பதிவு செய்த நாள்
15
ஜூன்
2012
02:06
பதிமூன்றாவது படலத்தில் சித்திரை மாதம் தமனபூஜாவிதி பிரதிபாதிக்கப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக மரிக்கொழுந்து தோட்டத்தின் அவதாரம் பற்றி விளக்குவது, பூர்வமாக அந்த பூஜா பலனை நிரூபிக்கிறார். பிறகு தமனம் சேகரிப்பது பற்றி கூறுகிறார். ஸாயங்காலத்தில் அதிவாஸ விதியானது விதிக்கப்படுகிறது. காலையில் அனுஷ்டிக்க வேண்டிய விதியும் நிரூபிக்கப்படுகிறது. பவித்ராரோபண விதிப்படி சிவனை பூஜிக்கவும் என்று அனுஷ்டான கிரமம் சூசிக்கப்படுகிறது. முடிவில் ஹே பகவானே அதிகமானதாகவோ குறைவானதாகவோ என்னால் எந்த தமனார்ப்பண கர்மா செய்யப்பட்டதோ அது ஸம்பூர்ணமாகுக என்று பிரார்த்திக்கவும் என கூறுகிறார். தமநபூஜாவிதிக்கு பிறகு சந்தோஷிக்க படுவதான குருபூஜை, தீட்சிதர்களின் திருப்தியையும் செய்ய வேண்டும். கிருஹஸ்தரோ, பிரம்ம சாரியோ யார் இந்த விதியை ஆசரிக்கிறாரோ அவன் சித்திரை மாத ஜபாதி பலசித்தியையும் அடைவான் என நிரூபிக்கப்படுகிறது. இவ்வாறாக 13வது படல கருத்து தொகுப்பாகும்.
1. சித்திரை மாதத்தின் நல்ல பலனையளிக்கக் கூடிய தமனாரோபணம் என்னும் மரிக்கொழுந்து சாற்றும் முறையைக் கூறுகிறேன். முன்பு ஒரு சமயம் சிவனின் கோபத்திலிருந்து தமனன் என்ற பைரவர் தோன்றினார்.
2. அவனால் எல்லா தேவர்களும் அரக்கர்களும் பலசாலிகளும் தன்னடக்கம் உடையவர்களாக ஆனார்கள். திருப்தியடைந்த சிவனால் ஸம்ஸாரமாகிய பூமியில் செடியாக ஆவாய் என்று கூறப்பட்டது.
3. தாந்தநுத்வம் என்கிற மரிக்கொழுந்து வடிவத்தையடைந்து என்னுடைய உபயோகத்திற்காக ஆகப்போகிறாய். எந்த தேவர்கள் உன்கொழுந்துகளால் பூஜிக்கப்போகிறார்களோ
4. அவர்கள் மரிக்கொழுந்து மஹிமையால் உயர்ந்த நிலையை அடையப்போகிறார்கள். எந்த மனிதர்கள் மறுபடியும் குறிப்பிட்ட அளவில் மரிக்கொழுந்து சாற்றும் முறையை செய்யப்போகிறார்களோ
5. அவர்களுக்கு சித்திரை மாதத்தின் பூஜா நற்பயன் என்னால் கொடுக்கப்பட்டதாகும். சப்தமீ திதியிலோ திரயோதசீ திதியிலோ மரிக்கொழுந்து சமீபம் சென்று
6. அஸ்திர மந்திரத்தினால் சுத்தம் செய்து, ஸம்ஹிதா மந்திரத்தால் பூஜித்து சிவவாக்யத்தினால் ஹே தாம! என்பதாக விளிவேற்றுமையோடு கூறி
7. நீ பரமேஸ்வரனின் திருவருளால் இங்கு தயாராயிருப்பாய், சிவனின் உத்தரவால், பரமேச்வரனின் பூஜைக்காக கொண்டுவரப்பட்டிருக்கிறாய்.
8. என்று மரிக்கொழுந்தை அபி மந்திரித்து, ஸம்ரக்ஷணம் செய்து ஆலயத்தை அடைய வேண்டும். மரிக்கொழுந்து இருக்குமிடம் வெகுதொலைவில் இருப்பின் வேர் மண்ணுடன் கூடியதாக எடுத்து வந்து
9. மண் நிரப்பிய பாத்ரத்தில் வைத்து நீர் விட்டுக் கொண்டுவர வேண்டும். பிறகு முன்பு கூறிய முறைப்படி வீட்டிலேயே மந்திரங்களை கூறி அபிமந்திரிக்க வேண்டும்
10. மாலை வேளையில் அதிவாஸம் என்னும் முறையை செய்ய வேண்டும். ஸ்நானம் முதலான கடமைகளை முடித்துக்கொண்டு யாகத்திற்கு உபயோகமாக பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டு
11. முறைப்படி சூர்யன், சிவன், அக்னி இவர்களை நன்கு பூஜித்து பரமேஸ்வரனுடைய மேற்கில் வேருடனும், மண்ணுடனும் சேர்ந்த தானமருக் கொழுந்தை
12. ஸத்யோஜாதம் அல்லது ஹ்ருதய மந்திரத்தினால் பூஜித்து வடக்கில் வாமதேவம் அல்லது சிரோமந்திரத்தினால் காம்புடன் கூடிய நெல்லிக்கனியை பூஜித்து
13. தெற்கு பக்கத்தில் அகோரம் அல்லது சிகை மந்திரத்தினால் விபூதிக் கிண்ணத்தையும் தத்புருஷம் அல்லது கவச மந்திரத்தினால் கிழக்கில் புஷ்பத்துடன் கூடியதாக பற்குச்சியை வைத்து பூஜித்து
14. வடகிழக்கு பாகத்தில் மூல மந்திரம், காயத்ரி மந்திரத்தினால் பழத்தை சந்தனத்துடன் சேர்ந்ததாக ஸ்தாபித்து ஐந்து பிரிவுகளை உடைய மருக்கொழுந்தை புஷ்பம் அக்ஷதையிவைகளுடன் சேர்ந்ததாக வணங்கி
15. மரிக்கொழுந்து சாற்றுதலுக்காக பரமேஸ்வரனிடன் தெரிவித்து ஹே! பரமேஸ்வரா என்னால் காலையில் நீவிர் அழைக்கப்பட்டுள்ளீர்!
