Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » விக்னேச்வர பிரதிஷ்டா முறை
படலம் 45: விக்னேச்வர பிரதிஷ்டா முறை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2012
03:06

45வது படலத்தில் மஹா கணபதி பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது. முதலில் அமைப்பு முறை முதற்கொண்டு விக்னேச ஸ்தாபனம் கூறுகிறேன் என்று பிரதிக்ஞை, பிறகு சிவாலயம் நிழல் தரும் விருக்ஷ பிரதேசங்களில், மற்ற இடங்களிலும் விக்னேஸ்வரரை ஸ்தாபனம் செய்ய உரிய இடமாக நிரூபிக்கப்படுகிறது. பிறகு விக்னேச ஆலயம் அமைக்கும் முறை அங்கு திக்தேவதை மூர்த்தி அமைக்கும் முறை பலவிதமாக கூறப்படுகிறது. பிறகு சுற்றிலும் பரிவாரம் அமைக்க வேண்டும் என கூறி விஸ்வரூபர் முதலான 8 மூர்த்தீஸ்வரர்களின் பெயர்களை கூறி அந்த மூர்த்தீஸ்வரர் களையோ இந்திராதி திக்குகளை அதிஷ்டித்த 8 பீடங்களையோ அமைக்கவும் என பரிவாரம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. வாயில் படியின் முன்பாக மூஷிகம், அவ்வாறே விகடன் பீமன் என்கிற துவார பாலகர்கள் ஈசான திக்கில் நிர்மால்யதாரியாகிய கும்போதரனையும் அமைக்கவும் என்று பரிவார விதி கூறப்படுகிறது. பிறகு விக்னேஸ்வரரின் மூர்த்திபர்கள் ஆமோதன் முதலான 8 மூர்த்திகளும் ஹஸ்தி வக்த்ரன் முதலான 8 மூர்த்திகளும் பெயரால் குறிப்பிடப்படுகிறார்கள். பின்பு பூதரூபமான துவார பாலகர்கள், மூஷிகம், நிர்மால்யதாரி கும்போதரன், பரிவாரதேவதைகள், இவர்களின் லக்ஷணம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு பலிபீடம், மஹாபீடம் இவை இரண்டும் முன்பு போல் அமைக்க வேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறாக பரிவாரத்துடன் கூடிய வினாயகர் ஆலயம் அமைக்கும் முறை கூறப்பட்டுள்ளது. பிறகு சிலை, கற்சிலை முதலியவான திரவ்யங்களால் ஐந்து தாளம் என்ற அளவு முறையால் விக்னேச பிம்பம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. இங்கு கர்ப்பக்கிரஹ அளவால் பிம்ப அளவை நிரூபித்து, தூண் வாயிற்படி அளவாலும், லிங்க அளவாலுமோ பிம்பம் செய்யலாம் என கூறப்படுகிறது. பிறகு சிரஸ் முதல் பாதம் வரை சரீர அளவு வர்ணிக்கப்படுகிறது. பிறகு விக்னேஸ்வர மூர்த்தி அமைப்பு கூறப்படுகிறது. இங்கு விக்னேசன் நான்கு கை மூன்று கண் அல்லது இரண்டு கண், நின்ற கோலமோ அமர்ந்த கோலமாகவோ செய்யவேண்டும் என்று கூறி நான்கு கைகளிலும் ஸ்தாபிக்க வேண்டிய வஸ்து விஷயத்தில் ஆயுதம் முறை இரண்டு விதமாக கூறப்படுகிறது.

வினாயகர் மட்டுமோ அல்லது சக்தியுடன் கூடியதாகவோ இருக்கலாம் என்று கூறி இரண்டு சக்தியை உடையதும் ஒரு சக்தியை உடையதுமான விநாயகரை அமைக்கும் முறை கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டா முறை கூறப்படுகிறது. முதலில் வினாயகர் மட்டும் சக்தியோடு கூடிய வினாயகரை உடையதும் ஆன மூலமந்திரம் வர்ணிக்கப்படுகிறது. பிறகு கணேஸ்வரி முத்திரை, மூலமுத்திரை இவைகளின் லக்ஷணம் கூறப்படுகிறது. பிறகு முன்பு கூறப்பட்ட காலத்தில் அங்குரார்ப்பணம் முன்னதாக ரத்னநியாஸவிதி நயனோ மீலன விதியும் கூறப்படுகிறது. நயனோன்மீலன விதியில் தேவியுடன் கூடிய வினாயகர் இருந்தால் அந்த தேவிக்கும் நயனோனந் மீலனம் செய்ய வேண்டும். பிறகு பிம்ப சுத்தி, கிராம பிரதட்சிணம், ஜலாதிவாசம் ஜலாதி வாசத்தில் பிரதான கும்பத்தை சுற்றிலும் திக்பாலகர்களை அதிஷ்டித்த 8 கும்பங்களை வைக்கவும் என ஜலாதி வாச முறை கூறப்பட்டுள்ளது. பிறகு யாகத்திற்காக வேதிகை, குண்டம் இவைகளுடன் கூடிய மண்டபம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. பின்பு சில்பியை திருப்தி செய்து பிராம்மண போஜனம் புண்யாஹப்ரோக்ஷணம் செய்து வாஸ்துஹோமம், பூ, பரிக்கிரஹ கர்மாக்களை செய்து ஜலத்திலிருந்து வினாயகரை மண்டபத்திற்கு அழைத்து சென்று ஸ்நான வேதியில் வைத்து ஸ்நபநம் செய்து, ரக்ஷõபந்தனம் செய்து மண்டபத்தில் ஸ்தண்டிலத்திற்கு மேல் அண்டஜம் முதலான ஐந்து சயனங்களால் சயனம் கல்பித்து, அந்த சயனத்தில் வினாயகரை அதிவாசம் செய்யவும். இவ்வாறு சயனாதிவாசம் கூறப்படுகிறது. பிறகு சிகப்பு வஸ்திரத்தால் மூடி வினாயகரின் தலை பாகத்தில் வஸ்த்ர கூர்ச்சத்துடன் கூடியதாக கும்ப ஸ்தாபிக்கவும். கும்பத்தை சுற்றி 8 கடங்கள் ஸ்தாபிக்கவும் கும்பத்தில் மஹா கணபதியையும் அதை சுற்றிலும் இருக்கிற 8 கும்பங்களில் 8 மூர்த்திபர்களையோ பூஜிக்கவும். முன்பு கூறிய முறைப்படி தியானத்துடன் கந்தம், புஷ்பம், நைவேத்தியம் இவைகளால் பூஜிக்கவும் என்று கும்ப அதிவாசமுறை கூறப்படுகிறது. இங்கு இரண்டு அம்பாளுடன் கூடியிருந்தால் விக்னேஸ்வரனின் இரண்டு பக்கத்திலும் இரண்டு வர்த்தனி கும்பம் வைத்து ஒரு அம்பாளுடன் கூடி இருந்தால் வடக்கு பாகத்தில் ஒரு வர்தனி வைத்து பூஜிக்கவும் என்று கூறப்படுகிறது.

