பதிவு செய்த நாள்
19
செப்
2021
06:09
அனுப்பர்பாளையம்: ஹிந்து தர்ம சம்ரக்ஷண சம்மேளனக் குழு சார்பில், சமுக நலன் வேண்டி ருத்ர யாகம் மற்றும் அறவழிப் போராட்டம், கொங்கு மண்டல 51 ஆதீன குர்மார்களின் குரு வழிபாடு, அயோத்தியில் அமைய உள்ள ஸ்ரீ ராமர் ஆலயத்திற்கு வெள்ளி செங்கல் வழங்குதல், ஆகிய முப்பெரும் விழா திருப்பூர் அடுத்த பல்லகவுண்டன்பாளையம் கூனம்பட்டி ஆதீனம் ஸ்ரீ மாணிக்க வாசகர் திரு மடாலய வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு, ஸ்ரீ கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் 57 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள், தலைமை வகித்தார். விழாவில் முன்னதாக காலை ஸ்ரீ மாணிக்கவாசகர் குரு வழிபாடு, ஸ்ரீ ருத்ர யாகம் நடைபெற்றது. தொடர்ந்து, 51 மடாதிபதிகளுக்கு சீடர்களின் பாத பூஜை நிகழ்வுகள் தீபாராதனையும், இதையடுத்து, சமூக நலன் அமைய அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் தமிழக அரசின் அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தும் விதமாக அறவழி போராட்டம் துவக்க உடையும், அது குறித்த விழிப்புணர்வு மற்றும் கருத்துரையும் நடைபெற்றது. விழா முடிவில், அயோத்தியில் அமைய உள்ள ஸ்ரீ ராமர் ஆலயத்திற்கு 3 கிலோ எடை கொண்ட வெள்ளி செங்கலை ஸ்ரீ கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள் வழங்க அதனை ஆர்.எஸ்.எஸ் சூலூர் ஒன்றிய தலைவர் சம்பத்குமார், இந்து முண்ணனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மற்றும் இந்து அமைப்பினர் பெற்றுக்கொண்டனர். விழாவில், கொங்கு மண்டல இந்து அமைப்பினர், மடாதிபதிகள், சீடர்கள், மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.