பதிவு செய்த நாள்
29
ஏப்
2021
06:04
பெருமாளுக்குரிய நைவேத்யத்தில் சர்க்கரைப்பொங்கல், கொண்டைக்கடலை, வெண்பொங்கல் ஆகியவை இடம் பெற்றிருக்கும். தோசையை நைவேத்யமாக படைக்கும் பழக்கம் அழகர்கோவிலில் இருக்கிறது. இதற்காக கிராமத்து மக்களே அதிகமாக வருகிறார்கள். அவர்கள் தங்களின் வயலில் விளையும் தானியங்களை காணிக்கை செலுத்துகின்றனர். இந்த தானியங்களை அரைத்து மாவாக்கி தோசை தயாரிக்கப்பட்டு பெருமாளுக்கு படைக்கப்படுகிறது. இந்த தோசை தயாராகும் விதம் சுவாரஸ்யமானது. மடப்பள்ளியில் இதற்காக ஐம்பொன்னால் ஆன தனி தோசைக்கல் உள்ளது. ஊற வைத்து இடித்த அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், சுக்கு, பெருங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு ஆகியவை சேர்த்து மாவாக்குகின்றனர். அதில் நெய் விட்டு பெரிய தோசையாக வார்க்கின்றனர். மாலை நேர பூஜையில் இந்த தோசையுடன் கொண்டைக்கடலை, வடை, சர்க்கரை ஆகியவையும் படைக்கப்படுகிறது. தாயார் கல்யாண சுந்தரவல்லிக்கு வாரத்தில் ஒருநாள் வெள்ளிக்கிழமை மட்டும் தோசை நைவேத்யம் உண்டு.