பதிவு செய்த நாள்
11
ஜன
2026
01:01
திருப்பூர்: கொங்கு மண்டல ஆடல்வல்லான் அறக்கட்டளை, திருப்பூர் சபரி டைமண்ட்ஸ் இணைந்து நடத்தும், மார்கழி அருள் மழை என்ற தலைப்பிலான திருமந்திர சிந்தனை வளர்க்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நேற்று இதன் இரண்டாவது நாள் நிகழ்ச்சியில், வெள்ளகோவில், சிவலோகநாதர் கோவில் பக்தர் குழுவினரின் கோலாட்டம் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, ஆன்மிக சொற்பொழிவாளர் சிவகுமார், ‘உள்ளம் பெருங்கோவில், ஊனுடம்பு ஆலயம்’ என்ற தலைப்பில், பேசியதாவது:
இந்த உலகத்தில் மட்டுமல்ல எந்த உலகத்திலும், இங்கு மட்டுமல்ல வேறு எங்கும், இன்று மட்டுமல்ல என்றுமே சிவனுக்கு ஒப்பான தெய்வமே இல்லை. ஒப்பான தெய்வமே இல்லை எனும் போது, சிவனை விட உயர்வான தெய்வம் குறித்து கேள்விக்கே இடமில்லை. பாண்டிய நாட்டின் அரசனும், மந்திரிசபையும், மக்களும் சமண மதத்தினராக இருந்த போதும், ஒற்றைப் பெண்ணாக அந்நாட்டுக்கு மணம் புரிந்து சென்ற சைவ சமயம் சார்ந்த மங்கையற்கரசி அந்நாட்டையே சைவ சமயத்துக்கு மாற்றினார்.
அந்த காலத்திலும், தற்போதும், மத மாற்ற சக்திகள் பெண்களைத் தான் குறிப்பாக மத மாற்றம் செய்ய முயற்சிக்கின்றனர். ஒரு பெண் மதம் மாறிவிட்டால் ஒரு சமுதாயமே மாறிவிடும். நம் மதத்தை, நம் தெய்வத்தை நாம் என்றும் மறந்து விடக்கூடாது. நம் வீட்டில் நம் குழந்தைகளை தெய்வம் குறித்த பாடல்களை பாட வைக்க வேண்டும். அதனை பாடி இறைவனை வழிபாடு செய்ய வேண்டும்.
கோவிலுக்குச் சென்று தேங்காய் பழம் படைத்து, அபிேஷகம் செய்து மட்டுமே தெய்வத்தை அறிந்து கொள்ளலாம்; ஆனால், அருள் பெற முடியாது. பல்வேறு சமய புலவர்கள், தெய்வப் புலவர்கள் பல்லாயிரம் பாடல்களை நமக்கு அருளியிருக்கின்றனர். இறைவன் விரும்புவது அவனை நினைந்து நாம் மனமுருகி வழிபடுவதைத் தான். அந்த வகையில் இறைவனை வழிபாடு செய்ய நமக்கு திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர் ஆகியோர் பல்லாயிரம் பாடல்களைத் தந்துள்ளனர்.
உடம்பு என்பது ஆலயம்; அதன் உள்ளே உள்ளம் என்பது கோவில். அதனுள் இறைவன் குடி கொண்டுள்ளான். வாய்வழியாக நாம் பாடும் பாடல்கள் தான் அக்கோவிலுக்குள் நாம் நுழையும் வழி. வெளியே இயங்கும் ஐம்புலன்களையும் அடக்கினால் உள்ளத்துக்குள் உள்ள ஐந்து விளக்குகளும் ஒளி பெறும். அங்கு ஆத்மார்த்தமாக வீற்றிருக்கும் இறைவனை வழங்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.