அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருமேனிநாதர் சுவாமி கோயிலில் ஆடித்தபசு விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, திருமேனிநாதர் மற்றும் துணைமாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், கொடிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றம் நடந்தது. ஆடித்தபசு விழா பத்து நாட்கள் நடைபெறும். சுவாமி மற்றும் அம்மன் குதிரை, சிம்மம், அன்னம், காமதேனு, ரிஷப வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். இந்த மாதம் 27ஆம் தேதி மாலை 4 மணிக்கு, திருமேனிநாதர் ரிஷப வாகனத்தில் புறப்பட்டு, குண்டாற்றில் எழுந்தருளி உள்ள துணை மாலை அம்மனுக்கு தபசு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.