பதிவு செய்த நாள்
25
ஜூன்
2012
10:06
உடுமலை பகுதியில் அமராவதி ஆற்றங்கரையோரம், உப்பாறு படுகை கிராமங்கள் மற்றும் மலைப் பகுதிகளில், மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவில்கள் உள்ளன. இவற்றில் இருந்து சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முந்தைய காலத்தில் இக்கோவில்களில் மூன்று கால பூஜை, திருவிழாக்கள் நடைபெறும் வகையில், எண்ணற்ற ஏக்கர் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டது தொடர்பான தகவல்கள் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன. ஆனால், காலப்போக்கில், கோவில் நிலங்கள் செல்வாக்கு மிகுந்த நபர்களால் கொஞ்சம், கொஞ்சமாக அபகரிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
உடுமலை கண்டியம்மன் கோவில்: இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள உடுமலை கண்டியம்மன் கோவில் ஆவணங்களின் படி, 127 ஏக்கர் நிலம் மட்டுமே தற்போது உள்ளன; இதுவும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்குண்டுள்ளன. உப்பாறு படுகையில், கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன், பெரியபட்டி ரங்கநாத பெருமாள் கோவில், குடிமங்கலம் சோழீஸ்வரர் கோவில் உள்ளிட்டவை பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்டியம்மன் கோவிலில் மூன்று கருவறைகளும், இரண்டு கோபுரங்களும் உள்ளன. ஒரு கர்ப்ப கிரகத்தில் பெரிய கண்டியம்மன் சிலையும், மற்றொரு கர்ப்ப கிரகத்தில் உற்சவர் சிலையும், மூன்றாவது கர்ப்ப கிரகத்தில், சின்ன கண்டியம்மன் சிலையும் உள்ளது. இக்கோவில் "கற்றலி முறையில், கல் தூண்களாலும், மேற்கூரை முழுவதும் கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. பழங்கால சிற்ப வேலைப்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில், தூண்களிலும், மேற்கூரைகளிலும் முன்னோர் வாழ்க்கை முறையை விளக்கும் சிற்பங்கள் அமைந்துள்ளன.சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை , ஆண்டுதோறும் மக நட்சத்திரத்தின் போது, கண்டியம்மன் தேர்த் திருவிழா நடைபெற்றது; காலப்போக்கில் இது தடைபட்டது. அழகிய வேலைப்பாடுகளுடன், பல தூண்களுடன் கூடிய முன் மண்டபம் சரிந்து விழுந்துள்ளது. மேற்குப் பகுதியில் இருந்த நடன மண்டபம் இடிந்து விழுந்து, சிற்பங்கள் மறைந்து சிதிலமடைந்து வருகின்றன. பழங்கால கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக, போற்றி பாதுகாக்க வேண்டிய கோவில், பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது.
ஆக்கிரமிப்பில் நிலங்கள்: கண்டியம்மன் கோவிலுக்கு மன்னர் காலத்தில் பூஜை, துப்புரவு பணி, வாத்தியங்கள் இசைப்பதற்காக சுமார் 300 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. நித்திய பூஜை தேவைக்காக கிணற்றுடன் கூடிய நந்தவனமும் அமைக்கப்பட்டிருந்தது. கோவிலை பராமரிக்க ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்தது போன்ற காரணங்களால், கோவில் பராமரிப்பின்றி உள்ளது. "நிலத்தை ஆக்கிரமித்து அனுபவித்துள்ளோர், உடனடியாக அவற்றை ஒப்படைக்க வேண்டும்; இல்லையெனில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பல முறை எச்சரிக்கை விடுத்தனர்.ஆனால், நிலங்களை யாரும் ஒப்படைக்காததால், இந்நிலங்களை பயன்படுத்துவோரை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி, இணை ஆணையர் மூலமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலங்களை பயன்படுத்துபவர்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, தற்போது வழக்கும் நடைபெற்று வருகிறது.
