காஞ்சி மஹாபெரியவரின் தரிசனம் பெற பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். ஒவ்வொருவராக சுவாமிகளிடம் தங்களின் குறைகளைச் சொல்ல, அவர் ஆசியளித்து பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார். வரிசையில் ஒரு பாட்டியும், அவரது பேத்தியும் நின்றிருந்தனர். சிறுமியின் தலை துணியால் மறைக்கப்பட்டிருந்தது. இருவரின் கண்களும் துயரத்தால் கலங்கியிருந்தன. அவர்களின் முறை வந்ததும் கண்ணீருடன் வணங்கினர். கனிவுடன் பார்த்த சுவாமிகள், ‘தலையில் என்னம்மா பிரச்னை’ எனக் கேட்டார். அதற்கு பாட்டி, ‘இவளது தலையில் பெரிதாக புண் வந்திருக்கிறது. எத்தனையோ வைத்தியர்களைப் பார்த்தும் குணமாக வில்லை’ என்றாள். தலை மீதிருந்த துணியை விலக்கச் சொல்லி அருள் பொங்கப் பார்த்த சுவாமிகள் தேங்காய் ஒன்றை பிரசாதமாக கொடுத்தார் ‘‘இதில் இருக்கும் இளநீரை குடிக்கக் கொடு. திருத்தணி முருகனுக்கு முடிக்காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டு, தேங்காயைத் துருவிப் பால் எடுத்து அதை தலையில் தடவி வா. விரைவில் குணம் தெரியும்’’ என்று ஆசியளித்தார். தேங்காயை பெற்றுக் கொண்ட பாட்டி நம்பிக்கையுடன் விடைபெற்றாள். தேங்காய்ப் பால் வைத்தியத்தை உடனடியாகத் தொடங்கினாள். என்ன ஆச்சரியம்! புண் ஆறி பொருக்குத் தட்ட ஆரம்பித்தது. பத்தே நாட்களில் முழுமையாக குணமடைந்தது. வைத்தியர்களால் முடியாத ஒன்று காஞ்சி மஹாபெரியவரின் அருள், பாட்டியின் நம்பிக்கை, தேங்காயின் மகத்துவம் எல்லாம் சேர்ந்து குணப்படுத்தி விட்டது, பேத்தியை அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் மடத்திற்கு புறப்பட்டாள் பாட்டி. தினமும் நுாற்றுக்கணக்கான மனிதர்களைச் சந்திக்கும் சுவாமிகள் தங்களை நினைவில் வைத்துக் கொள்ள வாய்ப்பில்லை என்றாலும் அவரிடம் நினைவுபடுத்தி மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்க வேண்டும் என்பது பாட்டியின் எண்ணம். அவர்களின் முறை வந்ததும் தழுதழுத்த குரலில் பேச முயன்றாள். ஆனால் பேச விடாமல், ‘‘என்ன... பேத்தியின் தலையில் புண் குணமாகி விட்டதா? இப்போது திருப்தி தானே... மறக்காமல் திருத்தணி முருகனுக்கு முடிகாணிக்கை செலுத்து. நீயும், உன் பேத்தியும் ேக்ஷமமா இருப்பீங்க’’ என்று ஆசி கூறி பிரசாதம் வழங்கினார். காஞ்சி மஹாபெரியவர் தங்களை மறக்காமல் இருப்பதை எண்ணி பாட்டிக்கு கண்ணீர் வந்தது. நம்பினால் நல்லதே நடக்கும் என்பது நிஜம் தானே!