பிறகு தத்வதத்வேஸ்வர, மூர்த்தி, மூர்த்தீஸ்வர நியாஸ முறை அதன் பூஜை முறையையும் கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி ஹோமகர்மாவை செய்யவும் என்று ஹோம முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு காலையில் சுத்தமாக உள்ள ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி கும்பம் அக்னி இவைகளை பூஜித்து வினாயகரை எடுத்து ஆலயத்திற்குள் நுழைந்த மானுஷ தைவிக பிம்ப விஷயத்தில் ரத்ன அவுஷதி இவைகளால் நிரம்பிய பிரம்ம சிலையை வைத்து, அந்த சிலைக்கு மேல் வினாயகரை ஸ்தாபனம் செய்யவும். முகூர்த்த லக்னத்தில் மந்திரநியாசம் செய்யவும், சலபிம்பத்தை ஸ்நாநவேதிகையில் வைத்து மந்திர நியாசம் செய்யவும். பிறகு அந்தந்த தேசத்தில் அபிஷேகம் செய்யவும், தத்வதத்வேஸ்வர மூர்த்தி மூர்த்தீஸ்வர நியாசம் செய்யவும். பிறகு ஸ்நானம் நைவேத்தியம் உத்ஸவம் ஆகியவைகளும் செய்யவும். இவ்வாறு பிரதிஷ்டாவிதி கூறப்பட்டது. பிறகு இங்கு பாரதி என்று தேவியுட கூடிய கணேச விஷயத்தில், அவ்வாறு ஏகசக்தி உள்ள கணேசஸ்தாபன விஷயத்திலும் செய்ய வேண்டி விசேஷ முறை கூறப்பட்டு விக்னேஸ்வர ஸ்தாபன பலனை கூறுகிறார். பிறகு நித்யார்ச்சனை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு நித்திய அனுஷ்டானமுடைய ஆசார்யனுக்கு துவார பூஜை துவார பாலார்சனை முன்னதாக நுழைவு முறை முதலில் கூறப்படுகிறது. பிறகு துவார பால விஷயத்தில் விகடபீமனையோ ஸ்வாமிக்கு சொல்லப்பட்ட துவாரபாலார்ச்சனையோ செய்யவும் என விசேஷ பூஜா முறை கூறப்படுகிறது. பிறகு பூதசுத்தி செய்யும் முறை வர்ணிக்கப்படுகிறது. பிற பூஜா விஷயத்தில் ஏகத்ரிம்சத்கலந்யாஸம் செய்யவும். பிறகு அந்தர்யாகம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. ஸ்தான சுத்தி, திரவ்ய சுத்தி, மந்திரசுத்தி முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு பிம்ப சுத்தி முறை கூறப்படுகிறது. நிர்மால்யமான பூஜா திரவ்யங்களை நிர்மால்ய தாரியான குண்பசண்டரிடம் கொடுக்கவும் அல்லது தள்ளுபடி செய்யவும். பிறகு கணேசகாயத்ரி மந்திரம் சந்தர்ப முறையாக கூறப்படுகிறது. உலோகம், சித்திரம், முதலிய பிம்ப விஷயத்தில் சுத்தி செய்யும் முறை விசேஷமாக கூறப்படுகிறது. ஆசனம் அமைப்பது மூர்த்தி பூஜை செய்யும் முறை நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஆவாஹனம் முதலிய மற்ற ஸம்ஸ்கார முறையையும் தூபதீப நைவேத்தியம் வரையிலான பூஜை முறையும் வர்ணிக்கப்படுகிறது.

இந்த பூஜாவிதியில் சந்தனம் முதலான திரவ்யங்களின் அளவு பஸ்ச்சிமதுவார அர்ச்சனையில் கூறப்பட்டபடி கிரஹித்து கொள்ளவும் என கூறப்படுகிறது. பிறகு ஆவரண பூஜை முறை கூறப்படுகிறது. முதலில் பிரதமாவரணத்தில் ஆக்னேயம் நைருதி வாயு ஈசானம் இந்த திக்குகளில் கிழக்கு முதலான திக்குகளிலும் ஈசானாதிகளையும் ஹ்ருதயாதி மந்திரங்களையும் அதற்கு வெளியில் நான்கு ஆவரணங்களிலும் முறையாக ஹஸ்த்திவக்திரன் முதலான 8 மூர்த்திபர்கள் ஆமோதன் முதலானவர்கள் 8 திக்பாலர்கள் அஸ்திரங்கள் இவைகளை பூஜிக்கவும் என கூறப்படுகிறது. ஒன்று இரண்டு மூன்று ஆவரணங்களாலோ பூஜிக்கலாம் என்று கூறப்படுகிறது. பிறகு மறுபடியும் பாட்டுக்களுடன் கூடியதும் நைவேத்ய பலிஹோமத்துடனும் முறைப்படி செய்யலாம் என்று கிரியைகளின் வரிசையை குறிப்பிட்டு ஹோமம விதி சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு நித்யோத்ஸபரிதி விதி கூறப்படுகிறது. ஒரு காலம், இரண்டு காலம், மூன்று காலம், நான்கு காலம், ஐந்து காலம், ஆறு காலம், ஏழுகாலம், எட்டுகாலம் என்றோ அல்லது எப்பொழுதுமோ கணேசனுக்கு நித்ய பூஜை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு சதுர்த்தியில் இஷ்டசித்திக்காக பலவித பக்ஷ்யங்களுடன் கூடிய ஸ்நபன அபிஷேகத்துடன் பூஜை செய்யவும் என்று கூறி ஐந்து, இருபத்தி ஐந்து, ஒன்பது, நாற்பத்தி ஒன்பது ஆகிய எண்ணிக்கையுள்ள ஸ்நபன விஷயத்தில் தேவதைகளை பூஜிக்கும் முறை கூறப்படுகிறது. பிறகு 108,ஸ்நபன விஷயங்களில் தேவதையை பூஜிக்கும் முறையை கூறப்படுகிறது. ஸ்நபன விஷயத்தில் இரண்டு சக்தியுடன் கூடிய வினாயகர் விஷயத்திலும் ஒரு சக்தியுள்ள விஷயத்திலும் விசேஷம் கூறிய பிறகு உத்ஸவத்தில் தமநாரோபணம், பவித்ரோத்ஸவம், தீபாரோபனம், வசந்தோத்ஸவம் மாசோத்ஸவம் நவநைவேத்திய கர்மா இவைகளை முன்பு கூறியபடி செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு பிராயச்சித்தம் ஜீரணோத்தாரணம் முதலியவை முன்பு போல் அனுஷ்டிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு உத்ஸவத்தில் கொடியில் மூஷிகத்தையோ விருஷபத்தையோ வரையவும், சிவோத்ஸவத்திலும், வினாயகருக்காக உத்ஸவம் நித்தியம் செய்யவும் என்று விசேஷம் கூறப்பட விநாயகர் உத்ஸவ விஷயத்தில் சக்ராஸ்திரம், திரிசூலாஸ்திரம், விக்னேசாஸ்திரம் இவற்றில் ஒன்றை ஏற்றுக் கொள்ளவும் என்று கூறப்படுகிறது. உத்ஸவ பிரதிமை லக்ஷணப்படி அமைக்கவும். உத்ஸவ விஷயத்தில் சொல்லப்படாத பலி திரவ்யம், ஹோமம், திரவ்யம் மற்ற எல்லாம் சிவனுக்கு கூறப்பட்டபடி செய்யவேண்டும் என்ற விஷயங்கள் கூறப்படுகின்றன. பிறகு கணேச மந்திரத்தினால் வச்யம், உச்சாடனம், வித்வேஷனம் மாரணம் ஆகிய கர்மாக்களையும் பவுஷ்டிக சாந்தி கர்மாக்களையும் ஸ்தம்பனம் முதலிய கர்மாக்களையும் சாதிக்கலாம் என கூறப்படுகிறது. கணேசனின் பிரதிஷ்டை எல்லா இடத்தில் பாலஸ்தாபனத்துடன் கூடியதாகவோ பாலஸ்தாபனம் இன்றியோ செய்யலாம் என விசேஷ முறை கூறப்படுகின்றன. முடிவில் சைவாலயம் அமைக்கும் முறையின் முதலிலோ விக்னேஸ்வரரையோ ஸ்தாபிக்கவும். இவ்வாறு நாற்பத்தி ஐந்தாவது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. அமைப்பு முறை முதற்கொண்டதாக வினாயகரின் பிரதிஷ்டையை கூறுகிறேன். பட்டணம், எட்டு திசைகள் அதன் முடிவு, அதன் இடைவெளி முதலிய இடங்களில் வினாயகர் ஆலய இருப்பிடமாகும்.

2. சிவாலயத்திலும், எட்டு திக்கிலும், விருப்பமுள்ள இடத்திலும் மண்டபம் முதலிய இடங்களிலும் நிழல் தரும் குளிர்ச்சியான மரங்களின் கீழ்பிரதேசங்களிலோ அல்லது எல்லா ஆலயத்திலுமோ

3. கடைவீதி, தேரோடும் வீதி, வீடு இவைகளிலோ, மற்ற எந்த இடத்திலேயும் அமைக்கலாம். வினாயகர்க்கு நமக்கு விருப்பமான திசையை நோக்கி யுள்ளதான முகம் அமைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

4. பிறகு ஒரு முழம் முதல் முப்பத்தி மூன்று முழு சுற்றளவு உள்ளதாகவும் ஒரு பாகம் முதல் ஒன்பது பாகம் பூமி உடையதாக அணுக வேண்டும்.