16. உன்னுடைய உத்தரவினால் மரிக்கொழுந்து திருநாள், மிகுந்த பயனை முழுமையுள்ளதாக செய்யவேண்டும் என்று ஈசனின் தலையில் புஷ்பாஞ்சலியை செய்து வணங்கி
17. சிவமந்திரத்தினால் சேர்த்து ஜபம் முதலியவைகளை செய்ய வேண்டும், மீதமுள்ள மருக்கொழுந்து திரவ்யங்களை பாத்ரத்தில் வைத்து அதை தத்புருஷ மந்திரத்தினால் மூடி
18. பவித்ரோத்ஸவ முறைப்படி கவச மந்திரத்தினால் அவகுண்டநம் செய்ய வேண்டும். இவ்வாறு பாதுகாக்கப்பட்டதாக செய்து பரமேச்வரனிடம் தெரிவிக்க வேண்டும்.
19. பிறகு உணவின்றியோ அல்லது ஹவிஸ்ஸைமட்டுமோ, உண்ண வேண்டும். சிவாலயத்தின் முன்பு தியானம், பாட்டு, ஜபம் முதலியவைகளால் விழித்திருந்து
20. காலை ஸ்நானம், காலை கடமைகளை முடித்து அஷ்ட புஷ்பங்களால் பூஜிக்க வேண்டும். விசேஷமாக நித்ய, நைமித்திக பூஜையையும் செய்து
21. மீதமானதும், ஐந்து பிரிவுகளையுடையதுமான மருக்கொழுந்துகளால் தேவனை பூஜிக்கவும், அதிலும் மீதமானதை அருகம்புல், புஷ்பம் அக்ஷதை இவைகளுடன் சேர்ந்ததாக அஞ்சலி ஹஸ்தத்தால் எடுத்து
22. ஐந்து முகமுள்ள ஸதாசிவனை எதிர்நோக்கியுள்ளவராக தியானித்து, ஆத்மதத்வ, வித்யாதத்வ, சிவதத்வங்களாலும் அதன் அதிபதிகளான ஈச்வரர்களாலும்
23. பவித்ரம் சேர்ப்பிக்கும் முறைப்படி பரமேச்வரனை பூஜிக்கவும். முன்கூறிய ஆத்ம தத்வங்களுடன், இரண்டு, நான்கு, ஆறு என்ற தான உயிரெழுத்துக்களோடும் (ஆ,ஈ,ஊ,ஒள) ஓம் ஹளம் ஆத்ம தத்வாயநம: ஓம்ஹளம் ஆத்மதத்வாதிபதயே சிவாயநம: என்று
24. ஷ என்ற எழுத்து வரிசையின் முடிவான ஹவும், ம் என்ற எழுத்தும் சேர்ந்ததாக பவித்ர மந்திரத்தினால் அஞ்சலி கொடுக்கவும் நான்காவது அஞ்சலி மந்திரமாவது ஓம் என்றும், சிவ மந்திரத்துடனும்
25. விருப்பத்தைக் கொடுக்கக்கூடிய யாகம் யாகேஸ்வரனின் பொருட்டு பூர்த்தி செய்து சூலபாணி என்ற பதத்தை நான்காம் வேற்றுமை நம: என்ற பதத்துடன் கூடியதாக கூறவும் சூலபாணயே நம: எறு அர்ச்சிக்க வேண்டும்.
26. சிவனை பூஜித்து நமஸ்கரித்து முறைப்படி ஹோமம் செய்து பிறகு விருப்பப்பயனை தெரிவிக்க வேண்டும்.
27. ஹே பகவானே, என்னால் செய்யப்பட்ட இந்த பூஜை குறைவுபட்டோ, கூடுதலாகவோ இருப்பின், என்னுடைய பர்வ அளவு மருக்கொழுந்து சாற்றும் திருவிழா எல்லாவற்றிலும் நிறைவுள்ளதாக ஆகட்டும்.
28. என்று இவ்வாறு மருக்கொழுந்து பூஜையை செய்து ஆசானை பூஜித்து, திருப்தி செய்வித்து, ஆசார்யர்களையும் சிவதீøக்ஷ பெற்றவர்களையும் திருப்தியடைய செய்ய வேண்டும்.
29. மனைவி மக்களுடையவனாக இருந்தாலும் பிரம்மசாரியாக இருந்தாலும் இந்த பூஜையை முறைப்படி செய்கிறானோ அவன் சித்திரை மாதத்திற்கு உண்டான ஜபம் முதலியவைகளின் நற்பயனை அடைகிறான்.
இவ்வாறு சித்திரை மாத மரிக்கொழுந்து சாற்றும் முறையாகிற பதிமூன்றாவது படலமாகும்.