கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைக்கிறது. நோய் தடுப்புக்கான பரிந்துரைகளில் ‘பயணத்தைத் தவிருங்கள்’ என்பதும் ஒன்று. அதாவது நோய் பரவியுள்ள இடங்களுக்கு செல்லவோ, அங்கிருப்பவர்கள் மற்ற பகுதிக்கு வெளியேறவோ கூடாது. ஒருமுறை மதீனாவில் இருந்து கலீபா உமர் மக்களின் நிலையை காண சிரியாவுக்குச் சென்றார். வழியில் அங்கு கொள்ளை நோய் பரவியிருப்பதாகச் செய்தி கிடைத்தது. மதீனா திரும்புவதா? அல்லது பயணத்தை தொடர்வதா? தளபதிகளிடம் ஆலாசித்தார். ‘‘இறைவன் மீது பாரத்தை வைத்து விட்டுப் பயணத்தைத் தொடருங்கள்” என்றனர் சிலர். இன்னும் சிலர் “வேண்டாம்... பயணம் செல்வது ஆபத்து. உடனடியாக நாடு திரும்புவோம்’’ என்றனர். குழப்பத்தில் ஆழ்ந்த உமர், நபித்தோழரான அப்துர் ரஹ்மான் இப்னு என்பவரிடம் ஆலோசனை கேட்டார். “நோய் பரவியிருப்பதாக அறிந்தால் போக வேண்டாம். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு நோய் பரவினால் அந்த ஊரை விட்டும் வெளியேறாதீர்கள்’ என நாயகம் சொல்ல கேட்டிருக்கிறேன்’’ என்றார். உடனே உமர் மதீனாவுக்குத் திரும்பினார். தொற்று சமயத்தில் பயணத்தை தவிர்ப்பதோடு சுகாதாரமாக இருப்பது அவசியம். பல் துலக்குதல், சோப்பால் கைகளைக் கழுவுதல், நாசியைத் துாய்மை செய்தல், காலணியுடன் வெளியே செல்லுதல், தும்மல், இருமல் வந்தால் தனிமையில் இருத்தல் போன்ற வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். தர்மச்செயல்களான இவற்றை முடிந்தவரை செய்தால் இறையருளால் மறுமையில் நற்கூலி கிடைக்கும்.