப்பூரில், ஸ்மார்ட் சிட்டி பணிக்காக, குழி தோண்டிய போது, 300 ஆண்டு பழமையான நடுகல் கிடைத்ததால், பொதுமக்கள் மஞ்சள்பூசி வழிபாடு நடத்தினர்.திருப்பூர் அரிசிக்கடை வீதியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், சாக்கடை கட்டி, குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. டவுன் மாரியம்மன் கோவில் அருகே குழி தோண்டிய போது, பழமையான நடுகல் கிடைத்துள்ளது.
பொதுமக்கள் தண்ணீரால் கழுவி, மஞ்சள், குங்குமம் வைத்து, வேப்பிலை அணிவித்து, தேங்காய் பழம் வைத்து, வழிபட்டனர். திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார், அங்கு வந்து, ஆய்வு செய்தார்.இது குறித்து அவர் கூறியதாவது:நாட்டை காக்கும் பணியின் போது கணவன் வீரமரணம் அடைந்தால், துயரம் தாங்காது, அவரது மனைவியும் உயிர் துறக்கும் வழக்கம் இருந்தது. அவர்கள் நினைவாக, சதிக்கல் நட்டு, அவரது வம்சாவழியினர் வழிபட்டு வருவர். அதன்படி, 300 ஆண்டுகளுக்கு முன், நாயக்கர் காலத்தில் இந்த நடுகல் நடப்பட்டிருக்கும்.நடுகல், 45 செ.மீ., அகலம், 75 செ.மீ., நீளத்தில் செதுக்கப்பட்டுள்ளது. கம்பீரமான ஆண், இடதுபுறம் சரிந்த கொண்டை அணிந்து, காதில் பெரிய அணிகலனுடன், இடது கையில் துப்பாக்கியை பிடித்தபடி நிற்கிறார்.வலது கையில், குறுவாள் கையில் இருக்கிறது. சிகை அலங்காரம், ஆடை, அணிகலன்களுடன் அலங்கரித்த பெண், வலது கையில் கண்ணாடியை வைத்துள்ளார்; இடது கையை, வீரனின் வலது கையை கோர்த்து பிடித்தபடி நிற்கிறார். பெரிய மாலை அணிந்த நிலையில் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.வீரனின் கையில் துப்பாக்கி இருப்பதால், 300 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான நடுகல்லாக இருக்க வாய்ப்புள்ளது.
திருப்பூர் வரலாற்றுடன் தொடர்புடைய இது, 300 ஆண்டுகளுக்கு பின் மண்ணில் இருந்து வெளியே வந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.உயிர்காத்த நடுகல்குழி எடுப்பதற்காக, நேற்று முன்தினம் பொக்லைன் குழி தோண்டிய போது, பெரியகல்லில், பொக்லைன் தொட்டி சிக்கியது. அதை எடுக்க முயற்சித்த போது, டிரான்ஸ்பார்மரில், உரசி பட்டாசு வெடிப்பது போல் தீப்பொறி பறந்தது; நடுகல் வந்திருந்தால், கம்பியில் உரசி மின்விபத்து ஏற்பட்டிருக்கும்; சுதாகரித்துக்கொண்ட பணியாளர் உயிர் தப்பினர். நடுகல் காப்பாற்றாமல் இருந்திருந்தால், உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். அதனால்தான், நடுகல்லுக்கு நன்றி கூறி பூஜை செய்து வழிபட்டதாக கண்ணீருடன் கூறினர்.