பதிவு செய்த நாள்
28
ஜூன்
2021
02:06
கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை, அங்கு வசிப்பவர்களுக்கு பட்டா போட்டுக் கொடுக்க முடியாது. அதற்கு சட்டத்திலும் இடம் இல்லை என, ஆன்மிக நல விரும்பிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அறநிலையத் துறையின்78வது சட்டப்படி, கோவில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை, எளியவர்கள், முதலில் வாடகைதாரர்களாக மாற்றப்படுவர்.அரசுக்கு உரிமையில்லை அவர்கள் விரும்பினால் காலப்போக்கில் பட்டா வழங்கப்படும் என, சென்னை மாநகராட்சியில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அவரது பேச்சுக்கு, ஆன்மிக நல விரும்பிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்: தமிழக கோவில்களின் சொத்துக்களுக்கு, ஹிந்து சமய அறநிலையத் துறை காப்பாளராக இருந்து நிர்வகிக்கலாமே தவிர, ஏக போக சொந்தம் கொண்டாட முடியாது. சொத்துக்களை விற்கவோ, ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா போட்டு கொடுக்கவோ, அரசுக்கு உரிமையில்லை.மாமன்னன் ராஜராஜ சோழன் எழுதிய பட்டயத்திலேயே, சந்திர சூரியன் உள்ளவரை, அது கடவுளின் சொத்து என்று உள்ளது. அறநிலையத் துறை அமைச்சர், சட்ட விரோத செயலில் ஈடுபடும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக பேசுவது அதிர்ச்சியளிக்கிறது.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு, சமீபத்தில் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பிற்கு நேர் எதிராக, அமைச்சர் பேசியிருப்பது நீதிமன்ற அவமதிப்பு.ஆக்கிரமிப்பாளர்களுக்கு பாதுகாவலன்
நான் அல்ல என்பதை, அரசு தெளிவுபடுத்த வேண்டும்.ஆலய சொத்துக்கள் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றார், அமைச்சர் சேகர்பாபு. உண்மையான ஆவணங்கள் பதிவேற்றப்படுகிறதா என்ற சந்தேகம் உள்ளது. கோவில் ஆவணங்கள் அடிப்படையில், இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளதால், அவை பற்றி எந்த உத்தரவாதமும் இல்லை என குறிப்பிடுவது, மேலும் அதிர்ச்சி அளிக்கிறது.நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு தீர்ப்பு வழங்கிய நாளில், அத்தீர்ப்பு பிரபலமாகி விடக்கூடாது என்ற நோக்கில், வடபழநி முருகன் கோவில் சொத்தை மீட்டுள்ளோம் என்று அமைச்சர், ஸ்டன்ட் அடித்தார்.வெள்ளையர் காலத்தில் இருந்தே, அந்த சொத்துக்கான பட்டா முருகன் பெயரில் தான் உள்ளது.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்குவோம் என்ற அமைச்சரின் பேச்சை, பா.ஜ., வன்மையாக கண்டிக்கிறது.ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ்: கோவில் நிலங்கள், கோவில் வசமே இருக்க வேண்டும்.தீர்ப்புகளுக்கு எதிரானதுகோவிலுக்கு அவசியம், நன்மை என்ற பட்சத்தில் தான், கோவில் நிலங்களை அறங்காவலர்கள் விற்க, கமிஷனர் அனுமதி அளிக்க முடியும். பொது நோக்கத்திற்காக கூட, கோவில் நிலங்களை விற்கக்கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம், 2019ல் நான் தொடுத்த பொதுநல வழக்கில் உத்தரவிட்டுள்ளது.
தற்போது அமைச்சர் சேகர்பாபு, திருக்கோவில் நிலங்களில் நீண்ட காலம் வசிப்பவர்களை வாடகைதாரர்களாக வரன்முறை செய்து பட்டா வழங்குவோம் என, பேசியுள்ளார். இவ்வாறு பட்டா வழங்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அ.தி.மு.க., அரசு, 600 ஏக்கரில் மட்டுமே பட்டா வழங்குகிறோம் என்று அளித்த மனுவையும் நீதிமன்றம் ஏற்கவில்லை.
கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள், உரிய வாடகை ஒப்பந்தம் இல்லாதவர்கள். அவர்களை வரன்முறை செய்கிறோம் என்று, அறநிலையத் துறை பல ஆண்டுகளாக ஒரு மோசடியை அரங்கேற்றி வருகிறது. அவ்வாறு வரன்முறை செய்ய அதிகாரம் கிடையாது.வாடகை நிர்ணயம் என்பது கூட, அறநிலையத் துறையின் அரசாணையை வைத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. இது ஒரு சட்ட மோசடி.
வாடகை நிர்ணயம் செய்ய, பிரிவு 34ன் கீழ் விதிகள் இயற்றப்படவில்லை. அப்படி விதிகள் இயற்றப்படாமல், அந்த விதிகளுக்கு சட்டசபை ஒப்புதல் அளிக்காமல் செய்யப்படும் வாடகை நிர்ணயம் என்ற நடவடிக்கை செல்லுபடியாகாது.எனவே, புதிதாக பதவி ஏற்றுள்ள அறநிலையத் துறை அமைச்சருக்கு, உண்மையான தகவல்கள்; சட்ட நிலைப்பாடுகள்; நீதிமன்றங்களின் தீர்ப்புகள் சரியாக சென்றடையவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.அதனால் தான், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்; பெண் அர்ச்சகர்; கோவில் நிலங்களுக்கு பட்டா; மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எரிந்து போன வீர வசந்தராயர் மண்டபத்தை புதிதாக கட்டுவது; மீட்கப்பட்ட கோவில் நிலத்தில் நடைபெறும் பள்ளியை அறநிலையத் துறை ஏற்று நடத்தும் என்றெல்லாம் அமைச்சர் பேசியுள்ளார்.
இந்த அறிவிப்புகள் எல்லாம் சட்ட விரோதமானவை. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானவை.சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, இம்மாதம் 7ம் தேதி அளித்த தீர்ப்பை நாடே பாராட்டுகிறது. அதுபற்றி அமைச்சரோ, அறநிலையத் துறையோ ஒரு வார்த்தை கூட இதுவரை பேசவில்லை.ஆனால், கோவில் நிலங்கள் அரசுக்கு தேவை என்பது போல, அறநிலையத் துறை கமிஷனர், நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக, சுற்றறிக்கையை, 16ம் தேதி துறை அலுவலர்களுக்கு அனுப்புகிறார்.எனவே இந்த ஆட்சி, சட்டத்திற்கும், நீதிமன்றத்துக்கும் எதிராக செயல்படத் துடிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
அமைச்சர் மறுப்புஅமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளோருக்கு பட்டா வழங்கப்படும் என, நான் எங்கும் கூறவில்லை. கோவில் சொத்துக்கள் எல்லாம், மன்னர்கள், ஜமீன்தார்கள், பெரும் செல்வந்தர்களால் வழங்கப்பட்ட நன்கொடை. அந்த நன்கொடைக்கு பட்டா தர முடியுமா என, சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவை அறிவிப்போம்.கோவில்
நிலங்களில் நீண்ட நாட்களாக குடியிருக்கும் வாடகை தாரர்களை வரன்முறை செய்ய, தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளோம். ஒரு சில இடங்களில் வாடகையை கட்ட மறுக்கின்றனர். இது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.