ஒருமுறை தர்மத்தின் தலைவனான எமதர்மனுக்கே சாபம் ஏற்பட்டது. இதை போக்க பூலோகத்தில் அழகர்மலைக்கு வந்தார். விருஷபகிரி என்னும் பெயர் கொண்ட இம்மலையில் தவத்தில் ஆழ்ந்தார். இந்த மலைத்தொடர் திருப்பதியைப் போல ஏழு மலைகளை கொண்டது. எமதர்மனின் தவத்தை மெச்சிய பெருமாள் காட்சி கொடுத்தார். அவரின் கருணையை போற்றும் விதமாக, ‘‘தினமும் உன்னை ஒரு முறையாவது பூஜை செய்ய வரம் தர வேண்டும்’’என்று கேட்டார் எமதர்மன். பெருமாளும் வரமளித்தார். இன்றும் இக்கோயிலில் அர்த்தஜாம பூஜையை எமதர்மனே நடத்துவதாகச் சொல்வர். எமதர்மன் வேண்டுதலை ஏற்று இத்தலத்தில் பெருமாள் எழுந்தருளினார். விஸ்வகர்மா இங்கு சோமச்சந்த விமானம் வட்ட வடிவில் அமைத்தார். சங்கு, சக்கரம், கதை, வில், வாள் தாங்கிய நிலையில் பெருமாள் நின்ற கோலத்தில் இருக்கிறார்.