5. விசேஷமாக கஜப்ருஷ்டம் போலும் மற்ற உருவமுடையதாகவோ திசைகளில் (கோபுரத்தில்) வினாயகரையுடையதாகவும் ஆக்னேயாதி கோணங்களில் மூஞ்சூறையுடையதாகவும் கோபுரம் அமைக்க வேண்டும்.

6. கணங்களையுடையதாகவோ, ஸ்கந்த ரூபங்களையுடையதாகவோ அமைப்பது அதமாலயம் ஆகும். முன்பு போலவே கர்பந்யாஸமும், ஆத்யேஷ்டிகை பூஜையுடன் கூடியதாக வேண்டும்.

7. இந்திராதி மூர்த்தியுடன் கூடியதாகவோ, மத்தியில் ஸ்தூபி கும்பத்துடன் கூடியதாகவோ அல்லாமலோ, முன் சொன்ன முறைப்படி ஆலய அமைப்புடன் கூடியதாகவோ அமைக்க வேண்டும்.

8. பிரகாரம் மண்டபமிவைகளுடன் கூடியதும், மண்டபம் முதலியவைகளால் அலங்கரிக்கப்பட்ட தாகவும், மண்டப உருவமாகவோ, கொட்டகைப் பந்தலமைப்பு உள்ளதாகவோ வினாயகரின் ஆலயத்தை அமைக்க வேண்டும்.

9. சுற்றிலும் பரிவார மூர்த்தி கூறப்பட்டுள்ளது. விசேஷமாக அந்த விபரமும் கூறப்படுகிறது. விச்வரூபர், விசாலாக்ஷர், அக்ஷயர், மதவிப்ரமர்

10. உன்மத்தர், லலிதன், பீமன், தீக்ஷ்ண தம்ஷ்ட்ரன் என்ற முறையாக வினாயகரின் அஷ்ட மூர்த்தீசர்களையோ அல்லது அவர்களை பீடரூபமாகவோ இந்திராதி திக்குகளில் உள்ளவர்களாக

11. முன்பு சொன்ன பிரகாரம் அமைக்கவும். திவாரத்தின் முன்பக்கம் மூஞ்சூறையும் திவாரத்தின் இருபக்கமும் விகடன், பீமன் என்ற திவார பாலகர்களை அமைக்க வேண்டும்.

12. நிர்மால்யதாரியான கும்ப சண்டரை ஈசான திக்கில் ஸ்தாபிக்கவும். ஆமோதன், ப்ரமோதன், ஸூமுகன், துர்முகன் என்றும்

13. அவிக்ணன், விக்னராஜன், பக்ஷ்யாசீ, பஞ்சஹஸ்தன் ஆகிய இவர்கள் அஷ்டமூர்த்திபர்கள் ஆவர், அவர்களை வேறு விதமாகவும் கூறப்படுகிறது.

14. ஹஸ்திவக்த்ரன், ப்ரலம்போஷ்டன், விக்னேசர், கணாதிபர், வினாயகர், ஏகதந்தர், பக்ஷ்ய ப்ரியன், அஹிமேகலர்.

15. ஆகிய இவர்கள் வினாயகரைப் போலுள்ளவர்களாக விக்னேச்வரனின் அஷ்ட மூர்த்திபர்களாவர். வாயிற்படியின் இருபக்கமிருக்கும் திவாரபாலகர்களை பூதரூபமாகவும் இரண்டுகை உடையவர்களாகவும்

16. இடது கையில் உலக்கையும், வலது கையில் தண்டத்தையும் தரித்தவர்களாகவும், உக்ரமான தித்திப் பற்களையுடையவராகவும், சிங்கத்தின் தலைமேல் ஒரு காலை வைத்திருப்பவர்களாகவும்

17. சிவந்த ரூபமும், ரவுத்ர உருவம், விகாரமான முகத்தை உடையவர்களாகத் திவாரபாலகர்களை அமைக்கவேண்டும். மூஷீகமானது, புகைவர்ணம், சிவந்த கண், அழகான தித்திப்பல் இவைகளையும்

18. நீண்டவால், நான்கு கால்கள், சலங்கை மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதாக அமைக்கவேண்டும். கும்போதரம், (கும்பசண்டர்) நான்கு கை, உளி, சூலம், கத்தி, தண்டம் இவைகளை தரித்தவராகவும்

19. சிவந்தவர்ணராயும், நன்கு பிரகாசிப்பவராகவும், பத்ர பீடத்தில் அமர்ந்திருப்பவராக அமைக்கப்படவேண்டும். வெண்ணிறமானவர்களாகவும், பெரிய சரீரம், உக்ரமானவர்களாகவும் பலவித அழகான ஆடை தரித்தவர்களாகவும்.

20. பாசம், அங்குசம், தன்னுடைய தந்தம், துடையில் வைத்த கை இவைகளையுடைய கைகளை உடையவர்களாயும் வினாயகமூர்த்திக்கு எதிர்நோக்கி உள்ளவர்களாக பரிவார தேவதைகளை அமைக்க வேண்டும்.

21. பரிவார தேவதைகளின் நடுவில் ÷க்ஷத்ர பாலகர்கள் கூறப்பட்டுள்ளன. பலிபீடம் மஹாபீடம் முன்பு போல் அமைக்க வேண்டும்.

22. பீடத்தின் எட்டுதளங்களிலும் ஆமோதன் முதலிய எட்டு மூர்த்திகளை பூஜிக்கவேண்டும். கர்ணிகை பூதேசனையும் பீடத்தின் வெளியில் திக்பாலர்களையும், தசாயுதங்களையும் பூஜிக்க வேண்டும்.

23. ஹே பிராம்மணோத்தமர்களே, வினாயகரின் அமைப்பு முறை சுருக்கமாக கூறப்படுகிறது. கேளுங்கள், கற்சிலை முதலான திரவ்யங்களால் உத்தமமான பஞ்சதாளம் என்ற அளவால் வினாயகரை செய்ய வேண்டும்.

24. கர்பக்ருஹ அளவில் ஐம்பதாக பிரிக்கப்பட்ட இடத்தில் ஐந்தாவது அம்சத்திலிருந்து ஒருபாகம் அதிகமாக முப்பதாவது பாகம் வரையில் உள்ள அளவு கர்பக்ருஹ அளவாக உதாரணம் காட்டப்பட்டுள்ளது.

25. தூண்களின் அளவாலும், வாயிற்படி அளவாலும் கர்பக்ருஹ அளவு செயற்பாலது. லிங்கம் முதலியவைகளின் அளவுப்படியே அல்லது பிம்ப லக்ஷணப்படியோ செய்தல் வேண்டும்.

26. கேசம் முதல் கால் அடிபாகம் வரை அறுபத்தி நான்கு அம்சமாக பிரிக்க வேண்டும். தலைப்பாகை பாகம் ஓரம்ச மாத்ரம், கேசம் இரண்டு அங்குலத்தினாலும்

27. பன்னிரண்டங்குலத்தால் முகம், இரண்டங்குலத்தால் கழுத்துமாக கூறப்பட்டுள்ளது. அதிலிருந்து இதயம் வரை பதினொன்றங்குலமாகும்.

28. ஹ்ருதயத்திலிருந்து தொப்பூழ்வரை பன்னிரண்டங்குலம், குஹ்ய பிரதேசம் ஐந்து அங்குலமாகும். அவ்வாறே முழந்தாள் வரை ஐந்தங்குலம், முழந்தாளின் நீளம் மூன்றங்குலமாகும்.

29. முழந்தாளின் கீழ் பிரதேசம், துடையின் சமமான அளவாகும். பாததளத்தின் உயரம் இரண்டு மாத்ரையாகும். கேசத்திலிருந்து கண் சூத்ரம் வரை நான்கங்குலமாகும்.

30. தந்தத்தின் அடிபாகத்திலிருந்து முழந்தாள் வரையில் துதிக்கையின் நீளமாகும். தந்தத்தின் நீளத்திலிருந்து நான்கு மாத்திரையளவு அந்த நுனியின் அளவாகும்.

