காஞ்சி மஹாபெரியவர் அவ்வப்போது இசைக் கலைஞர்களை மடத்திற்கு அழைத்துப் பாடச் சொல்லிக் கேட்பதுண்டு. அப்போது இசைக்கலையின் சுவையான அம்சங்களை ரசித்து மகிழ்வார். பாடலின் பொருள், ராகம், தாளம் பற்றி நுட்பமான கேள்விகள் கேட்பார். கலைஞர்களை மனதார பாராட்டி பொன்னாடை போர்த்தி கவுரவிப்பார். இதைப் பற்றி கேள்விப்பட்டிருந்தார் புகழ் பெற்ற சிதார் இசைக்கலைஞர் பண்டிட் ரவிசங்கர். தானும் மஹாபெரியவரின் முன்னிலையில் இசைத்திறமையை வெளிப்படுத்தி ஆசி பெற விரும்பினார். இந்நிலையில் கச்சேரியில் பங்கேற்பதற்காக ஒருமுறை சென்னைக்கு வந்திருந்தார். அப்போது சென்னை திருவல்லிக்கேணி வசந்த மண்டபத்தில் மஹாபெரியவர் முகாமிட்டிருந்தார். இதைக் கேள்விப்பட்டதும் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல மகிழ்ந்தார். தான் வந்திருக்கும் நேரத்தில் மஹாபெரியவர் சென்னைக்கு வந்திருப்பதை கடவுள் அளித்த வரமாகக் கருதினார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அவர் முன்னிலையில் கலைஞர்கள் பலர் இசை நிகழ்ச்சி நடத்திய செய்தியை நாளிதழில் படித்தார். தானும் இசைக்க விரும்புவதாக தகவல் அனுப்பினார். நிகழ்ச்சி நடத்த வருமாறு பதில் கிடைத்தது. கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மஹாபெரியவரிடம் பிரசாதம் பெற்றுக் கொண்டபின், சிதாரை இசைக்கத் தொடங்கினார் ரவிசங்கர். பெரிய மகான் முன்னிலையில் இசைக்கிறோம் என்ற எண்ணமே அவரது ஆற்றலை மேம்படுத்தியது. நிகழ்ச்சியின் முடிவில், உயர்வான சங்கீதம் கேட்ட மனநிறைவு ஏற்பட்டதாகப் பாராட்டிய மஹாபெரியவர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். கச்சேரி அனுபவம் பற்றி நிருபர்கள் கேட்ட போது, ‘‘இவ்வளவு சிறப்பாக எப்போதும் நான் சிதார் வாசித்தது இல்லை. சுவாமிகளின் சான்னித்தியத்தால்தான் இது சாத்தியமானது. அவர் முன்னிலையில் இசைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம்’’ என்றார் ரவிசங்கர்.