பரமக்குடி ஈஸ்வரன், மீனாட்சி கோயில்களில் சித்திரை திருக்கல்யாண விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2021 06:04
பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில்களில் சித்திரை திருக்கல்யாண விழா கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் அதிகாலையில் நடத்தப்பட்டது.
பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில், இந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக அரசு வழிகாட்டுதலின்படி கொடியேற்றப் படாமல் விழா நடந்து வருகிறது. இதன்படி ஏப்., 22 , ல் நிச்சயதார்த்தம், மறுநாள் விசாலாட்சி தபசு திருக்கோலத்தில் அருள் பாலித்தார். இன்று 9 ம் நாள் விழாவாக, காலை 5:30 மணிக்கு திருக்கல்யாண விழா தொடங்கியது. அப்போது சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமிக்கு திருக்கல்யாண வைபவத்தை நடத்தினர்.
தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நிறைவடைந்து, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அருகில் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர் அருள்பாலித்தனர். தொடர்ந்து பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றிய சுவாமி தரிசனம் செய்து சென்றனர். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.
பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கொரோனா தொற்றின் காரணமாக இந்த ஆண்டு சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை 5:00 மணிக்கு மேல் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. பக்தர்கள் கோயிலில் அனுமதிக்கப்படாததால் பெண்கள் தங்கள் வீடுகளிலேயே தாலிக்கயிற்றை மாற்றிக் கொண்டனர். தேவஸ்தான டிரஸ்டிகள், சபை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.