தஞ்சை பெரியகோவில் தரைதளத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் செங்கல் பதிக்கும் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜன 2026 10:01
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை சார்பில், தரைதளம் புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது. மேலும், கோவில் கோபுரத்துக்கு அதிர்வு ஏற்படாதபடி தொழிலாளர்கள் உளி, சுத்தியை பயன்படுத்தி, பழைய தரைதளத்தை அகற்றி வருகின்றனர்.
உலக புகழ் பெற்ற, தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கோவிலின் உள்பிரகாரத்தில், சுமார் 35 ஆண்டுகளுக்கு முன், பதிக்கப்பட்ட தட்டையான செங்கற்கள் தேய்ந்து, மேடு பள்ளமாக இருப்பதால், ஆங்காங்கே மழைநீர் தேங்கி, பாசி படர்ந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, இந்திய தொல்லியல் துறையினர், கோவில் பிரகாரத்தில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் ஒவ்வொரு கட்டமாக செங்கல் கற்களை அகற்றிவிட்டு, அதே இடத்தில் மீண்டும் தட்டையான செங்கல் கற்களை பதித்து, கட்டமைப்பை ஏற்படுத்தி வருகி்ன்றனர். அதன்படி கடந்த 2023 – 2024ம் ஆண்டில் முதற்கட்டமாக, கோவிலின் தென்புற பகுதியில், பழைய செங்கல் கற்கள் அகற்றப்பட்டு, புதிய கற்கள் பதிக்கப்பட்டன.
தற்போது, கோவிலின் பின்புறம், கருவூர் சன்னதிக்கும், விநாயகர் சன்னதிக்கும் இடையே சுமார் 4 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் உள்ள பழைய கற்கள் அகற்றும் பணி துவங்கியுள்ளது. இந்த பழைய கற்கள் அகற்றப்பட்டவுடன், புதிய தட்டையான செங்கல் கற்கள் அமைக்கப்படவுள்ளது. இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியது: பெரியகோவிலில், மழை நீர் தேங்கும் தரைதளத்தை சீரமைக்க, 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிக்காக பிரத்யோகமான தட்டையான செங்கல் கற்கள், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவிலுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும், அதிர்வு ஏற்படாத வகையிலும், இயந்திரங்கள் இல்லாமல், உளி, சுத்தியை கொண்டு தொழிலாளர்கள், பழைய கற்களை பெயர்க்கும், பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும், நான்கு மாதங்களில், இப்பணிகள் நிறைவடையும். பிறகு, நந்தி மண்டபம் பகுதியில் உள்ள தரைதளம் சீரமைப்பு பணிகள் துவங்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தனர்.