பதிவு செய்த நாள்
10
ஜூலை
2021
02:07
சென்னை: சமூக வலைதளங்களில் ஏழு ஆண்டுகளாக பொய்யான தகவல்களை பதிவிட்டு, கோவில் ஊழியர்கள் பணிக்கு இடையூறாக இருக்கும் ரங்கராஜன் நரசிம்மன், அரங்கநாத பெருமாளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என, அறநிலையத் துறை கூறியுள்ளது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் கோசாலைக்கு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட கால்நடைகள், இலவசமாக பிறருக்கு வழங்கப்பட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.இது குறித்து அறநிலையத் துறை அளித்து உள்ள விளக்கம்:கோவில் கோசாலையில் உபரியாக உள்ள பசுக்கள், கன்றுகள், காளை மாடுகளை பராமரித்தல் தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதை செயல்படுத்துவது தொடர்பாக, ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் சுற்றறிக்கை படியும், உபயமாக பெறப்படும் கால்நடைகளில், கோவில் பயன்பாட்டிற்கு போக மீதம் உள்ளவை, இலவசமாக வழங்கப்படுகின்றன.அவை, அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அர்ச்சகர்கள், பூசாரிகள், திருமடங்கள், ஜெயின் அமைப்புகள், உழவாரப் பணி செய்து வரும் நம்பகத் தன்மையுடைய மன்றங்கள், அரசு அங்கீகாரம் பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, மாவட்ட கலெக்டர் வாயிலாக வழங்கப்படுகின்றன. இதன்படி, 2009 முதல் 1,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. அதன்படி தான் இந்த ஆண்டும், 60 கால்நடைகள் வழங்கப்பட்டுள்ளன.எனவே, ஏழு ஆண்டு களாக அவதுாறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி, கோவில் ஊழியர்கள் பணிக்கு இடையூறாக இருக்கும் ரங்கராஜன் நரசிம்மன், அரங்கநாத பெருமாளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.