பதிவு செய்த நாள்
29
ஆக
2021
02:08
பெங்களூரு : கொரோனா பீதி, ஊரடங்குக்கு இடையிலும், பெங்களூரின் பனசங்கரி கோவிலில், ஐந்து மாதங்களில் 53.64 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான வருவாய் வசூலாகியுள்ளது. பெங்களூரின் பனசங்கரி கோவில், வரலாற்று பிரசித்தி பெற்றது.
செவ்வாய், வெள்ளி கிழமைகள், சிறப்பு நாட்கள், பண்டிகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.வெளி மாநிலம், வெளிநாடுகளின் சுற்றுலா பயணியர் வருகை தந்தனர். கொரோனா பரவ துவங்கிய பின், பனசங்கரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. கர்நாடகாவின் பணக்கார கோவில்களில் பனசங்கரியும் ஒன்றாகும். கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைத்தது.
கொரோனா முதலாவது, இரண்டாவது அலையால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மாதக்கணக்கில் கோவில் மூடப்பட்டிருந்தது. இதனால் கோவிலின் வருவாய் குறைந்தது. நடப்பாண்டு மார்ச் 29ல், பனசங்கரி கோவில்களின் உண்டியல்கள் திறக்கப்பட்டது. அப்போது 22.21 லட்சம் ரூபாய் வசூலானது. ஐந்து மாதங்களுக்கு பின், நேற்று முன் தினம் கோவில் உண்டியல் எண்ணப்பட்டது. 53.64 லட்சம் ரூபாய் ரொக்கம், 63 கிராமுக்கும் அதிகமான தங்கம், 300 கிராம் வெள்ளிப்பொருட்களை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். கன்னட ஆடி, ஷிரவண மாதங்களில், பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்ததால், கோவிலின் வருவாய் அதிகரித்ததாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். பனசங்கரி அம்மனிடம் வேண்டுதல் வைத்த பக்தர்கள், சேலைகள் காணிக்கை செலுத்துவர். மாதந்தோறும் ஆயிரக்கணக்கான சேலைகள் காணிக்கையாக வருகிறது. சில சேலைகள் அம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது.மேலும் சில சேலைகள், அம்மன் காலடியில் வைத்து பூஜித்த பின், ஏலம் மூலமாக பக்தர்களுக்கு விற்கப்படுகிறது. இம்முறை 75 சதவீதம் சலுகை விலையில் சேலைகளை, கோவில் நிர்வாகம் விற்கிறது.