பதிவு செய்த நாள்
21
ஆக
2021
12:08
தொண்டாமுத்தூர்: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால், அடிவாரத்தில் நின்று பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று, பிரதோஷம், வரலட்சுமி விரதம், முகூர்த்த தினம் என்பதால், அதிகாலை முதலே ஏராளமான மக்கள், உள்ளூரில் உள்ள கோவில்களில் வழிபாடு செய்தனர். வரலட்சுமி விரதத்தையொட்டி, பெண்கள் விரதமிருந்து வழிபாடு செய்தனர். முக்கிய கோவில்களில், பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்த பக்தர்கள், அடிவாரத்தில் உள்ள படிக்கட்டு பகுதியில் நின்று, கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர். முகூர்த்த தினம் என்பதால், ஏராளமான புதுமண தம்பதிகளும், மருதமலை அடிவாரத்தில் உள்ள படிக்கட்டில் நின்று வழிபட்டு சென்றனர்.