கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்து வருகிறது.
நேற்று முன் தினம், அருளாளர் ஆதிசங்கரர் என்ற தலைப்பில், பேராசிரியை குரு ஞானாம்பிகா பேசியதாவது:
ஹிந்து சமயத்தை உயிர்ப்பிக்க வந்தவர் ஆதிசங்கரர். எங்கோ தென்கோடியில் பிறந்து, கற்பனைக்கு எட்டாத அபூர்வங்களை செய்தவர். பாரதத்தை மூன்று முறை சுற்றி வந்தவர். அத்வைதத்தை நிலை நாட்டியவர்.
இறைவனின் பிம்பமே நாம் என வழிகாட்டியவர். 32 ஆண்டுகள் மட்டுமே மண்ணில் வாழ்ந்தாலும், மகத்தானவற்றைச் செய்து முடித்தவர். அவரைப் பற்றிய நூல்கள், ‘சங்கர விஜயம்’ என அழைக்கப்படுகின்றன. சன்யாசம் பெறுவதற்கு முன்பே பற்றற்றவராக விளங்கினார்.
சைவம், வைணவம், சாக்தம், காணபத்யம், கவுமாரம், சவுரம் என ஷண் மதங்களைப் புனரமைத்தார்.
பிரம்மதத்துவமே நிலையானது; மற்றதெல்லாம் மாறக்கூடியது என்றார். மடங்களை ஸ்தாபித்தார். ஹிந்து மதம் செழிக்க வந்த மகான் அவர்.
இவ்வாறு, அவர் பேசினார்.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் கிருஷ்ணன், பாரதீய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் உட்பட பலர் பங்கேற்றனர்.