மதுரை :மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் இந்தாண்டும் பக்தர்களின்றி நடந்தது. ஆன்லைன் மூலம் கண்டு பரவசம் அடைந்தனர்.
இக்கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இவ்விழாவிற்காக காப்பு கட்டிய ரமேஷ் பட்டர் திருமண சடங்குகளை செய்தார். கொரோனா தடை உத்தரவால் சித்திரை வீதிக்கு பதில் ஆடி வீதியில் மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. திருக்கல்யாணத்தில் மீனாட்சி பிரதிநிதியாக ஹாலஸ் பட்டரும், சுவாமி பிரதிநிதியாக செந்தில் பட்டரும் இருந்தனர்.
காலை 8:47 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. கோயில் வெப்சைட், யூடியூப் மூலம் கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.திருக்கல்யாணத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு இருந்தது. சித்திரை, ஆவணி வீதிகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பெண்கள் பலர் ரோட்டிலேயே திருமாங்கல்யத்தில் புது கயிற்றை மாற்றினர். திருக்கல்யாண நிகழ்ச்சியில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை பங்கேற்றன. கொரோனா பரவலை தடுக்க பக்தர்கள் திருக்கல்யாண அலங்காரத்தை காண அனுமதிக்கப் படவில்லை. மூலவர் தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இன்று(ஏப்.,25) ஆடி வீதியில் சட்டத்தேரோட்டம் நடக்கிறது.