பதிவு செய்த நாள்
30
ஆக
2021
02:08
ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே லாந்தை கிராமத்தின் காட்டுப் பகுதியில் சந்தைவழி முனீஸ்வரர் கோயில் உள்ளது. அக்கோயிலின் மூலஸ்தான நுழைவு வாயிலின் இரு பக்கத்து நிலைகளிலும் கல்வெட்டுகள் உள்ளது. பொதுவாக முந்தைய காலங்களில் மன்னர்கள், செல்வந்தர்கள் கோயில் திருப்பணியோ அல்லது பொதுப்பணியோ செய்யும் போது, அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை தெரிவிக்க அவர்களின் பெயர்களையும், அவர்கள்எதற்காக செய்துள்ளார்கள்என்ற விபரத்தையும் கற்களில் எழுதி வைத்துஇருப்பார்கள். ஆனால் இக்கல்வெட்டில் ஊரே சேர்ந்து இக்கோயிலை கட்டியதாகஎழுதியுள்ளனர். இதுபோன்று பார்ப்பதுஅரிதாகும். இக்கோயில் காட்டுப் பகுதியில் இருப்பதாலும் கல்வெட்டின் மேல் வர்ணம் பூசப்பட்டு இருப்பதாலும் இக்கல்வெட்டு பற்றி வெளியே தெரியாமல் உள்ளது.
கீழக்கரை தொல்லியல் ஆய்வாளர் உ.விஜயராமு கூறியதாவது: கல்வெட்டின் விபரம்வலது பக்க கல்வெட்டில்,பிரமாத்தி வருஷம் (கி.பி.1939) கார்த்திகை மாதம் லாந்தை சி.சாமித்துரை (தேவர்) ரா.உடையார் (வேளார்), மு.விலாங்கான், வி. பூச்சி, மு.உடையான் உபயம்என்றும், இடது பக்க கல்வெட்டில் லாந்தை வி. முனியாண்டி, ரா.உடையார் (வேளார்), வி. செங்களான், மு. முனியாண்டி உபயம் என்றும் இவர்களுடன் லாந்தை ஊர் பொதுமக்களும் சேர்ந்து இக்கோயிலை கட்டியதாக தெரிவிக்கிறது.இவர்கள் ஊரின் முக்கியஸ்தர்கள் அல்லது கோயிலுக்கு உபயம் செய்தவர்கள் அல்லது திருப்பணிக் குழு உறுப்பினர்களாகவும் இருக்கலாம். மேலும் ஒரே பெயரில் பலர் இருப்பதால் பெயர்களின் முன்பு விலாசம் எல்லோருக்கும் கட்டாயமாக எழுதி உள்ளார்கள் மற்றும்ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து இக்கோயிலைகட்டியுள்ளார்கள்.
தொன்மையான கோயில்பெயர் சந்தைவழி முனிய சுவாமி என்பதால்,சந்தைக்குப் போகும் வழியில் இக்கோயில் இருந்துள்ளது என்பது புலனாகிறது. இப்பகுதியில் பெரிய நகரம் இருந்ததாகவும், சந்தை கூடியதாகவும் வரலாறுகள் இல்லை. ஆனால் இப்பகுதிகளில் ஊர் இருந்ததற்கும், சந்தை கூடியதற்கும் ஆதாரமாக நிறைய மண்பாண்ட ஓடுகள் பல ஏக்கரில் சிதறிக் கிடக்கிறது. உடைந்த முதுமக்கள்தாழிகளும் கிடைக்கின்றன. பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு நகரம் இருந்து சந்தை கூடியதற்கும், சந்தைக்கு போகும் வழியில் இருந்த இக்கோவிலை தொன்மை காலத்தில்இருந்து வணங்கியும்வந்திருக்கிறார்கள். பிற்காலத்தில் எக்காரணத்தினாலோ நகரம் மறைந்துஉள்ளது எனக் கருதமுடிகிறது. சந்தையில் ஆடுகளை விற்கச் செல்பவர்கள், தனது ஆட்டுக் கூட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுதல் செய்து வணங்கி வந்துள்ளார்கள். இன்றும் அதன் தொடர்ச்சியாக, வேண்டுதல் நிறைவேறுவதாக நம்பிக்கையுடன் வணங்கி செல்கிறார்கள்.சங்ககாலத்து வாழ்விடம் இக்கோயிலின் அருகில்உள்ள பகுதிகளை சந்தை வழித்திடல் என்று அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள். திடல் என்றால் பொதுவாக மக்கள் கூடிய இடம் அல்லது வசிப்பதற்கு ஏற்ற மேட்டு இடம் என்றே அறியப்படுகிறது. இப்பகுதிகளில் உடைந்த மண்பாண்ட ஓடுகளும் வேறு ஒரு பகுதியில் முதுமக்கள் தாழியின் உடைந்த ஓடுகளும் கிடக்கின்றன.எனவே இப்பகுதிகளில் சங்ககாலத்துக்கு முன்பிருந்தே மக்கள் பெருமளவில் வாழ்ந்துஉள்ளனர் எனலாம். இப்பகுதியில் ஆய்வுகள் செய்தால் கீழடி, கொற்கை போன்ற பகுதிகளில் மக்கள் வாழ்ந்ததற்கானஅடையாளங்கள் கிடைப்பது போல் இங்கேயும் கிடைப்பது உறுதி, என்றார்.