பதிவு செய்த நாள்
25
ஜூன்
2012
10:06
சிவகிரி: வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாதசுவாமி (அர்த்தநாரீஸ்வரர்) கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூலை 2ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. சிவபெருமான் உமையொருபாகனாக உருவம் தரித்து மெய்யன்பர்களுக்கு அருள் வழங்கும் திருத்தலங்கள் தமிழகத்தில் இரண்டு மட்டுமே உள்ளன. அவ்விரண்டு திருத்தலங்களுள் வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாதசுவாமி திருத்தலமும் ஒன்று. இத்தலம் வரலாற்று பழமையும், புராணப்பெருமையும் மிக்கது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப்பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை அர்த்தநாரீஸ்வரருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் பால், தயிர், நெய், பன்னீர், மஞ்சள் உட்பட 18 வகையான அபிஷேகங்களும், சிறப்பு அலங்கார பூஜைகளும் நடந்தது. பின் கோயில் முன்புள்ள கொடிமரத்தில் காலை 10.30 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் வாசு., தொழிலதிபர் தங்கப்பழம் நாடார், சுமங்கலி சமுத்திரவேல் நாடார், மண்டகப்படிதாரர்கள் குருமலை சவுந்தராஜன், கொடிபட்டம் உபயதாரர் காந்திமதிநாதபிள்ளை, டவுன் பஞ்., தலைவர் ஆறுமுகம், அனைத்து சமுதாய மண்டகப்படிதாரர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு பூங்கேடயத்தில் சுவாமி அம்மையப்பன் வீதிஉலா நடந்தது. 9 மணிக்கு இன்னிசை கச்சேரி நடந்தது. இன்று (25ம் தேதி) 2ம் திருவிழா மண்டகப்படிதாரர் சார்பாகவும், 3ம் திருவிழா தேவேந்திரகுல சமுதாய சார்பிலும், 4ம் திருவிழா தேவர் சமுதாயம் சார்பிலும், 5ம் திருவிழா சீனியாத்தேவர் குடும்பத்தினர் சார்பிலும், 6ம் திருவிழா சுப்பிரமணிய முதலியார் சார்பிலும், 7ம் திருவிழா அப்பசாமி குடும்பத்தினர் சார்பிலும், 8ம் திருவிழா வாசு., ஊராட்சி ஒன்றியம் சார்பிலும், 9ம் திருவிழாவில் திருக்கோயில் சார்பில் தேரோட்டமும், 10ம் திருநாள் நாடார் உறவின்முறை சார்பிலும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழாக் குழவினர் செய்து வருகின்றனர்.