31. வலது அல்லது இடது பாகத்தில் ஒரு தந்தம் அமைக்கவும். தலையில் கும்ப சுற்றளவு ஒவ்வொன்றும் மூன்றங்குல சுற்றளவாகும்.

32. கண்ணானது காதின் அடிபாகம் வரையிலாக நான்கு அங்குலமாக கூறப்படுகிறது. பத்து மாத்ரையளவில் காதின் அகல பாகமும், ஒன்பது அங்குலம் காதில் நீளமாகவும் செய்ய வேண்டும்.

33. கையிடுக்கு இரண்டின் இடைவெளி பதினைந்து அங்குலமாக கூறப்பட்டுள்ளது. கையிடுக்கிலிருந்து மேல்பக்கவாட்டுக் கையின் இடைவெளி ஆறங்குலமாகும்.

34. நடுசரீரம் (தொந்தியின்) சுற்றளவு பதினான்கு அங்குலமாகும். இதயத்திலிருந்து தொப்பூழ் அடிபிரதேசம் வரை பத்து அங்குலமாக கூறப்பட்டுள்ளது.

35. நாபிக்கு கீழ் பிரதேசத்திலிருந்து குஹ்ய பிரதேசம் வரை எட்டங்குலமாகும். இரண்டு துடையும் எட்டங்குலம், முழந்தாள் மூட்டு மூன்றங்குலமாகும்.

36. இரு முழந்தாளும் காலின் அடிபாகம் வரை எட்டங்குலமாகும். கஜவக்த்ரனாகவும் கணங்களுக்கு அதிபதியாயும், பூதாகார உருவ அமைப்பும் பெரிய வயிறு படைத்தவராகவும்

37. பாம்பை பூணூலாக அணிந்தவராகவும், கனத்த உருண்டையான துடை, முழந்தாள் உடையவராகவும், கருப்பானவரும் (நீலநிற ஆம்பல் பூபோல் பிரகாசிப்பவரும்) நான்கு கைகளால் பிரகாசிப்பவருமாகவும்

38. வலப்பாக அல்லது இடப்பாகத்தில் வளைந்த துதிக்கையையுடையவராகவும் தாமரை பீடத்தில் அமர்ந்திருப்பவராகவும், தன்னுடைய வலது பக்க இரண்டு கையில் தன் தந்தத்தையும் கோடாலியையும் தரித்திருப்பவராகவும்

39. லட்டு, அக்ஷமாலையையோ, நீலோத்பவ புஷ்பத்தையோ இடது கையில் வைத்திருப்பவராகவும் சிவப்பு வஸ்திரம் அல்லது கருப்பு வஸ்திரம் அல்லது மஞ்சள் வஸ்திரம் தரித்தவராகவோ

40. மஞ்சள் சட்டையணிந்தவராகவும், கிரீட மகுடத்தால் பிரகாசிக்கிறவராயும், வெண்மையான பூணூலையணிந்தவரும், எல்லா ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவறாகவும்

41. தன் கொம்பான தந்தத்தையும் அங்குசத்தையும் வலது கரங்களிலும் இடது கைகளில் பாசம், லட்டு இவற்றை தரித்திருப்பவராகவும், நின்ற கோலத்திலோ அல்லது அமர்ந்த கோலத்திலோ வினாயகரை அமைக்க வேண்டும்.

42. மூன்று கண்களால் பிரகாசிப்பவராகவோ, இரண்டு கண்களை உடையவராகவோ, தாமரையிலமர்ந்த கோலத்திலோ, பீடத்திலமர்ந்தவாறோ, மூஞ்சூறின் மேலமர்ந்தவாறோ

43. விருப்பப்பட்ட ஆஸனத்திலமர்ந்தவாறோ, திருவாசியால் அலங்கரிக்கப்பட்டவராகவோ, சக்தியுடன் கூடியவராகவோ, தனிமையானவறாகவோ வினாயகரை வடிவமைக்க வேண்டும்.

44. வினாயகர் வலது இடதுபாகம் முறையே பாரதீ, ஸ்ரீ என்ற இரண்டு சக்திகளோடு கூடியவராகவோ அல்லது ஒரு சக்தியோடு கூடியவராகவோ அமைக்கவும், அந்த தேவியின் (லக்ஷணம்) அடையாளம் கூறப்படுகிறது.

45. ஆஸநத்தில் அமர்ந்தவளாகவும், ரத்ன கிரீடமகுடங்களால் அலங்கரிக்கப்பட்டவளாகவும் கரு நிறமுள்ளவளாகவும் உள்ள சக்தியை தரித்திருப்பராயும் திசைகளை ஆடையாக உடைவரும் ஆன

46. வினாயகரின் மடியில் அமர்ந்தவளும் எல்லா ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும் திசைகளை வஸ்திரமாக உடையவளும், அழகான திருமுகத்துடனும் இரண்டு கைகளை உடையவரும்

47. எல்லா அவயவ ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும், விக்னேச்வரீ என்ற பெயரையுடையவளும் இடது கையில் பாசமும் வலது கையால் (வினாயகரின்) குஹ்ய பிரதேசத்தை

48. தொட்டுக் கொண்டிருப்பவளும் வினாயகரும், அம்பாளின் குஹ்ய பிரதேசத்தை தொட்டுக் கொண்டு இருப்பவராகவும், ஆன மந்த்ர நாயக வினாயகரை தியானிக்க வேண்டும். நான்கு கை, முக்கன், பாசம், அங்குசத்தை தரித்திருப்பவரும்

49. கரும்பு தரித்த கையுடன் இடது கையால் தேவி குஹ்யத்தையும் துதிக்கையாலும் குஹ்யத்தையும் தொட்டு அல்லது கரும்பையோ தொட்டுக் கொண்டதாகவோ

50. இவ்வாறாக வினாயகரை பாவித்து அந்த மந்திரங்களால் பிரதிஷ்டை செய்ய வேண்டும். இரண்டாவது வரிசையான கவர்கத்தின் மூன்றாவது எழுத்தான ஹ வும் முதல் ஸ்வரமான (அ)வும்

51. பிந்து நாதம் சேர்ந்த ம் என்ற எழுத்தும் விநாயகரின் பீஜ மந்திரமாகும் பதிமூன்றாவது அச்செழுத்தின் முடிவான அவு என்ற உயிரெழுத்தும் சேர்ந்ததாகவும் வினாயகரின் பீஜ மந்திரத்தை உச்சரிக்கலாம்.

52. கவர்க்கத்தின் மூன்றாவது எழுத்தான க் ம் ர என்ற எழுத்துடன் ஈ என்ற உயிரெழுத்தும் சேர்ந்ததாகவும் க்ரீ என்றும் ஹ்ருதய எழுத்தான ஹகாரத்துடன் ரீ என்று சேர்த்து ஹ்ரீ என்றும்,

53. லக்ஷ்மீ பீஜம் என்கிற ஸ்ரீம் வாக்பீஜமான க்லிம் சேர்ந்ததாக உபயோகிக்கவும். பஞ்ச பிரம்ம ஷடங்க மந்திரங்களை மூலமந்திரத்தை அனுசரித்து கூற வேண்டும்.

54. வக்ரதுண்டாய ஹும் என்று ஹ்ருதய மந்திரங்களால் ஹ்ராம் என்ற எழுத்தாலான ஆறு எழுத்துக்களை கொண்ட நம: ஸ்வாஹா, வஷட், ஹூம், வவுஷட் ஆகியவை முடிவுடன் கூடியதாக ஹ்ருதயம் முதலான மந்திரங்களை

55. பட்காரத்துடன் கூடியதாகவும் கூறவும். இரண்டாவது வர்க்கத்தின் மூன்றாவது எழுத்தான க் அதனுடன் ஆறாவது வர்க்கத்தின் முடிவான ம் சேர்த்து

56. ஏழாவது எழுத்து வர்க்கத்தின் மூன்றாவது எழுத்தான ல் ம், அதே வர்க்கத்தின் நான்காவது, எழுத்தான வ் அந்த வர்க்கத்தின் இரண்டு, ஒன்றாவது எழுத்தான ர ம், ய ம் ஆகிய இந்த ஐந்து (க்,ல்,வ்,ர்,ய்) இவைகளுடன் பதினான்காவது உயிரெழுத்தான அவு என்ற எழுத்துடன்

57. பிந்து நாதமானம் சேர்ந்ததே தசாக்ஷரம் என்ற பீஜமந்திரமாகும். க காரத்துடன் பிரம்ம மந்திரம், அங்கமந்திரங்களை முறையாக கூறவும். (கவும், லவும், வவும், ரவும், யவும்)

58. விரி என்ற சப்தத்தை மூன்று முறை கூறி (விரி விரி விரி) கணபதிம் என்ற சொல்லையும் வரதம் வரத என்ற சொல்லையும் வரத, வரத என்றும் கூற வேண்டும்.

