பதிவு செய்த நாள்
24
ஏப்
2021
06:04
தொண்டாமுத்தூர்: பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு, சித்ரா பவுர்ணமி தினத்தன்று, பக்தர்கள் அதிகளவில் வரவேண்டாம் என, அறநிலையத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், பங்குனி உத்திரம், தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி ஆகிய தினங்களில், லட்சக்கணக்கான மக்கள் வந்து சுவாமியை தரிசித்து செல்வது வழக்கம். இந்தாண்டு, கோவையில் கொரோனா தொற்று இரண்டாம் அலை வீசி வருவதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி, பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில், கிரி மலைக்கு பக்தர்கள் செல்ல, கடந்த, 10ம் தேதி தடைவிதிக்கப்பட்டுள்ளது. அடிவாரத்தில் உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில், வழக்கம் போல, பாதுகாப்பு நடைமுறைகளுடன், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வரும், 26ம் தேதி, திங்கட்கிழமை, சித்ரா பவுர்ணமி தினத்தன்று, பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில், சித்ரா பவுர்ணமி தினத்தன்று, கொரோனா தொற்று காரணமாக, பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு, அதிக அளவில் பக்தர்கள் வரவேண்டாம் என, பக்தர்களுக்கு, அறநிலையத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.