பிறந்த நொடியிலிருந்து கடைசி மூச்சு வரை சுவாசிக்க காற்று தேவை. அதுபோல் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நமக்கு ஏதோ ஒரு தேவை இருக்கிறது. தேவைதான் மனித வாழ்வின் ஆதாரம். அந்த தேவைக்காகத்தான் வாழ்க்கையின் தேடல்களே தொடங்குகிறது. இந்த தேவைகள் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது. இது அவரவர் வளரும் சூழலைப் பொறுத்தவை. இதையே நாம் ஆசை என்கிறோம். சிலருக்கு பணத்தின் மீது ஆசை, சிலருக்கு பகட்டான வாழ்க்கையின் மீது அசை, வேறு சிலருக்கோ பதவியின் மீது ஆசை. நமக்கு தேவையான, தகுதியான ஆசையாக இருக்கும் வரையில் பிரச்னை வராது. இது அளவு மீறும்போதுதான் கவலையாக மாறுகிறது. சரி இதற்காக யாரும் ஆசைப்படாமல் இருக்க முடியுமா... என சிலர் நினைக்கலாம். யாரும் எதற்கும் ஆசைப்படலாம். ஆனால் அதற்கு அடிமையாகிவிடக்கூடாது. தேவையை குறைத்து ‘தேவையே தேவையில்லை’ என்னும் நிலையை அடையுங்கள்.