தீபாவளி வந்தால் பலகாரங்களை சுவாமியின் முன் படைக்கிறோம். பொங்கல் வந்தால் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்கிறோம். கிருஷ்ணஜெயந்தி வந்தால் சீடை, முறுக்கு என வைக்கிறோம். இதையெல்லாம் பார்க்கும் சிலர் கேலியாக, சுவாமியா சாப்பிடுகிறார், அவர் பெயரைச் சொல்லி நீங்கள் சாப்பிடுகிறீர்கள், என கேலி செய்வர். இவ்வாறு கேலி செய்பவர்களிடம் சற்றும் கோபப்பட நமக்கு உரிமையில்லை. ஏனெனில், அவர்கள் உண்மையைத் தான் சொல்கிறார்கள். நிவேதனம் என்பதன் பொருளை அறியாமல் அவர்கள் பேசினாலும் நிஜம் அது தான். நிவேதனம் என்றால் சுவாமியை சாப்பிட வைத்தல் என்பது பொருள் அல்ல. அறிவித்தல் என்று அர்த்தம். இறைவா! இந்த சமயத்தில் எனக்கு இந்த உணவை உண்ணத்தந்து உயிர் காத்த உனக்கு நன்றி தெரிவிக்கிறேன், என்று அறிவிப்பதே நிவேதனமாகும். சுவாமியின் முன்னால் இலைபோட்டு விழாநாட்களில் மட்டுமே நிவேதனம் செய்கிறோம். இதை தினமும் செய்யலாம். நம் வீட்டில் அன்றாடம் சமைக்கும் வெள்ளை அன்னத்தை சுவாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு, அவரது நினைவோடு சாப்பிட்டால் உடலும் சுத்தமாகும், உள்ளமும் சுத்தமாகும். நோயில்லா வாழ்வு அமையும்.