பதிவு செய்த நாள்
14
ஏப்
2021
01:04
தஞ்சாவூர், சுவாமிமலை முருகன் கோவிலில், தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, திருப்படி திருவிழா நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில், முருகனின் ஆறுபடை வீடுகளுள் நான்காவது படைவீடாக திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இக்கோவில், குரு உபதேச தலம் எனச் சிறப்பு பெற்றது. இக்கோவிலில், தேவதைகள், 60 படிகளாக அமர்ந்து சுவாமிநாத சுவாமிக்கு சேவை செய்து வருவதாக நம்பிக்கை. தமிழ் புத்தாண்டு மற்றும் ஆங்கில புத்தாண்டு தினத்தில், 60 படிகளுக்கும் திருப்படி பூஜை நடைபெறும். அதன்படி இன்று(14ம் தேதி)தமிழ் புத்தாண்டு தினத்தில், கோவிலில் அமைந்துள்ள, 60 திருப்படிகளுக்கும் பக்தர்கள்,பெண்கள் விளக்குகள் ஏற்றி, சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். கொரோனா பரவல் காரணமாக மாஸ்க் அணிந்த வந்த பக்தர்கள் மட்டுமே கோவில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் கொரோனா குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.