வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள் பூத்துக் குலுங்கின. அந்த மலர்களெல்லாம் உதிர்ந்து வைகை வெள்ளத்தில் மிதந்து செல்லும் காட்சியே அழகு. இதற்கு சாட்சி பரிபாடல் போன்ற இலக்கியங்கள். அப்படிப்பட்ட இயற்கை வளம் மிக்க வைகை, சிவபெருமானால் உருவாக்கப்பட்டது. மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணத்திற்கு வந்தவர்கள் தாகம் தீர்க்க இந்த நதியை உருவாக்கினார். தன் சிரசை சற்றே கவிழ்த்து கங்கையை இங்கே விட்டார். சிவனின் நேரடிப் பார்வையில் உருவான நதி இது. கங்கை என்றாலே பாவம் போக்குவது. இப்படிப்பட்ட நதியில் மூழ்கி எழ யாருக்கு தான் ஆசை வராது! பாவம் தீர்ந்தால் பிறவி இல்லையே! இப்படிப்பட்ட ஆசை தான் சுதபஸ் என்ற முனிவருக்கு எழுந்தது. வைகையில் ஒருமுறை மூழ்கி எழுந்தாலே செய்த பாவம் நீங்குமென்றால், அங்கேயே பலநாள் மூழ்கிக் கிடந்தால், பிறவியே இல்லாமல் செய்து விடலாமே! நதியில் மூழ்கினால், பிறவிக்கடலையே கடக்கலாமே என எண்ணினார். அதற்கேற்ப துர்வாச முனிவர் அருகே வர, இவர் கண்டும் காணாதது போல் இருந்தார். வந்தவருக்கு கோபம் வந்தது. ‘‘ஏ! சுதபஸ், நீ மண்டூகமாகப் போ (தவளையாய் மாறு). வைகை நதியில் மூழ்கிக்கிட,” என்று சாபமிட்டார். சுதபஸ் நினைத்தது நடந்து விட்டது. சுதபஸ் அன்று முதல் மண்டூக மகரிஷி ஆனார். தவளையாக மாறி ஆற்றில் வசித்தார். மிக நீண்டகாலம் வைகையில் கிடந்தார். அவ்வப்போது தரைக்கு வருவார். காரணம் என்ன! எம்பெருமானான சுந்தரராஜர் அழகர்மலையில் இருந்து என்று வைகைக்கு எழுந்தருளுகிறாரோ அன்று சாப விமோசனம் கிடைக்கும் என்பது துர்வாசர் கொடுத்த சாப விமோசனம். பெருமாளின் திருவடியைப் பார்த்தாலே சொர்க்கம். ஸ்ரீரங்கத்திற்கு செல்கிறோம். பெருமாளின் திருவடியைத் தான் முதலில் பார்க்கிறோம். பிறகு தான் கமலம் போன்ற முக அழகைத் தரிசிக்கிறோம். அந்தத் திருவடி நம்மை மோட்சத்திற்கே கொண்டு சென்று விடும். பார்த்தாலே இப்படி என்றால்....திருவடி பட்டால் என்னாகும்! அழகர்கோவிலில் இருந்து சுந்தரராஜப் பெருமாள் குதிரையில் ஏறி வந்தார். வைகையைக் கடக்கும் போது, அவரது திருவடி மண்டூகர் மீது படுகிறது. சுயஉருவைப் பெற்றார். ஆகா...பெருமாளே! இனி எனக்கு மோட்சம் தானே! “அடேய், பாரடா! இப்போதே நீ மோட்சத்தில் தானே இருக்கிறாய். மண்டூகர் சுற்றுமுற்றும் பார்த்தார். ஆம்...திருவடி பட்ட அந்த நொடியே அவர் மோட்சத்திற்கு போய் விட்டார். நமக்கும் அதே நிலை தான்! ஆற்றில் இறங்கும் அழகரை தரிசித்தால் போதும். நல்வாழ்வு அமைவதோடு, மோட்ச கதியும் உண்டாகும்.