ஆன்மிக தலமான மேல்மலையனூரில் நுழைவு வாயில் அமைக்கப்படுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2012 10:06
செஞ்சி : ஆன்மிக தலமான மேல் மலையனூரில் ஊர் எல்லையில் நுழைவு வாயில் அமைக்க வேண்டும்.ஆன்மிக ஸ்தலங்கள் உள்ள ஊரின் துவக்கத்திலேயே, ஆன்மிக ஸ்தலத்திற்குள் நுழைவதை நினைவு படுத்தும் வகையில் நுழைவு வாயில் நம்மை வரவேற்கும். இதன் மூலம் பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் ஆன்மிக ஸ்தலத்தில் இருக்கின்ற எண்ணமும், பக்தி உணர்வும் ஏற்படும். இதன் பிறகு ஆன்மிக ஸ்தலத்தை அசுத்தம் செய்வதற்கும், மற்றவர்களுடன் வீண் பிரச்னைகள் செய்வதற்கும் மனம் சஞ்சலப்படும். இதன் மூலம் ஆன்மிக ஸ்தலத்தில் ஓரளவிற்கு தூய்மையும், அமைதியும் கிடைக்கும். இதன் காரணமாக சமீப காலமாக சிறிய கோவில்கள் உள்ள கிராமங்களிலும் நுழைவு வாயில் அமைத்து அழகு படுத்து கின்றனர். மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் பிரசித்தி பெற்ற ஆன்மிக ஸ்தலமாக உள்ளது. இங்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். இதுவரையில் மேல்மலையனூருக்குள் வரும் எந்த வழியிலும் நுழைவு வாயில் இல்லை. இது பக்தர்களுக்கு ஒரு குறையாகவே உள்ளது. மேல்மலையனூர் ஊருக்குள் நுழையும் வளத்தி சாலை, அவலூர்பேட்டை சாலை, கொடுக்கன்குப்பம் சாலை, சிறுதலைப்பூண்டி சாலையில் ஊரின் நுழைவு பகுதியில் கலை நயத்தை வெளிப்படுத்தும் வகையிலும், பக்தி உணர்வு ஏற்படும் வகையிலும் நுழைவு வாயில் அமைக்க இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.