அறநிலையத்துறை நடவடிக்கை: பெயர் வெளியிட விரும்பாத, இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கண்டியம்மன் கோவில் நிலங்கள் மீட்க வழக்கு தொடரப்பட்டு, நடைபெற்று வருகிறது. வழக்கு முடியும் வரை, ஏலம் விடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடிமங்கலம் சோழீஸ்வரர் கோவிலுக்கு, 100 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளது. இவை விற்பனை செய்யப்பட்டதாக, பொதுமக்கள் தரப்பில், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்துசமய அறநிலையத்துறை சார்பில், தக்கார் நியமிக்கப்பட்டு, நிலங்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட நபர்கள் ஐகோர்ட் சென்று, தக்கார் நியமனத்துக்கு தடை வாங்கியுள்ளனர். இதை எதிர்த்து இந்து அறநிலையத்துறை சார்பில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவில் நிலங்கள் குறித்து வழக்குகள் நடைபெறுவதால் எப்பணிகளும் மேற்கொள்ள முடியாது. வழக்கு முடிந்ததும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குற்றச்சாட்டுக்கு மறுப்பு: கண்டியம்மன் கோவிலில் பூஜை செய்து வருவோரில் ஒருவரான அத்தப்ப பூஜாரியின் பேரன் தங்கவேல் கூறுகையில், ""கண்டியம்மன் கோவிலில் எங்களது முன்னோர்கள் தான் பூஜை செய்து வந்தனர். ஒன்பது பேர், மூன்று மாதம் வீதம் பிரித்து, கோவில் பூஜைகளை செய்து வந்தனர். ஒன்பது பேர் தான் பரம்பரை பூஜாரிகள் என்று, ஆவணங்களில் உள்ளது. "தேவதாய இனாம் அடிப்படையில், நிலங்கள் வழங்கப்பட்டன. விசேஷ பூஜை, பூக்கள் சாகுபடிக்கு நந்தவனம், வாத்தியம் வாசிப்போருக்கு என, நிலங்கள் வழங்கப்பட்டன. ஊழியத்துக்காக வழங்கப்பட்ட நிலங்களை பயன்படுத்தியே வாழ்ந்து வருகிறோம். நிலங்களை விற்பனை செய்யவோ, ஆக்கிரமிக்கவோ இல்லை. கோவிலில் பூஜை செய்வதால், நிலங்களை பயன்படுத்தி வருகிறோம்; கோவிலிலும் மூன்று கால பூஜைகள் நடைபெறுகிறது. கோவில் நிலங்களை ஒப்படைக்க கோரி, அதிகாரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். நிலங்கள் எங்கள் பயன்பாட்டில் உள்ளது என, எங்கள் கருத்தை தெரிவிப்போம்,என்றார்.
புதுப்பிக்க கோரிக்கை: இந்து மக்கள் கட்சி மாநில செய்தி தொடர் பாளர் ரமணன் கூறும்போது,"" உப்பாறு படுகையான குடிமங்கலம் ஒன்றியப் பகுதிகளில், பழமையான கோவில்கள் உள்ளன. இதில், சிந்திலிப்பு பகுதியில் உள்ள வெங்கடேசபெருமாள் கோவில், இருந்த சுவடே தெரியாமல் காணாமல் போய்விட்டது. இது போன்று, கோவில்களுக்கு சொந்தமான நிலங்களும் ஆக்கிரமிப்பாளர் வசம் சென்றதுடன், கோவில்களும் பராமரிப்பில்லாமல் பாழடைந்து வருகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கண்டியம்மன் கோவில் புனரமைக்கவோ, ஆக்கிரமிப்புகளை அகற்றவோ, யாரும் முன்வராதது வேதனை அளிக்கிறது. இளையதலைமுறையினருக்கு வரலாற்றை உணர்த்தும் பழமையான கோவில்களை புனரமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். நூற்றாண்டு கடந்து, கல்வெட்டுகளுடன் காணப்படும் கோவிலை புனரமைக்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கவும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே, இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