59. ஸர்வ லோக வசம் என்பதுடன் ஆநய என்ற பதத்தையும் ஸ்வாஹா என்ற பதத்தையும் கூறுவது இஷ்டமாகும். இது சக்தி கணபதியின் மூலமந்திரமாகும். (ஓ விரி விரி கணபதே வரத வரத ஸர்வ லோக வசமாநய ஸ்வாஹா)

60. ஓம்காரம் முதற்கொண்டு ஹ்ருதயபீஜ மந்திரமான காம் கா என்ற எழுத்துடன் சேர்ந்ததாக ஹ்ருதயாதி மந்திரங்களை கூற வேண்டும்.

61. கணசாதி பதத்துடன் கூடியதும் பிரதான மந்திரமாகும். (கணேசாதிப:), இக்ஷüததி ஸ்வர்ண த்வீபம், கல்பத்ருமம்

62. ஸிம்மாஸநம் இவைகள் சக்தி கணபதியின் ஆசன மந்திரங்களாகும். வலது கையின் அடிபாகத்தை மூக்கின் மேல் வைத்து

63. சிறிது நுனியை வளைப்பதுபோல் செய்வது கணேச்வரீ முத்ரையாகும். வேறான மூலமுத்ரை கூறப்படுகிறது. நடுவில் விரலை விரித்து

64. மோதிர விரலையும், ஆள்காட்டி விரலையும் சிறிது வளைத்து கட்டை விரலை கொம்பு போல் செய்து காண்பிப்பது போல் மூலமுத்ரையாகும்.

65. இந்த மூலமுத்ரையால் உத்தமமான ஆசார்யன் எல்லா கிரியைகளிலும் உபயோகிக்கவும். பிறகு அங்குரார்ப்பணத்துடன் கூடியதாக பிரதிஷ்டையை செய்ய வேண்டும்.

66. முன்பு கூறப்பட்ட பிரதிஷ்டாகாலத்தில் பீடத்தில் நவ ரத்ன ந்யாஸமோ இல்லையெனில் பஞ்ச ரத்ன ந்யாஸமோ, அல்லது தங்கமோ, தங்க ஊசியுடன் கூடியோ

67. முன்பு கூறியபடி முறையாக இந்திராதி தேவர்களை நினைத்து நியாஸம் செய்யவும். பிறகு (பத்ம) ஜலாதிவாசம் செய்து நயனோன்மீலனம் செய்ய வேண்டும்.

68. பாத்திரத்திலுள்ள நெய், தேன் இவைகளால் ஹ்ருதய மந்திரத்தினாலும் தங்க ஊசியால் நனைத்து நயோன்மீலனத்தை திரையிட்டுச் செய்து தான்யங்களை காண்பிக்க வேண்டும்.

69. வினாயகர் தேவியுடன் கூடி இருந்தால் தேவிக்கும் தனியாக நயோன்மீலனம் செய்யவும். பிறகு பிம்பசுத்தி செய்து கிராம பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

70. லம்ப கூர்ச்சத்துடன் கூடியதாக ஜலாதிவாசம் ஹ்ருதய மந்திரத்தினால் செய்யவும். (பிம்பத்தை) சுற்றிலும் அஷ்டதிக்பாலர்கள் அதிஷ்டிதமான எட்டு கும்பங்களை ஸ்தாபிக்க வேண்டும்.

71. யாகசாலைக்காக மண்டபம் ஆலயத்தின் முன்போ இருபக்கத்திலோ அமைக்க வேண்டும். தெற்கிலோ மேற்கிலோ, வடக்கிலோ, அழகுபடுத்தப்பட்ட மண்டபம் அமைக்க வேண்டும். பத்ம குண்டத்துடன் கூடியதாக இருக்க வேண்டும்.

72. குண்டங்கள் ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையில் அமைக்கவேண்டும். வ்ருத்தகுண்டம் சதுரஸ்ரம், அஷ்டாஸ்ரம் முதலிய குண்டங்களையோ அமைக்க வேண்டும்.

73. எல்லா யாகத்திலும் வ்ருத்த குண்டம் பிரதானமாகும். முன்பு கூறப்பட்ட முறைப்படி மண்டபம் அமைக்க வேண்டும்.

74. சில்பியை திருப்தி செய்வித்து அனுப்பி பிராம்மண போஜனம், புண்யாஹவாசனம் செய்து பிறகு வாஸ்து ஹோமம் செய்ய வேண்டும்.

75. முன்பு கூறியமுறைப்படி பூபரிக்ரஹமும் செய்து, ஜலாதி வாசத்திலிருந்து விநாயகரை எடுத்து வந்து ஸ்நான வேதிகையில் வைக்க வேண்டும்.

76. வடக்கிலுள்ள மண்டபத்தில் முன்புகூறிய முறைப்படி ஸ்நபநம் செய்யவும். ரக்ஷõபந்தனம் செய்து முடிவில் மந்திரந்யாஸம் செய்ய வேண்டும்.

77. சயன வேதிகையில் ஸ்தண்டிலத்தின் மேல் மயிற்தோகை முதலான திரவ்யங்களால் ஐந்து வித சயனம் அமைக்கவும் அல்லது சுத்த வஸ்திரங்களால் சயனம் கல்பித்து விநாயகரை சயன அதிவாஸம் செய்யவும்.

78. சிவப்பான இரண்டு வஸ்திரங்களால் போர்த்தி கும்பந்யாஸம் செய்யவும். வினாயகருடைய தலைப்பக்கம், நூல்சுற்றி கூர்ச்சத்துடன் கூடியதாகவும்

79. கும்பத்தை நல்ல வஸ்திரம், பலா, மாவிலை, அரசிலையுடன் கூடியதாகவும், பஞ்சரத்னோதகமுமோ அல்லது ஸ்வர்ணோதம், மா÷ஷாதகமுமோ

80. மாதுளம் பழத்துடன் கூடியதான எட்டு கடங்களை சுற்றிலும் ஸ்தாபிக்கவும். வஸ்திரம் தங்கம், சந்தனம், புஷ்பம் இவைகளுடன் கூடியதாக பூஜிக்க வேண்டும்.

81. பூதசுத்தியுடன் கூடியதாக வித்யா தேஹ கல்பனமும், கணேசரை ஆவாஹித்தவராகவும் முன்பு கூறப்பட்ட தியான முறையுடன் சந்தனம், புஷ்பம் இவைகளை கொண்டு பூஜிக்க வேண்டும்.

82. பரிவார கும்பங்களில் ஹஸ்தி வக்த்ரன் முதலானவர்களையோ அல்லது ஆமோதன் முதலானவர்களையோ, நைவேத்யம் வரையிலாக உத்தமமான ஆசார்யன் பூஜிக்க வேண்டும்.

83. இரண்டு தேவியுடன் இருந்தால் இரண்டு பக்கத்திலும் வர்த்தனீ கும்பத்தை ஸ்தாபிக்கவும். ஒரே தேவியுடன் இருந்தால் வடக்கு திக்கில் மட்டும் ஒரு கும்பத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

84. ஆத்மதத்வம், வித்யாதத்வம், சிவதத்வங்களை அதன் அதிபர்களுடன் கூடியதாக பூஜிக்க வேண்டும்.

85. கணேசன் முதலான தத்வ தத்வேஸ்வரர்களை சதுர்த்தி விபக்தியை முடிவாக கொண்டு அதனுடன் நம: என்ற பதத்துடன் கூடியதாக பூஜிக்கவும். இந்த முறைப்படியே ஆத்மதத்வ, வித்யா தத்வ, சிவதத்வேஸ்வரர்களையும் பூஜிக்க வேண்டும்.

