பதிவு செய்த நாள்
13
செப்
2021
05:09
பல்லடம்: கோவில்களில், அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என, பக்தர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஓராண்டுக்கு மேல், அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கை நடந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க, கோவில்கள், திருமண விழாக்கள், பண்டிகைகள், பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் அதிக அளவிலான பொதுமக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவ்வகையில், பல்வேறு விமர்சனங்களுக்கு இடையிலும், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு சிலைகள் வைக்க அரசு தடை விதித்தது. இச்சூழலில், பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டுக்கு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பக்தர்கள் கூறுகையில், அரசு விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக, ஓராண்டுக்கு மேல் கோவில்களில் எந்தவித விழாக்களும் கொண்டாடப்படவில்லை. தொற்று பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து, பல்வேறு தளர்வுகளுடன் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. தொற்று பரவலுக்கு இடையிலும் மதுக்கடைகள் தடையின்றி செயல்பட்டு வந்தன. ஆனால், கோவில்கள் மட்டும் திறக்கப்படவில்லை.
செப்., 17 அன்று புரட்டாசி மாதம் துவங்குகிறது. மறுநாள், புரட்டாசி சனிக்கிழமையாகும். பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அவ்வாறு, ஐந்து சனிக்கிழமைகள் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். தற்போது, தொற்று பரவல் குறைந்துள்ளதால், வழிகாட்டு நெறிமுறைகளுடன் கோவில்களை திறந்து புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு மேற்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.