பதிவு செய்த நாள்
27
ஜூன்
2021
03:06
வேலுார்: சோளிங்கர், லட்சுமி நரசிம்மர் கோவில், மாதிரி ரோப்கார் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில், 108 வைஷ்ணவ தலங்களில் ஒன்றான, லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் உள்ள யோக நரசிம்மரை தரிசனம் செய்ய, 750 அடி உயரமுள்ள மலைக்கு, 1,305 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். நடக்க இயலாத முதியவர்கள் டோலி மூலம் சென்று வந்தனர்.இதனால், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, 9.50 கோடி ரூபாய் செலவில், மலைக்கு செல்ல ரோப்கார் அமைக்கும் திட்டம், 2006ல் துவங்கப்பட்டு சில நாட்களுக்கு முன், 100 சதவீதம் முடிந்தது. மாதிரி ரோப்கார் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. இது குறித்து கோவில் அதிகாரிகள் கூறியதாவது: ஒரு ரோப்காரில், ஆறு பேர் செல்லலாம். ஐந்து ரோப்கார்கள் விடப்படும். இதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. பாதுகாப்பு துறையிலிருந்து தடையில்லா சான்று பெற்ற பின், விரைவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.