86. மூர்த்தி மூர்த்தீச்வரர்களையும் பூஜிக்க மூர்த்திகள் முன்பு கூறியபடியாகும். இந்திராதி திக்குகளில் ஹஸ்தி வக்த்ராதிகளையோ, ஆமோதாதிகளையோ மூர்த்தியதிபர்களாக பூஜிக்க வேண்டும்.

87. பஞ்சகுண்ட பக்ஷத்தில் மூர்த்தீசர்கள் எட்டு மூர்த்தீசர்களில் முதன்மையாக உள்ள ஐந்து மூர்த்தீசர்களாகும். மூர்த்தி, பஞ்சப்ரம்மம், ஷடங்கங்கள், வித்யாதேஹம், மூலமந்திரம் இவைகளையும் பூஜிக்க வேண்டும்.

88. சந்தனம், புஷ்பாதி திரவ்யங்களால் மூர்த்தி கும்பங்களை பூஜித்து ஹோமம் செய்யவேண்டும். முன்பு கூறப்பட்டுள்ள ஆபரணங்களுடன் கூடிய ஆதிசைவ குலத்தில் உதித்த (பிறந்த)

89. ஆசார்யன் மூர்த்தீபர்களுடன் கூடி ஹோம கர்மாவை செய்யவும். நான்கு திசைகளில் நான்கு வேதபாடங்களையும் ஆக்னேயாதி கோணங்களில் மூலமந்திர ஜபமும் செய்ய வேண்டும்.

90. குண்டஸம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரம் இவைகளை அக்னிகார்ய முறைப்படி செய்யவேண்டும். கிழக்கு முதலான திசைகளில் தத்புருஷன் முதலான மூர்த்தி மந்திரங்களையும் ஆக்னேயம் முதலான கோணங்களில் ஹ்ருதயம் முதலான மந்திரங்களையும்

91. பிரதான குண்டத்தில் ஈசனான விநாயகரையும் எல்லா தேவர்களையும் மூர்த்தி மூர்த்தீச்வரர்களுடன் ஆவாஹித்து சந்தனம் முதலான திரவ்யங்களால்

92. சமித்து, நெய், அன்னம், பொறி எள், அப்பம், வெல்லம், யவை முதலிய திரவ்யங்களால் த்ருப்தி செய்விக்கவேண்டும். தத்வ தத்வேச்வரன், மூர்த்தீ மூர்த்தீ ச்வரர்களுக்கும் ஹோமம் செய்யவும்.

93. சாந்தி கும்ப பிரோக்ஷணம், அந்தந்த மந்திரங்களின் ஜபம், தர்ப்பையால் ஸ்பரிசிப்பது ஆகியவை ஒவ்வொரு பாகத்திலும் செய்ய வேண்டும்.

94. பிறகு அதிகாலையில் எழுந்து மூர்த்திபர்களுடன் கூடி ஆசார்யன் சுத்திகளை முடித்து கொண்டு சயனாதி வாசத்திலிருந்து விநாயகரை எடுத்து கும்பம், அக்னி இவைகளை பூஜிக்க வேண்டும்.

95. பிராயச்சித்த நிமித்தமாக அகோர மந்திரத்தை நூறு ஆஹுதி செய்யவும். பூர்ணாஹுதி செய்து ஆசார்யன் ஆலயத்தை அடைய வேண்டும்.

96. மானுஷ பிம்பம், தெய்விக பிம்பமாக இருப்பின் முன்புபோல் சம்ஸ்காரங்களை செய்யவேண்டும். பிரம்ம சிலையை முன்பு கூறிய மந்திரத்தினால் நவ ரத்னம், ஓஷதிகள் இவைகள் நிறைந்ததாக செய்ய வேண்டும்.

97. பிறகு விநாயகரை பிரம்ம சிலையுடன் கூடியதாக பிரதிஷ்டை செய்ய வேண்டும். முன்புபோல் விநாயகரின் மூலமந்திரத்தை உச்சரித்துக் கொண்டு விநாயகரை ஸ்தாபித்து

98. நல்ல முஹூர்த்த லக்னத்தில் மந்திர ந்யாஸம் செய்யவும். சல உற்சவ பிம்பமாக இருப்பின் ஸ்நான வேதிகையிலேயே மந்திரநியாஸம் செய்ய வேண்டும்.

99. பிம்பத்தின் முன்பாக கடங்களை வைத்து கும்பத்திலிருந்து மூல மந்திரத்தை பிம்ப ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும். மற்ற கும்பங்களில் இருந்து மந்திரங்களால் பீடத்தை சுற்றிலும் நியாஸம் செய்ய வேண்டும்.

100. அந்தந்த கும்பதீர்த்தங்களால் அந்தந்த தேசத்தில் அபிஷேகம் செய்யவும். தத்வதத்வேச மூர்த்தீ மூர்த்தீஸ்வர நியாஸம் முன்பு போல் செய்ய வேண்டும்.

101. முடிவில் ஸ்நபனாபிஷேகமும், நைவேத்யம், உற்சவம் (திருவீதிஉலா) செய்ய வேண்டும். விநாயகர், பாரதி, ஸ்ரீ என்ற இருதேவிகளுடன் கூடிஇருந்தால்

102. அதற்கு சொல்லப்பட்ட முறைப்படி உத்தமமான ஆசார்யன் பிரதிஷ்டை செய்ய வேண்டும். விக்னேச்வரீ என்ற தேவியுடன் கூடி இருந்தால் அந்த தேவியின் பெயரால் ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

103. கும்பத்தின் பக்கத்திலுள்ள வர்த்தினீ மந்திரத்தால் பூஜிக்கவும். அம்பாளின் ஹ்ருதயத்தில் விசேஷமாக இந்த மந்திரத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

104. இவ்வாறாக விநாயக பிரதிஷ்டையை யார் செய்கிறானோ அவன் புத்திமானாகவும் ஆகிறான், ஆயுளை விரும்புபவன் ஆயுளை அடைகிறான், தனத்தை விரும்புபவன் தனவான் ஆகிறான்.

105. கல்வியை விரும்புபவன் சுத்தமான கல்வியையும், அழகான பெண்ணை (ஸ்திரீ) விரும்புபவன் அழகான பெண்ணையும், புத்திரர்களை, சவுபாக்கியம், ஆரோக்யம், புகழ், வீர்யம், ஐஸ்வர்யம், சுபம் இவைகளை இந்த லோகத்திலும் அனுபவித்து

106. மேலுலகத்தில் மோக்ஷத்தையும் வினாயகருடைய ஸ்தாபனத்தால் அடைகிறான். விநாயகரின் பூஜை முறையை சுருக்கமாக கூறுகிறேன். ஹேமுனிபுங்கவர்களே கேளுங்கள்,

107. கட்டாயமாக காலையில் எழுந்து (சவுசம்) காலைக் கடன்களையும், ஸ்நானத்தையும் முடித்து ஸந்தியா வந்தனம், மந்திரதர்ப்பணம் இவைகளை முன்பு போல் செய்து

108. ஆலயத்தை அடைந்து நமஸ்காரம் செய்யவும், ஆசமனம் செய்து ஸகளீகரணம் ஸாமாந்யார்க்கியம் உடைய ஹஸ்தத்தினால் ஆசார்யன்

109. திவாரத்தை (வாயிற்படி) ஜலத்தால் பிரோக்ஷணம் செய்து விகடனையும், பீமனையும் பூஜித்து, தேவருக்கு கூறப்பட்ட விமலன், சுபாஹூ இவர்களையும் பூஜிக்க வேண்டும்.

