பதிவு செய்த நாள்
09
ஏப்
2021
04:04
திருநீர்மலை- நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக, திருநீர்மலை, ரங்கநாத பெருமாள் கோவில் குளத்தை, மூத்த குடிமக்களும், சமூக ஆர்வலர்களுமான இருவர், தாமாக முன்வந்து சுத்தம் செய்தனர். குரோம்பேட்டையை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திப் பெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு, பல்வேறு இடங்களில் இருந்து, பக்தர்கள் வருகின்றனர். இக்குளத்தை முறையாக பராமரிக்காததால், சீரழிந்து விட்டது.பல இடங்களில், சுற்றுச்சுவர் இடிந்தும், குப்பை, கழிவுகள் தேங்கியும், சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இரவில், குளத்தின் கரையை, குடி மையமாகவும் மாற்றி வருகின்றனர் என, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இச்செய்தியை படித்த, குரோம்பேட்டை மூத்த குடிமக்கள் நலச்சங்கத்தை சேர்ந்த எஸ்.மீனாட்சி சுந்தரம், 66, எஸ். சீதாபதி, 65, ஆகிய இருவர், கோவில் குளம் சீரழிந்து கிடப்பதை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர்.பின், குளத்தை சுத்தம் செய்ய முடிவு செய்த அவர்கள், நேற்று காலை, குளத்திற்கு சென்று, குப்பை, பிளாஸ்டிக், மது பாட்டில் ஆகியவற்றை அகற்றினர். அவற்றை மொத்தமாக சேகரித்து, அப்பகுதியில் உள்ள பேரூராட்சி குப்பை தொட்டியில் கொட்டினர்.தொடர்ந்து, குளத்தில் பிளாஸ்டிக், மது பாட்டில்கள் போடுவதை தடுத்து, பாதுகாக்குமாறு, அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சமூக ஆர்வலர்களின் இச்செயல், அப்பகுதி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.