பதிவு செய்த நாள்
14
ஜூன்
2021
06:06
திருப்பூர்:அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கும் திட்டத்தை செயல்படுத்தும் முன், ஆன்மிகப் பெரியோரின் கருத்துகளை கேட்டறிய வேண்டும் என்று, ஹிந்து முன்னணி யோசனை தெரிவித்துள்ளது. ஹிந்து முன்னணி, மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 100 நாட்களுக்குள் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்;, அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இதை வரவேற்கிறாம்.ஆனால், 100 நாட்களில் செயல்படுத்துவோம் எனக் கூறுவது, பக்தர்களிடம் பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது. அர்ச்சகர்கள், கோவிலில் பூஜை செய்பவர்கள் என்றாலே, அந்தணர்கள் என்ற பொய் பிரசாரத்தை திராவிட கட்சிகள் செய்து வருகின்றன; அதன் நீட்சி தான் இந்த அறிவிப்பு.அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியும் என்பது, ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான். ஒருவர் அர்ச்சகராக, தகுதியுடையவராக இருக்க வேண்டும். ஆகம விதிகளை படிக்க வேண்டும்; ஏழு ஆண்டு பயிற்சி பெற வேண்டும்; பிறகு தான் பூஜை செய்ய முடியும். பிராமணராக இருந்தால் கூட, இத்தகுதிகள் இல்லாவிட்டால் கோவில்களில் பூஜை செய்ய முடியாது.ஒற்றுமையுடன் திகழும் ஹிந்து சமுதாயத்தில் குழப்பத்தை, விளைவிக்கக்கூடாது. இதுபோன்ற திட்டங்களை அறிவிக்கும் முன், ஆன்மிகப் பெரியோர், மடாதிபதிகள் மற்றும் சமுதாய அமைப்பினரின் கருத்துகளை அரசு கேட்டறிய வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.