110. திரையை ஹ: என்று கூறி அர்ச்சித்து வலது காலால் நுழைந்து வாஸ்த்வீசனை பூஜித்து, தன்னுடைய ஆசனத்தில் வடக்குமுகமாக அமர்ந்து

111. ஆத்மாவை சக்தியுடன் இணைத்து உறுதி நிலை தளர்ந்ததாக பாவிக்க வேண்டும். சக்தியிலிருந்து உண்டான அம்ருதத்தினால் நனைந்த சரீரமுடையவனாக (கூட)

112. அஸ்திர மந்திரத்தினால் கையை சுத்தி செய்து கொண்டு சந்தனத்தினால் அலங்காரம் செய்து கொண்டு ஈசன், தத்புருஷன், அகோரன், வாம தேவ, ஸத்யோஜாத மந்திரங்களை ஐந்து விரல்களிலும் நேத்ர மந்திரத்தையும் உள்ளங்கையிலும்

113. மூலமந்திரத்தையும் உள்ளங்கையிலும், நியஸித்து ஹ்ருதயம், சிரஸ், சிகாகவசம், என இந்த மந்திரங்களை முறையாக பெரிய விரல் முதற்கொண்டு விரல் நுனிகளில் நியாஸம் செய்து மூலமந்திரத்தையும்

114. வித்யாதேஹத்தையும் நியாஸம் செய்து அந்தந்த மந்திரங்களால் சரீரந்யாஸம் செய்து பிறகு விநாயகருக்கு செய்வது போல் ஏக திரிம்சத்கலாந்யாஸம் செய்து கொள்ளவும்.

115. அக்ஷரந்யாஸம் செய்து கொண்டோ, செய்யாமலோ இவ்வாறாக மந்திர மயமான சரீரம் ஏற்படுத்தி விநாயகரை போன்று தன்னை தியானித்து அந்தர்யாகம் செய்து கொள்ளவும்.

116. அல்லது சிவமந்திரங்களால் சிவ சரீர பாவனை செய்து கொள்ள வேண்டும். விநாயகரை ஹ்ருதயம், நாபி, த்வாதசாந்தமான பிந்து ஸ்தானம் இவைகளில் பீஜுத்து ஹோமம் செய்து தியானம் செய்து (ஹ்ருதயம் பூஜை, நாபிஹோமம், பிந்துதியானம்)

117. பிறகு ஸ்தான சுத்தி செய்து, விசேஷார்க்யம் தயார் செய்து ஸமர்பிக்க வேண்டும். முன்பு கூறப்பட்ட திரவ்யங்களுடன் கூடியதாகவோ சந்தனம், புஷ்பம், அக்ஷதை இவைகளுடன் கூடியதாகவோ

118. பாத்யம், ஆசமனத்தையும் அவ்வாறே அர்க்யத்தை மட்டுமோ தயார் செய்து கொண்டு அர்க்ய ஜலத்தினால் ஒவ்வொரு த்ரவ்ய சமூகத்தையும் பிரோக்ஷணம் செய்து

119. ஹ்ருதயம் முதலான மந்திரங்களால் அபிமந்திரிக்கப்பட்ட ஆத்மாவை எல்லா தேவர்கள் அதிஷ்டிதமாக ஸ்மரித்து, மந்திரசுத்தி, பிம்ப சுத்தியையும் செய்யவும்.

120. நிர்மால்ய பூஜையை செய்து வக்ரதுண்டாய வித்மஹே என்றும் ஹஸ்திவக்த்ராய தீமஹி என்றும் பிறகு

121. தன்னோ தந்தி என்ற பதமும் பிறகு ப்ரசோதயாத் என்ற பதத்தையும் சேர்த்து கூறி சாமான்யார்க்யத்தால் பிரோக்ஷித்து பூஜிக்கவும். (வக்ரதுண்டாய) வித்மஹே ஹஸ்திவக்த்ராய தீமஹி, தந்தோ தந்தி - ப்ரசோதயாத்

122. ஹ்ருத மந்திரத்தினால் நிர்மால்ய புஷ்பத் த்ரவ்யங்களை எடுத்து வெளியில் உள்ள நிர்மால்யதாரீ கும்பசண்டரிடம் ஸமர்ப்பிக்க அல்லது வெளியில் போட்டு விட்டு முன்பு கூறியபடி பிம்ப சுத்தி செய்யவேண்டும்.

123. உலோக பிம்பமாயிருப்பின் பர்வ காலங்களில் அபிஷேகம் செய்ய வேண்டும். சித்திரபிம்பம் முதலியவைகளுக்கு கண்ணாடியில் பூஜை செய்யும் க்ரியையால் சுத்தி ஏற்படுவதாக எண்ண வேண்டும்.

124. அஸ்த்ர மந்திரத்தினால் இளங்காற்றாலோ விசிறியாலோ, சித்திராதி பிம்பங்களை சுத்தி செய்ய வேண்டும். இவ்வாறாக ஆத்ம, பூ, த்ரவ்ய, மந்திர, பிம்ப சுத்தியாகும்.

125. மத்தியில் ஆஸனம் கல்பித்து பிரணவம், தர்மாதிகளையும், அதர்மாதிகளையும், அதச்சதனம், ஊராத்வச்சதனத்தையும் மத்தியில் பத்மத்தையும்

126. பிரணவயமான தீர்த்தத்தில் பத்ம கர்ணிகையை மஞ்சள் நிறமாக பாவித்து பூஜிக்க வேண்டும். அம்பாளுடன் கூடி இருந்தால் அதற்கு சொல்லப்பட்ட முறைப்படி ஆஸனம் அமைத்து பூஜிக்க வேண்டும்.

127. பிறகு கணாசநாய என்றும் கணமூர்த்தயே என்றும் ஆவாஹித்து கணபதி முன்புபோல் மந்திரங்களால் வித்யாதேஹம் கல்பித்து

128. பிரணவத்துடன் விக்னேச மூலமந்திரத்தினால் ஆவாஹனம் செய்து ஹ்ருதய மந்திர ஸம்புடிதமாக புஷ்பாஞ்சலி ஹஸ்தமாக பிம்பத்தில் சேர்க்க வேண்டும்.

129. ஹ்ருதய மந்திரத்தினால் நிஷ்டுரையால் முதலானவை செய்து அவகுண்டனமும் செய்யவும், ஹ்ருதயம் முதல் அஸ்திரம் வரை உள்ள மந்திரங்களால் முத்ரைகளை காண்பித்து மஹாமுத்ரையையும் காண்பிக்கவும்.

130. ஹ்ருதய மந்திரத்தினால் பாதங்களில் பாத்யமும், முகத்தில் ஆசமனமும், ஈசான வினாயகரை ஸ்மரித்து (தலையில்) அர்க்யமும் கந்த புஷ்பதூபமும் கொடுக்க வேண்டும்.

131. ஹ்ருதய மந்திரத்தினால் பஞ்சாம்ருதத்துடன் கூடியதாகவோ, அல்லாமலோ ஸ்நானம் செய்விக்க வேண்டும். வஸ்திரத்தால் பிம்பத்தை துடைத்து பிம்பத்திற்கு வஸ்திரம் ஸமர்பிக்க வேண்டும்.

132. முகத்தில் ஆசமனம் கொடுத்து சந்தனம், அகில், கோரைகிழங்கு, பச்ச கற்பூரம் இவைகளின் தூள்களுடன் சேர்ந்ததாகவோ அல்லது சந்தனம் மட்டுமோ ஸ்வாமிக்கு சாற்றி (அர்பணித்து)

133. கருமையான அகிலுடன் கூடிய தூபத்தையோ அல்லது வெட்டிவேர், சந்தனம், நிர்யாஸம் என்ற தூப திரவ்யத்தையும் அதனுடன் கற்பூரமிவைகளுடன் கூடி ஹ்ருதய மந்திரத்திற்கு தூபம் கொடுத்து

134. பலவிதமானதும், வாஸனையுள்ளதும், எல்லா ருதுக்களிலும் உண்டாவதும், (தற்போது) அப்பொழுது மலர்ந்ததுமான புஷ்பங்களை (பூ) முன்பு போல் வினாயகர்க்கு அர்ப்பணிக்க வேண்டும்.

135. நல்லெண்ணையாலோ, நெய்யாலோ பிரகாசிக்கின்ற தீபத்தை ஹ்ருதய மந்திரத்தினால் ஸமர்பித்து, வெண் பொங்கல் முதலியவைகளுடன் கூடிய நைவேத்யத்தை நிவேதனம் செய்ய வேண்டும்.

136. சந்தனம் முதலியவைகளின் அளவு மேற்குத்வார பூஜையில் கூறப்பட்டுள்ளபடி ஏற்றுக் கொள்ள வேண்டும். பிறகு தூப தீபத்தின் முடிவில் ஆவரண பூஜையை செய்ய வேண்டும்.

