கூடலுார்: கூடலுார் அருகே தமிழக- கேரள எல்லையில் உள்ள சேதமடைந்த மங்கலதேவி கண்ணகி கோயில் சீரமைப்பு பணி 3 ஆண்டுகளாக கிடப்பில் விடப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் முடிவு செய்துள்ளனர்.
தமிழக- கேரள எல்லை லோயர்கேம்ப் பளியன்குடி விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். தமிழகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயில் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை இரு மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் ஒவ்வொரு ஆண்டும் சேதமடைந்து தற்போது முழுமையாக அழியும் நிலையை அடைந்துள்ளது.
வழக்கு: இதனை சீரமைக்க மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் கேரள உயர்நீதி மன்றத்தில் 2014 ல் வழக்கு தொடரப்பட்டது. 2016 ஏப். 5 ல், உயர்நீதி மன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பில், கண்ணகி கோயிலை தொல்பொருள் ஆய்வுத் துறையும், கேரள வனத்துறையும் விரைந்து சீரமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இத்தீர்ப்பை செயல்படுத்த முன்வராததால் மீண்டும் அறக்கட்டளை சார்பில் தீர்ப்பை அமல்படுத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை 2018 ஜனமவரியில் நடந்தது. அப்போது, சேதமடைந்துவரும் கோயிலை சீரமைக்க ரூ.39 லட்சத்து 33 ஆயிரத்து 725 க்கு திட்ட மதிப்பீடு செய்து டெண்டர் விடப்போவதாக நீதிமன்றத்தில் கேரளதொல்பொருள் ஆய்வுத்துறை கூறியது. அதன்பின் அந்த மாதமே சீரமைப்பு பணிக்கான டெண்டரும் விடப்பட்டது. துவக்கத்தில் சுற்றுச்சுவர் மட்டும் பெயரளவில் சீரமைத்து விட்டு மற்ற கோயில் பராமரிப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனால் அறக்கட்டளையினர் மீண்டும் வழக்குத்தொடர முடிவு செய்துள்ளனர்.
மேலும் சேதம்: மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை பொருளாளர் முருகன் கூறியதாவது :2020, 2021 ல் கொரோனா தொற்று காரணமாக கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா தடைபட்டது. அந்த நேரத்தில் பராமரிப்பு பணிகள் கூட செய்யாததால் கோயில் மேலும் சேதமடைந்துள்ளது. டெண்டர் விடப்பட்டு 3 ஆண்டுகளாகியும் கோயிலை சீரமைக்க கேரளதொல்பொருள் ஆய்வுத்துறை முன்வராததால் மீண்டும் கேரள உயர்நீதி மன்றத்தில் அறக்கட்டளை சார்பில் வழக்கு தொடர உள்ளோம், என்றார்.