வருத்தத்தில் மக்கள்: கண்டியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த முத்துசாமி கூறும்போது,""நூற்றாண்டு கடந்து நிற்கும் கண்டியம்மன் கோவில் திருவிழா என்றாலே, கிராமமே குதூகலமாக இருக்கும். சோமவாரப்பட்டி பகுதியில் சுற்றி வரும் கண்டியம்மன் கோவில் தேர் திருவிழாவுக்கு, அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த மக்களும் ஆர்வத்துடன் வருவர். கல்யாணம், காதுகுத்து, முகூர்த்தம் எனஅனைத்து விசேஷங்களும், விவரம் தெரிந்த நாள் முதல், இங்கு தான் நடைபெற்று வந்துள்ளது. அதன்பின், பராமரிக்க யாருமில்லாமல், கோவிலும் சிதிலமடைந்தது. இதனால், விசேஷங்கள் நடத்த யாரும் முன் வருவதில்லை. கூட்டமும் இல்லாமல், வருமானமும் குறைந்துவிட்டது. கோடிக்கணக்காக சொத்துகள் இருந்தும், பழமையான கோவிலை புதுப்பிக்க யாரும் முன்வரவில்லை. இக்கோவிலுக்கு என்று அதிகாரிகள் யாரும் நியமிக்கப்பட்டுள்ளனரா என்பது கூட தெரியவில்லை. அரசும், அதிகாரிகளும் இக்கோவில் குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. பழமையான கோவிலை புனரமைக்க, அரசு நடவடிக்கை எடுத்தால், இப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைவர், என்றார்.
ரூ.6 கோடி நிலத்தை மீட்க முயற்சி: கோவில்களுக்கு குறை:வில்லாதது கொங்கு மண்டலம். இந்த மண்டலத்தில், அவிநாசி சுற்றுவட்டார கோவில்கள் பிரபலமானவை; இவற்றில் பல கோவில்களின் சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அவிநாசி வட்டாரத்தை பொறுத்தவரை, அறநிலைத்துறை பட்டியலில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் (அவிநாசி), திருமுருகநாத சுவாமி கோவில் (திருமுருகன் பூண்டி), வெங்கடேசப்பெருமாள் கோவில் (மொண்டிபாளையம்), மாரியம்மன் கோவில் (கருவலூர்) ஆகியவற்றுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமாக, திருப்பூர் மெயின் ரோட்டில் 10 ஏக்கர் உள்ளது. "அது, தங்களுக்கு சொந்தமானது என "நஞ்சப்ப செட்டியார் அறக்கட்டளையினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அது நிலுவையில் உள்ளது. பூண்டி கோவிலுக்கு என, மேற்கண்டதை தவிர பெரிய சொத்துகள் ஏதுமில்லை. மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோவில், கருவலூர் மாரியம்மன் கோவிலுக்குள்ள சிறு சிறு நிலங்கள், கோவில் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. பாப்பாங்குளம் ஊராட்சியில், சொக்கநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள 11 ஏக்கர் நிலம் சில ஆண்டுக்கு முன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. அதை, அறநிலையத்துறையினர் மீட்டு, மீண்டும் கோவிலுக்கு சேர்த்துள்ளனர். செயல் அலுவலர் சரவணபவன் கூறுகையில், ""திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமாக, திருப்பூர் செல்லும் ரோட்டிலுள்ள 10 ஏக்கர் தவிர, வேறு நிலம் பூண்டி கோவிலுக்கு இல்லை என்றார்.
சேவூரில் ஆக்கிரமிப்பு: அவிநாசி வட்டாரத்தில், இந்து சமய அறநிலையத்துறையினரின் பட்டியலில் இடம் பெறாத பல கோவில்களுக்கு, பல ஏக்கர் நிலம் இருந்துள்ளது. அவை காலப்போக்கில், விளை நிலங்களாக மாற்றப்பட்டு, பட்டா பெறப்பட்டுள்ளது. சேவூர் கோட்டை அனுமந்தராயர் கோவிலுக்கு, ஒச்சாம்பாளையம் அரிஜன காலனி அருகில் 17 ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. அதை சிலர் பட்டாவாக மாற்றி, விற்க முயற்சித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. தற்போதைய மதிப்பில் 6 கோடி ரூபாய் மதிப்பு பெறும் அந்த நிலத்தை மீட்க, அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.