137. ஆக்னேயம், நைருதி, வாயு, ஈசான திக்குகளில் ஹ்ருதயம் முதலான மந்திரங்களையும் அதன் வெளியில் ஹஸ்தி வக்த்ரன், ஆமோதன் முதலானவர்களையும் பிறகு

138. அதன் வெளியில் இந்திராதிகள், தசாயுதங்களையும் நன்றாக பூஜிக்கவும். ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்ணிக்கையுள்ள ஆவரணங்களாலோ விநாயகரை பூஜித்து

139. மறுபடியும் தூப, தீபம் மந்திர ஜபங்களை செய்யவும். நைவேத்யம், பலி ஹோமங்களை முன்பு கூறப்பட்டுள்ளபடி செய்ய வேண்டும்.

140. புரசமித்து நெய், அன்னம், பொறி, அவல் இவைகளை மூலமந்திரத்தினால் நூறு ஐம்பது, பத்து என்ற எண்ணிக்கைளிலோ ஆசார்யன் ஹோமம் செய்ய வேண்டும்.

141. மூல மந்திர ஆஹூதியின் பத்தில் ஒரு பங்காக அங்க மந்திரங்களால் ஹோமம் செய்யவும். பிறகு நித்யோத்ஸவம் விநாயகர் உத்ஸவ பேரத்தினால் செய்யவும்.

142. முன்பு கூறிய முறைப்படி அந்த பிம்பத்தில் வினாயகரை பூஜிக்கவும். புஷ்பம், அன்னம், அக்ஷதை ஆகிய லிங்க உருவங்களில் ஹ என்று கணாஸ்திரம் என்ற அஸ்திரத்தை பூஜிக்கவும்.

143. நித்யோத்ஸவம் சலபேர பிம்பத்துடன் கூடியதாகவோ அல்லாமலோ செய்யவும். முன்பு கூறிய முறைப்படி ஆலய (பிரகாரத்தில்) பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

144. அல்லது பாதுகார்ச்சனையுடன் கூடியதாகவோ ஆலய பிரவேசம் செய்யலாம். ஒருகாலம், இரண்டு காலம் அல்லது மூன்று, நான்கு, ஐந்து காலம்

145. ஆறு, ஏழு, எட்டு என்ற எண்ணிக்கையுள்ள ஸந்தியா காலத்திலோ எப்பொழுதுமாவது வினாயகரை அர்ச்சிக்கவும். இவ்வாறாக அறிந்து பூஜைக்குரிய அங்கங்களால் பிரதி தினம் வினாயகரை பூஜிக்க வேண்டும்.

146. வினாயகரின் நித்ய பூஜையானது போகத்தையும் மோக்ஷத்தையும் கொடுக்க கூடியதாகும். வினாயகரின் பூஜை இஷ்ட சித்தியின் பொருட்டு சதுர்த்தி திதியில் செய்ய வேண்டும்.

147. பலவித பக்ஷணங்கள் ஸ்நபனம் முதலியவைகளுடன் கூடியதாகவும் செய்ய வேண்டும். ஸ்நபனத்தை முன்பு போல் செய்ய வேண்டும். ஆனால் மத்யகும்பத்தில் கணேச்வரரையும்

148. ஐந்து கும்ப ஸ்நபனத்தில் ஆமோதன் முதலியவர்களை நான்கு திக்குகளிலும் நவகலச (9) ஸ்நபனத்தில் ஆமோதன் முதலிய எட்டு மூர்த்திகளையும் பூஜிக்கவும். இருபத்திஐந்து கலச ஸ்நபனத்தில்

149. லோக பாலர்களையும் விச்வரூபர் முதலிய எட்டு தேவதைகளையும் எட்டு திக்கிலும் எட்டு திக்கின் இடைவெளியிலும் பூஜிக்க வேண்டும். லோகபாலர்கள், ஆயுதங்கள் (அஷ்ட) வசுக்கள் முதலிய எட்டு பேர்களையும்

150. முன்பு ஆச்ரிதமான (சொல்லப்பட்ட) ஆமோதன், விச்வரூபன், ஹஸ்தி வக்த்ரன் என்ற மூன்று எட்டு தேவதைகளையும் வரிசையாக நாற்பத்தி ஒன்பது கலச ஸ்நபன பூஜையில் தேவதைகளாக பூஜிக்க வேண்டும்.

151. நூற்றி எட்டு கலச ஸ்நபனத்தில் வினாயகர் ஸஹஸ்ரநாமத்தில் உள்ள முதல் நூறு அர்ச்சனைகளை பூஜிக்க வேண்டும். ஆயிரத்து எட்டு (1008) கலசத்தில் (ஸஹஸ்ரநாமத்தில் உள்ளபடி) எல்லா தேவதைகளையும் பூஜிக்க வேண்டும்.

152. பிறகு ஆசார்யன் எல்லா கும்பங்களிலும் விநாயகரையோ (மட்டும்) பூஜிக்க வேண்டும். பாரதீ, ஸ்ரீ என்ற இரு தேவியுடன் வினாயகர் கூடி இருந்தால் இரண்டு வர்த்தினியையும் ஸ்தாபிக்க வேண்டும்.

153. ஒரு தேவியுடன் கூடியதாக இருந்தால் வர்த்தினியை வடக்கு பாகத்தில் ஸ்தாபிக்க வேண்டும். இந்த ஸ்நபனத்தில் கூறப்படாததை முன்பு ஸ்நபனவிதியில் சொல்லி உள்ளபடி செய்ய வேண்டும்.

154. உத்ஸவமானது, தமனாரோஹனம் என்ற மருக்கொழுந்து சாத்துதல், பவித்ரோத்ஸவம் முதலிய கிரியைகளும் தீபாவளி (கார்த்திகை) வஸந்தோத்ஸவம், மாதங்களில் கூறப்பட்ட மாஸோத்ஸவமும்

155. நவநைவேத்ய கர்மாவும் விசேஷமாக பிராயச்சித்தமும் செய்ய வேண்டும். ஜீர்ணம் முதலியவைகளால் அடையாளம் அடைந்திருந்தால் மற்ற க்ரியைகளை (அதற்கு) முன்பு போல் செய்ய வேண்டும்.

156. மேலும் கொடியில் மூஷீகத்தையோ, வ்ருஷபத்தையோ வரைய வேண்டும். சிவோத்ஸவத்திலும் பிரதி தினமும் விக்னேசோத்ஸவம் செய்யலாம்.

157. கொடி ஏற்றுதல், ஹோமம், உத்ஸவபலி, இவையின்றி வலம் வருதல் மட்டும் செய்யலாம். சக்ராஸ்திரமோ அல்லது த்ரிசூலாஸ்திரம் இவற்றை வினாயகரின் அஸ்திர தேவராக செய்யலாம்.

158. முன்பு கூறிய லக்ஷண அமைப்புடன் வினாயகர் உத்ஸவ பிம்பம் அமைக்க வேண்டும். உத்ஸவத்தில் பலித்ரவ்யம் ஹோம திரவ்யங்களான பொருட்கள் எவை

159. இங்கு கூறப்படவில்லையோ அந்த திரவ்யங்களை சிவோத்ஸவத்தில் சொல்லியபடி கிரஹிக்க வேண்டும். வச்யம், உச்சாடனம், வித்வேஷம், மாரணம், பவுஷ்டிகம்

160. சாந்திகம், ஸ்தம்பனம் முதலிய கர்மாக்களை இந்த வினாயக மந்திரத்தினால் செய்ய வேண்டும். எல்லா வியாதியும் ஏற்பட்ட பொழுது இந்த விநாயக மந்திரத்தினால் சாந்தப்படுத்த வேண்டும்.

161. இந்த வினாயக பிரதிஷ்டையானது எல்லா இடத்திலும் ஆத்ய பால ஸ்தாபனத்துடன் கூடியதாகவோ இல்லாமலோ பிரதிஷ்டை செய்யலாம். சிவாலயத்தில் முதலில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற காரணத்தால் பாலாலயமின்றி வினாயகரை ஸ்தாபனம் செய்யவும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் விக்னேச்வரப்ரதிஷ்டா முறையாகிய நாற்பத்தைந்தாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar