பதிவு செய்த நாள்
17
ஜூலை
2021
02:07
புதுடில்லி:கான்வட் யாத்திரைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை, உத்தர பிரதேச அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
உ.பி., ஹரியானா, டில்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சிவ பக்தர்கள், உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார், ரிஷிகேஷ் ஆகிய பகுதிகளுக்கு யாத்திரையாக வந்து, கங்கை நீரைச் சுமந்து, தங்கள் ஊருக்குச் சென்று, அங்குள்ள கோவில்களில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்; இது, கான்வட் யாத்திரை என அழைக்கப்படுகிறது.
அனுமதி: கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, இந்த யாத்திரை ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டும் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக, யாத்திரை ரத்து செய்யப் படுவதாக உத்தரகண்ட் அரசு அறிவித்தது.எனினும் உத்தர பிரதேசத்தை ஆளும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு, கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கான்வட் யாத்திரை நடக்கும் என, தெரிவித்தது.
இந்த விவகாரத்தை தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், உத்தர பிரதேச அரசுக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், கொரோனா பரவல் குறையாத நிலையில், கான்வட் யாத்திரைக்கு மாநில அரசுகள் அனுமதி வழங்கக் கூடாது. எனினும் மக்களின் உணர்வுளை மதித்து, அவர்களுக்கு கங்கை நீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றார். உத்தர பிரதேச அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கான்வட் யாத்திரைக்கு முழு தடை விதிக்கக் கூடாது. முக்கியமான இடங்களில் மட்டும் யாத்திரை நடக்க அனுமதிக்க வேண்டும் என, கூறப்பட்டது. மத உணர்வுஇதன் பின், நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: மக்களின் நலனும், அவர்கள் உயிர் வாழ்வதும் தான் மிகவும் முக்கியம். மக்கள் நலமுடன் வாழ்வதற்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டியது அரசுகளின் கடமை. மத உணர்வுகளாக இருந்தாலும் அது, அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இருக்கக் கூடாது.அதனால், கான்வட் யாத்திரைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை, உ.பி., அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை, 19ம் தேதி அன்று உ.பி., அரசு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.