பதிவு செய்த நாள்
09
ஏப்
2021
04:04
அவிநாசி: அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக, மேற்கொள்ளப்பட்டு வந்த தீர்த்தக்குட யாத்திரை, இந்தாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் கூறியதாவது; அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி விரைவில் நடக்க வேண்டி, கடந்த, 2015ம் ஆண்டு முதல் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து, தீர்த்துக்குட ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாள், தீர்த்தக்குட யாத்திரை எடுக்கப்படும். திட்டப்பணி துவங்கிய நிலையிலும் கூட, பணி விரைவில் முடிந்து அதன் பயன் மக்களை சென்றடைய வேண்டும்; குளம், குட்டைகள் நிரம்ப வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து, தீர்த்தக்குட யாத்திரை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பரவலால், மத விழாக்கள் நடத்த மாநில அரசு தடை விதித்துள்ளது. எனவே, இந்தாண்டு தீர்த்தக்குட யாத்திரை இருக்காது. அத்திக்கடவு - அவிநாசி போராட்டக் குழுவினர் மற்றும் பொதுமக்கள், திட்டப்பணி விரைவில் முடிய, வீடுகளில் இருந்த படியே பிரார்த்தனை ஏறெடுக்க வேண்டும். இவ்வாறு, சுப்ரமணியம் கூறியுள்ளார்.