திசையன்விளை: குட்டம் ஆனந்த வல்லி அம்மன் கோயில் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
குட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி அம்மன் கோயில் உள்ளது. நேற்று அதிகாலை 5 மணிக்கு அர்ச்சகர் சுப்பிரமணி பூஜைக்காக கோயில் நடையை திறந்து வைத்து விட்டு, அரைமணி நேரம் கழித்து மீண்டும் பூஜை செய்வதற்காக ஆனந்தவல்லி அம்மன் கோயில் கருவறைக்கு சென்ற போது அம்மன் சிலையில் உள்ள கண்மலர் கீழே விழுந்தும், அம்மனின் சிலை கழுத்து பகுதி உடைபட்டும் இருந்துள்ளது. இதனை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்து, நடந்த சம்பவத்தை கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பெரியவர்களுக்கு தெரிவித்தார். இது குறித்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் உவரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சிலையை பார்வையிட்டு, கைரேகைகளை பதிவு செய்தும், கோயில் அருகில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளையும் ஆய்வு செய்தும், பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.